பட்டயங்களை ஊடுருவிச் செல்லும் மழை

பின்னூட்டமொன்றை இடுக

அடங்கியிருந்த கயிறுடன்
அழைத்துச் செல்லப்படும்
ஆடு
தன்னை அறுக்கக்
காத்திருப்பவனை அன்புடன்
பார்த்திருக்கிறது

அறுத்துக்கொண்ட
கயிறுடன் தேட ஆளற்று
அலையும்
ஆட்டுக்குட்டி
திரும்பித் திரும்பிப்
பார்த்துச்செல்கிறது

கத்திகளைப்
பளபளக்கச் செய்கிறது
ஊடுருவிச் செல்லும் வெயில்.

o

குற்ற உணர்ச்சியைத் தூண்டுவதன்
மூலம்தான்
அவர்கள் உங்களை
அடிமையாக்குகிறார்கள்
என்றவன் சொன்னான்

முத்தங்களை மறுதலிக்கச் செய்கிறார்கள்
குறுகி அமர்ந்து
பார்க்கச் செய்கிறார்கள்
பெயர்களை ஒளித்து
புனைப்பெயர்களை
சூடிக்க்கொள்ளச் செய்கிறார்கள்
அலைபேசியெண்களை
அழைக்காமல்
கடந்துசெல்லச் செய்கிறார்கள்
படிக்கட்டுகளைத் தாண்டாமல்
வாசலில்காத்திருக்கச் செய்கிறார்கள்

தனது
கழுத்தை
தானே அறுத்து
பாவத்தின் கடவுள் முன் பலியிட்டுக்கொள்ளச் செய்கிறார்கள்.

பிறகு அவர்கள்
உங்களுக்கு பட்டயம் வழங்குவார்கள்
பளபளக்கும் தகரப்பட்டயம்

அதை உங்கள் சந்ததிகள்
பயன்படுத்தாமல் பல ஆண்டுகள்
சந்தோசமாக வைத்திருக்கலாம்.

o

ஆறுதல் சொல்லத்தெரியாதவன்
என்றவள் சொன்னாள்

அன்னையே

சொல்கிறவனை
வேடிக்கைபார்க்கிறவனாக
வெளியிலிருந்து கையாட்டுகிறவனாக
யாரோ ஒருவனாக
அவை
கீழிறக்குகின்றன

கேட்கிறவளை
காற்றில் துழாவி
கையேந்தி இறைஞ்சுகிறவளாக
இன்னும் சிலபடிகள்
கீழிறக்கி மடியேந்தச் செய்கின்றன

தேவி

நான் இறங்குவேன்
இந்த புழுத்துளையின்
ஆழங்களின் வழியாக

நீ
அங்கேயே இருத்தல் பொருட்டு

நாம்
காமம் கொள்வோம்
ஆறுதலின் காரணங்களை மழைத்தண்ணீரில்
கப்பலென எங்கோ
விட்டுவிட்டு

தேர்க்கால் பலிகள்

பின்னூட்டமொன்றை இடுக

கெளரி,

மீண்டும் ஒரு நிழல். உனையொத்த நீள்வட்டச் சிறுமுகம் கொண்ட பெண்ணொருத்தி தனது இருசக்கரவாகனத்தில் நான் திரும்பும் சாலைச்சந்திப்பில் என் நகர்வை ஊடறுத்து வாகனம் வளைத்துக் கடந்து செல்கிறாள் இன்று. இந்த மஞ்சள் முகத்தில் கூந்தலின் கடையோரச் சிறுமுடிகள் காற்றில் வளைந்து பின் அடங்குகின்றன. விழிவிரியும் தாடிக்காரன் குறித்த குறும்புன்னகையொன்று அவளுக்கும் அரும்புகிறது. ஒளி கடந்து சென்றபின்னர்தான் உடலெங்கும் மனமெங்கும் கண்ணெங்கும் நிறைகிறது இருள். பிறகு அந்தக்கணத்தில் உறைந்திருக்கிறேன். அந்த இருளில். அந்த நிழலில்.

கூந்தல் அசைய வாகனத்தில் செல்லும் உனது சித்திரம் கூட எனது கனவுகளின் ஒன்றென்றுதான் நினைக்கிறேன். புதிய இருசக்கர வாகனம் குறித்த உனது மகிழ்வின் நாட்களிலிருந்து அந்தச் சித்திரத்தை எடுத்துக்கொண்டிருக்கிறேன். பிறகு எப்போதோ திரைப்படத்தில் ஒரு நடிகையின் சாயலில் உன்னைப்பொருத்தி இருக்கக்கூடும். பிறகு போத இரவுகளின் நிழலுருவங்களில் ஒரு நாள் நீ என் அறையின் வெளிச்சத்தை அறுத்து என்னைக் கடந்து சென்றிருக்கக்கூடும். பிறகு எப்போதைக்குமான நினைவாக அது உருவாகி நிலைத்திருக்கிறது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு யாரோ ஒரு பெண் மீண்டும் அங்கே என்னை அழைத்துச் செல்கிறாள். ஆனாலும் எத்தனை கனவுருவங்கள் எத்தனை நிழல்கள் ஒன்றின் மீது ஒன்றாக உருகி இறுகி அலையரித்த பாறையின் தீவிரத்துடன்.

நினவிலியில் ஆழத்தின் உன் முகத்தைப் பதியவைத்துப்போயிருக்கிறாய். போத இரவொன்றில் நண்பர்களிடம் சொன்னதை மீண்டும் நினைவூட்டிப்பார்க்கிறேன். இன்னதை இன்னார் இன்ன காலத்தில் இன்ன நோக்கத்தில் செய்தார்கள் என்பதான எந்த ஒரு கணிதச்சமன்பாடுகளும் மனிதர்களுக்குக் கிடையாது என்று தோன்றுகிறது. முன்னொரு இரவில் இதே நகரில் ஒரு வாணவேடிக்கைத்திருவிழா விட்டுத் திரும்பும் வழியில் என் முன்னால் சென்ற தம்பதிகள் இப்படித்தான் எனக்குள் எதோ ஒரு குமிழியை உடைத்துவிட்டுப் போனார்கள். அன்றும் குடித்திருந்தேன். அதிகளவு அல்ல. மிதமாக. ஆனால் நெஞ்செலும்பில் அழுகை தொக்கி நிற்கிறது. இத்தனைக்கும் அப்பெண் அணிந்திருந்தது ஜப்பானிய மரபு உடை. பின் பக்கம் வண்ணத்துப்பூச்சியொன்று இடுப்பை வளைத்துக் கட்டிப்பிடித்திருப்பது போன்ற அழகான வடிவம் இவர்களுடைய மரபு.

ஏன் உடைந்தேன் எனத்தெரியவில்லை. பொதுவாக நான் என் குமிழிகளைப் பத்திரப்படுத்திக்கொண்டவன். என் பனிக்கட்டிச்சுவர்கள் மிகவும் உறுதியானவை. மிகச்சில தருணங்களில், மிகவும் அந்தரங்கமான மிகவும் நம்பிக்கைக்குரிய மனிதர்களிடம் மட்டும்தான் இந்தச்சுவர்கள் நெகிழ்ந்திருக்கின்றன. மிகவும் மரியாதைக்குரியவர்களிடம் மட்டும்தான் இந்தக் குமிழிகள் உடைந்து தழுதழுத்த குரலில் பேசியிருக்கிறேன். மிகு போதையும் மிகு நம்பிக்கையும் இருக்கும் இடங்களில் மட்டுந்தான் என் கண்ணீர்பெட்டகங்களைத் திறந்திருக்கிறேன். ஆனால் அன்று அந்தப்பொது இடத்தில் உடனடியாக ஒரு மடி தேவைப்பட்டது. சாய்ந்து அழ ஒரு தோள். ஆதரவாகப் பற்றிக்கொண்டு தன் கைகளில் என் கையொன்றைப் பற்றிக்கொள்ளும் கரங்கள் தேவைப்பட்டது. மிகுந்த கூருணர்வுடன் உடைந்த கண்ணாடிச்சில்லுகளைத் தொகுத்துக்கொண்டு சிதறிவிடாமல் வீடு வந்து சேர்ந்தேன்.

இதோ ஒராண்டுகள் கடந்திருக்கிறது. அடுத்த வெயில் காலம் நடந்துகொண்டிருக்கிறது. அதே நதிக்கரையில் அதே வானவேடிக்கைகள். அலுவல் விட்டுத் திரும்பும் வழியில் குறித்த ரயில் நிலையம் கடக்கும்போது இறங்கவிரும்பும் கால்களைக் கட்டுப்படுத்திக்கொள்கிறேன். வானவேடிக்கையின் பாலங்களைக் கடக்கும்போது குதித்துவிடும் ஆசையைக் கதவுகள் தடுக்கின்றன. யோசித்துப்பார்த்தால் அன்றுதான் அந்த நதிக்கரைக்கு கடைசியாகச் சென்றதென்பது உறைக்கிறது. உன்னை நினைவூட்டும் காலங்களிலிருந்து இடங்களிலிருந்து பொருட்களிலிருந்து விலகியோடிக்கொண்டிருக்கிறேன். மேலும் புதிய படிமங்களை உருவாக்கிச் செல்கிறது நினைவுகளின் நதியலை.

இன்றைய பெண்ணின் வசீகரம் சற்றே மாறுபட்டது. உடைதல் இல்லை இதுவென உடனே தெரிந்துவிட்டது. இது ஒரு வித கொண்டாட்டம். திருவிழாவை தோளமர்ந்து பார்க்கும் குழந்தையின் குதூகலம். தலையில் பஞ்சுமிட்டாய் உரசும்போது நிமிரும் தந்தையை குனிந்து பார்த்து புன்னகைக்கும் குழந்தையின் குறும்புச்சிரிப்பு. காலம் தன் பனித்துளிகளை முகத்தில் விசிறியடிப்பதைப்போன்ற ஒரு சிறு ஆசுவாசம். பிறகு நான் தவறி வாழ்வின் நிஜங்களுக்கு வந்து விழுகிறேன். பெரு நகரத்தில் பேசுவதற்கு ஆளில்லாத பெருந்தனிமை. ஏற்றுக்கொண்ட தண்டனைகளின் பெருந்தன்மைத்தன்மை ஆடிகள் உடைந்து சுயநலங்கள் எட்டிப்பார்க்கும் தருணம். விடுமுறை நாட்களுக்குக் காத்திருக்கும் அடிமைகளின் ஆயிரம் கால் ஓட்டம். நின்று ஆசுவாசம் கொண்டு போதங்களைச் சந்தித்து தன்னிலை அழிந்து இரவுகளை அரற்றிக்கடந்து முகந்தெளிந்து எழுந்து ஓடும் பெருஞ்சுழலின் அதிமுகங்கள். முந்தைய போத இரவில் வரிசையாக அழைத்தேன். இதுவரை என்னை ஆற்றுப்படுத்த விரும்பிய அத்தனைப் பெண்களையும். எல்லாக் கதவுகளையும் தட்டிச்செல்லும் தனிமையின் கரங்கள். மூன்றரை மணி நேரம் முன்னதாக இருப்பவர்களை நள்ளிரவு கடந்து அழைத்துக்கொண்டிருக்கிறேன் என்பது உரைக்கவே இல்லை. மிகுபோதை. சிலர் திரும்ப அழைத்திருந்தார்கள். திரும்ப அழைக்காதவர்களுக்கு நன்றிகள். அவர்கள் எண்கள் நீக்கப்பட்டன. அவர்கள் இனி அழைக்கப்படமாட்டார்கள்.

உன்னை மீண்டும் அழைக்கவேண்டும் கெளரி. நீ திருப்பி அழைக்கப்போவதில்லை என்பது தடுக்கிறது. உன் எண்களை அழிக்கமுடியாது என்பது தடுக்கிறது. அழித்தாலும் உள்ளே பத்து எண்களும் அப்படியே இருக்குமென்பது தடுக்கிறது. ஆறு முறை அலைபேசி எண்களை மாற்றியிருக்கிறாய் இதுவரை. அறுபது எண்கள் அதன் வரிசையில் உள்ளே இருக்கின்றன. அழிக்க முடியாத எண்கள். அழிக்க முடியாத சொற்கள். அழிக்க முடியாத முகங்கள்.

போதங்கள் சிந்தனைகளை அறுக்கின்றன. ஏன் என்ற கேள்வியை சில நரம்புகளைப் போதங்களில் இழக்கிறேன். அந்த இழப்பு தேவையாயிருக்கிறது. நேர்மையின் தளைகளை அறுத்து நோய்மையின் ஊஞ்சல்களில் ஆடும் ஆசுவாசம் தேவையாய் இருக்கிறது. இந்நகரத்தில் மூன்றாண்டுகள். உன்நகரத்தில் ஆறரை ஆண்டுகள்.மேலும் ஆறு மாதங்கள். காலங்கள் அதிர்ந்து பறந்து விலகிச்சென்று தூரத்தில் உறைந்து நிற்கின்றன. மங்கலான ஒளியில் கண்சுருக்கி திரும்பிப்பார்த்து அதிர்ந்து போகிறேன். பிறகு தெளிவடைந்து புன்னகைக்கிறேன். மொழியை எங்கிருந்து அனுப்புவது. எங்கோ கடந்து போகிறவர்களை என்ன பேர் சொல்லி அழைப்பது.

நரம்புகளைச் சுண்டும் போதங்களை மூளைகளை மழுங்கடிக்கும் தருணங்களை உடல்தளர்ந்து அமரவைக்கும் புகைகளைத்தேடித் திரிகிறவர்களுக்கு நியாயங்கள் இல்லை. காலங்களின் பெருங்கிடங்கில் தவறவிட்ட சில தருணங்களைத் தீண்டி எடுக்கும் பெருந்துழாவலுக்கு காரணங்கள் தேவையில்லை. இறந்த காலத்தில் உறைகிறவர்களுக்கான சமாதானங்களை அன்பென்று மட்டும் கொள்ளலாம் ஆனாலும் அதன் தர்க்கங்கள் பிறருக்கானவை இல்லை. எந்தத்தருணத்திலும் திசைமாறிப்போக வாய்ப்பிருக்கும் பெரும்பாதையில் தன் தருணத்தில் நின்றுகொண்டிருக்கிறவர்களுக்குச் சொல்லப்படும் சமாதானங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லை.

முகங்களை விலகியோடும் தருணங்களை உருவாக்கிக்கொள்கிறேன். சொற்களற்று மௌனத்தில் ஆழ்ந்திருக்க விரும்புகிறேன். இசை உரத்து ஒலிக்கும் பேரறையில் கடிகாரஓசையைக் கவனித்துக் கேட்க விரும்புகிறேன். சிதறுண்ட கவனத்தை மீட்டெடுக்க வழிகளைத் தேடியலைகிறேன். மனிதர்களைக் கூர்கொள்ளுதல் ஒரு வழி. எதன் மீதும் கூர்கொள்ளாமல் ஆழ்ந்திருத்தல் இன்னொன்று. உடல் வருடும் காற்று தொலைவில் அசைக்கும் இலையின் ஓசையைக் கேட்க முயற்சிப்பது இன்னொன்று. கடலிரைச்சல்களிலிருந்து மனிதக்குரல்களைப் பிரித்தெடுக்க முயல்வது இன்னொன்று. ஆனாலும் அத்தனையும் நீயாக முகம் அணிந்திருக்கிறது. அசையும் இலையின் ஒலி என்றோ அமர்ந்திருந்த சரக்கொன்றை நிழலில் விழுந்திருந்த இலையாக இருக்கலாம். அலையோசையில் மிதக்கும் குரல் உன் குரலாக இருக்கலாம். கூர்கொள்ளும் மனிதர்களில் சில பெண்களுக்கு உன் கூந்தல் ஒதுக்கும் லாகவம் கைகூடிவருகிறாது. ஆழ்ந்திருத்தல் நீ அமர்ந்திருக்கும் சித்திரம் ஒன்றில்தான் என் கவனம் குவிந்திருக்கிறது.

இருபது மணி நேர விழிப்பின் பின்னும் நினைவு விரட்டும் ஒரு தந்திரம் இருக்கிறது. உறக்கம் இறைஞ்சும் விழிகளை எரியும்படி மடிக்கணினி திரைப்படங்களால் நிறைத்து ஆழ உறங்குமுன் பதறிவிழித்துச் சுடு நீர் ஊற்றி அலுவலுக்கு விரட்டும்போது, அலுவலின் கணங்களிலிருந்து வெளியேறும் சிறு ஆசுவாச சமூகவலைத்தள நிமிடங்களை விலக்கி ஆழ மூழ்கவைப்பதில் ஒரு சுயநலம் இருக்கிறது. கனவுகளற்ற ஓட்டம் உன்னிலிருந்து என்னைக்கொஞ்சம் தள்ளிவைக்கிறது. கனவுகள் குறித்த கதைகள் நம்பிக்கை ஊட்டுகின்றன. நம் கனவில் வருகிறவர்கள் நம்மை நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் எனும் கதையை நம்ப விரும்பவில்லை. என் முகமும் பெயரும் குரலும் வாசமும் உனக்கு மறந்திருக்கக்கூடும். தேவையற்ற நம்பிக்கைகள். தேவையற்ற கனவுகள். வெளியேறுதலின் முதற்படி கதவுகளை அடைப்பது. கதவருகே காத்திருப்பதிலிருந்து ஆயிரம் ஆயிரம் நாடகங்களின் வழி என்னை நானே கைபற்றி வெளி நடத்திச் செல்கிறேன். விலகுதலின் பாதைக்காக தேர்ச்சக்கரமென சிறுபுற்களை பிழிந்து உருளும் ஞாபகங்களுக்கு பலிவேண்டியிருக்கிறது. உடலைப் பலியாக்கும் வழக்கம் குறித்த கனவுகள் கடவுள்களாகக் காத்திருக்கின்றன. எரியும் விழிகளை உன் தேர்ச்சக்கரங்களுக்கு வைப்பேன். எரியும் உடலைச் சோர்ந்து விழும் அவயங்களைத் தேர்க்காலில் வைப்பேன். போத இரவுகளில் கனவுகளில் நடமாடும் முகங்களுக்கு என் சொற்களைப் பலிவைப்பேன். தேர் உருளட்டும் தன் பாதைகளைத் தானே உருவாக்கியபடி.

கெளரி, மனிதர்களின் ஞாபகம் அச்சமூட்டும் வானத்தின் நிரந்தரம். அது அங்கு இல்லை. ஆனாலும் அங்குதான் இருக்கிறது. அதில் உருவங்கள் இல்லை. ஆனாலும் உருவங்கள் உருவாகியிருக்கிறது. இதுவரை பலவித உருவங்களை தனக்குத் தோதான உருவங்களை அதே வானத்தில் இதுவரை பலகோடி பேர் பார்த்திருக்கிறார்கள். யாருக்கும் காட்டாத உருவங்கள். யாருக்கும் காட்டமுடியாத உருவங்கள். உருவங்களை நம்புகிறவர்கள் இருந்தார்கள். யாரையும் அழைத்து எந்த உருவத்தை வேண்டுமானாலும் வானத்தில் பார்த்ததாக சொல்லமுடிகிறது. அவர்கள் நம்புவார்கள். அதைக் காட்டமுடியாவிடினும், அவ்வுருவத்தை நிரூபிக்க முடியாவிடினும் இல்லாத வானத்தில் இல்லாத உருவங்களை நம்புகிறவர்கள் ஏற்கனவே இல்லாத உருவங்களைப் பார்த்தவர்களாக இருக்கிறார்கள். இணைகளின் நினைவு குறித்து இதே விதமாகத்தான் அறிந்திருக்கிறேன். உடையும் முன்னரே சொல்வார்த்தைகளை உடனிருப்பவர்கள் புரிந்துகொள்கிறார்கள். உணர்வுகளின் அழிவினை ஏற்கனவே அறிந்தவர்களும் அழிவதற்கு முந்தைய நிலையை ஒத்துக்கொள்கிறார்கள். நம் கண்ணீரில் பங்கெடுத்துக்கொள்கிறவர்கள் இன்னொரு காலத்தில் அதே உருவத்திற்காக அதே பாணியில் கண்ணீர்விட்டவர்களாக இருக்கிறார்கள். புதிய மனிதர்கள் புதிய முகங்கள் புதிய இளைஞர்கள் கிளம்பிவந்து மீண்டும் அந்தக்கண்ணீரை மீட்டெடுக்கிறார்கள். எழுதிவைத்தவன் ஏற்கனவே இந்த ஆழத்திலிருந்து மீண்டிருக்கக்கூடும் என்று நம்பி மேலேறும் ஏணிகளை வீசியெறிய வேண்டுகிறார்கள். பாதைகளை உருவாக்கித்தரவேண்டுமெனப் பாதைகள் உருவாகும் வழிகளைக் கற்றுத்தரவேண்டுமென வேண்டுதல்கள் வைக்கப்படுகின்றன. நான் அவர்களுக்குத் தேர்களை அறிமுகம் செய்கிறேன். அவற்றின் பலிகளை. அவற்றின் பெருஞ்சக்கரங்களை. பாதைகள் உருவாகிவிடும் என நம்பிக்கையூட்டுகிறேன். இறந்த காலங்களின் கதவுகள் பாறைகளாக மாறிவிட்டதென்பதை நினைவூட்டுகிறேன். ஒரே கதையை பல்வேறு மொழிகளில் எழுதும் இந்த நாடகம் என்பது புதிய மொழியுடையவர்களுக்கான தேர்களை அறிமுகம் செய்வதன் பொருட்டுதான் கெளரி.

பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் கடந்துபோகும் ஒருநொடிப்பெண் எதையோ கிளறிவிட்டுப்போகிறாள். ஒவ்வொருமுறை வானம் பார்க்கும்போது இதன் மறுமுனையில் நீயும் பார்த்திருப்பதாக நினைத்துக்கொள்கிறேன். அல்லது வானம் பற்றிய நினைவின்றி தரைபார்த்துச் செல்லும் ஒரு பெண்ணாக. கடற்கரையோரங்களில் மறுமுனையில் அதே விடுமுறை ஞாயிறொன்றில் நீ நிற்கக்கூடும். அல்லது உனக்கு எதிர்த்திசையின் வேறு கடல்கள் போதுமானதாய் இருக்கலாம். தேய்பிறை நிலவில் இனி வளரட்டுமென நீ வாழ்த்திக் கையுயர்த்திய காலங்களைக் கண்டுகொள்கிறேன். நீ இன்று வாழ்த்த நேரமில்லாமல் இருக்கலாம். நிலாபார்க்கவும் மொட்டைமாடி அமர்ந்திருக்கவும் தேவையில்லாமல் இருக்கலாம். இடைவிடாத அலைபேசி ஒலிக்கும் இரவுகளைக் கடந்து வெகுதூரத்தில் இருந்து திருப்பித் திருப்பி அலைபேசியை எடுத்துப் பார்த்துக்கொள்கிறேன். ஒரு வேளை நான் விலகியிருக்கும் இணைப்புச்செயலிகளில் உன் குறுஞ்செய்திகள் எனக்காகக் காத்திருக்கலாம். அல்லது முடக்கப்பட்ட எனது பழைய எண்களுக்கு நீ குறுஞ்செய்திகள் அனுப்பியிருக்கக்கூடும். அல்லது அத்தனை எண்களையும் அழித்துவிட்டிருக்கக்கூடும். காலம் நீண்டு கிடக்கிறது. எதோ ஒரு கிளையில் பிரிந்து நீ புதிய எண்களை அடைந்திருக்கக்கூடும். உறைதலின் பொருட்டு நாடகங்களை நிகழ்த்தியிருக்கும் பிறழ்வின் கணங்கள் எல்லாருக்கும் அமையாது என்றே எண்ணவேண்டியிருக்கிறது.

இறந்தகாலம் ஒரு ஆபத்தான இடம் என்றாள் ஒரு நாயகி சமீபத்தில் பார்த்த திரைப்படமொன்றில். அறிபுனை திரைப்படம். குறிப்பாக நேரச்சுழல். நேரச்சுழல் திரைப்படங்களின் மீதான ஆர்வம் எங்கிருந்து வந்திருக்கும் என எந்தச் சந்தேகமும் இல்லை. அவை நம்பிக்கையை ஊட்டுகின்றன. இறந்தகாலத்தவறுகளை திருத்தும் மனிதர்கள், எதிர்காலவழிகளை உருவாக்கும் மனிதர்கள். அறிவியல் சாத்தியங்களுக்கு நடுவே தனிப்பட்ட மனிதனின் குறைகளை மறக்கச்செய்யும் சிறு கால விஞ்ஞானங்கள். எல்லாவற்றின் முடிவும் ஒன்றேயாக இருக்கிறது. காலம் எத்தனை சுழல்மூலங்களைக் கொண்டாலும் அழியாமல் மாறாமல் இருக்கிறது. முடிவுகள் சோர்வுறச் செய்பவை. தொடக்கங்கள் நம்பிக்கையை ஊட்டுபவை. நமது திரைப்படங்கள் முதலில் தோல்விகளைத் தந்து இறுதியில் வெற்றியைத் தருகின்றன. இறுதியில் வெற்றியில்லை என்னும் நிஜத்தை முகத்திலறைய அறிபுனைகளைத் தேடி ஓடுகிறேன். அவற்றின் நாயகர்கள் திருத்திவெற்றிபெரும் சிறு சுழல் நிமிடங்கள் உடலை இலகுவாகி உறக்கங்களைப் பரிசளிக்கிறது. நிகர்வாழ்வின் கணங்களில் நம்பிக்கையும் உண்மையும் ஒருசேரத்தருவது இதன் வழியாக ஏற்றுக்கொள்கிறேன்.

மேடையின் கூற்றுக்கலைஞனின் விழிப்புணர்வை வந்தடைக்கிறேன் என்று தோன்றுகிறது கெளரி. தன் நாடகம் என்றும் தன் அரிதாரம் என்றுமான தன்னுணர்வு. தன் வேடத்தின் மீதான தனக்கான பற்று. அரிதாரம் என அறிந்திருக்கிறவர்களின் நடுவே மன்னனாகவே மாறவேண்டியிருக்கும் கூத்து. நடிப்பவனும் பார்ப்பவனும் அரசனைக் கோமாளியென்று அறிந்திருக்கிறார்கள். அந்தக் கோமாளித்தனத்தை அவர்களும் எதிர்பார்க்கிறார்கள். அந்தக்கோமாளித்தனத்தினை தானும் நடித்திருக்கிறான் மேடையிருப்பவன். இந்தச்சுழல் அணையாப்பெரு நெருப்பென நீண்டு செல்கிறது பாதைகள் எங்கும். தேர்செல்லும் பாதைகள். பலி கொள்ளும் பாதைகள். அழித்து முன்னேறி உருவாகி வரும் தேர்வீதிகள்.

எனக்கும் யாருக்காவது ஆறுதல் சொல்லவேண்டும் போலிருக்கிறது இன்று. எனக்குச் சொல்லப்பட்ட கதைகளை நானும் யாருக்காவது சொல்லவேண்டியிருக்கிறது. எனக்குச் அளிக்கப்பட்ட அன்பினை யாருக்காவது கையளிக்க வேண்டியிருக்கிறது. எனக்கு அளிக்கப்பட்ட கனவினை யாருக்காவது மடைமாற்றிவிட வேண்டியிருக்கிறது. இந்தப்பெருஞ்சங்கிலியின் எனது கண்ணியை எங்காவது இணைத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. முந்தைய கண்ணிகளை அறுத்துவிடாமல். முந்தைய சத்தியங்களை சொற்களை முறித்துவிடாமல் இதைத் தொடரச் செய்யவேண்டியிருக்கிறது. மீண்டும் மரணத்தின் சொற்களை பாதையில் காணும்போது என் வேகங்கள் தொடரோட்டங்கள் தடைபடுகின்றன. நின்று பாதையைச் சீர்செய்து பின் செல்லவேண்டியிருக்கிறது. தேர்பாதையில் கீழ்கிடப்பவற்றை பலிகொள்ளும் சக்கரங்கள் கொஞ்சம் மேலெழுந்தவற்றைக் கண்டு தயங்கி நிற்கின்றன. ஆணிவேர் பாய்ந்த பெருமரங்களில் இணைவேர்கள் தேர்களை நிலையழியச் செய்து அசைக்கின்றன. பாதைகளைச் சீர்செய்வதன் பொருட்டு அன்பின் சிறு நீர்த்துளிகளை எங்காவது தெளித்து வேர்களை மண்ணுக்குத் திருப்பி அனுப்பவேண்டியிருக்கிறது. மேலெழுந்த பெருஞ்செடிகளை மண்சிதறாமல் காவியெடுத்து தேர்ப்பாதை விட்டு விலக்கிவைக்கவேண்டியிருக்கிறது. நாடகங்களின் பெருங்கதையாடலின் நடுவே தனியே நிகழ்கின்றன சிறு கதைகள். சிறு பாத்திரங்கள். சிறு வேண்டுதல்கள். சிறு தற்கொலைகள்.

நீங்கா அன்புடன்
நந்து

காயங்களை எண்ணுகிறவர்களின் கதை

பின்னூட்டமொன்றை இடுக

அலைந்த கணங்களின் வழியே
கண்ட நகரங்கள் தீப்பற்றியெரியும்
கனவிற்கு பிறகு திடுக்கிட்டு எழும் ஒருவன்
தன் நள்ளிரவு சிகரெட்டைப் பற்றவைத்து
எரியாத நகரத்தை
வெறித்துப்பார்த்தபடி சாலையோர
மரப்பெஞ்சில் அமர்ந்திருக்கிறான்.

அங்கேயும் சிலர் வருகிறார்கள்
தங்கள் கடிதங்களை
வாசித்துத் தரும்படி
தங்கள் கொலைகளை
மன்னிக்கும்படி
தங்கள் முத்தங்களை ஏற்றுக்கொள்ளும்படி

நியாயத்தீர்ப்பின் நாள்
நெருங்கிக்கொண்டிருக்கிறது
என்று சொல்லி
எல்லாரையும் திருப்பி அனுப்பியபிறகு

அவன்
தனது அடுத்த சிகரெட்டைப் பற்றவைக்கிறான்

நியாயத்தீர்ப்பின்
சிகரெட்டுகளுக்கு வந்தனம்.

o

காதல்கடிதங்கள் எழுதப்பட்ட
எண்ணிக்கையை விட

இந்த நகரத்தில்

தற்கொலை கடிதங்களின்
எண்ணிக்கைகள்
அதிகம்

முத்தங்களை விட
இறுதி கையசைப்புகள்
அதிகம

மன்னிப்புகளைவிட
கொலைகள் அதிகம்

பறவைகளைவிட வேட்டைக்காரர்கள்
கைகுலுக்கல்களைவிட குற்றச்சாட்டுகள்
சாலைகளை விட தடுப்புகள்
மேலும் மேலும் மேலும் மேலும் மேலும்

அடுத்தமுறை
எண்ணிப்பாருங்கள்

நீங்கள் அன்பைச் சொன்னவர்கள் எண்ணிக்கையை
விட
ஆறுதல் சொன்னவர்கள் எண்ணிக்கைதானே
அதிகம்?

o

முதலில் அவர்கள்
தங்கள்
மரக்கதவுகளை மெல்ல அடைப்பார்கள்
பிறகு
கண்ணாடிக்கதவுகளை அறைந்து
அடைப்பார்கள்

முதலில் அவர்கள்
புன்னகைத்தபடி திரும்பிச்சென்று
தொலைவில் தன் கண்ணீரைச்
துடைத்துக்கொள்வார்கள்
பிறகு
அறுத்தெரியும் சொற்களை முதல் கைகுலுக்கலில்
புன்னகைத்தபடி சொல்வார்கள்

முதலில் அவர்கள் தன் உடைந்த புண்ணை
வெட்கம் கொண்டு மறைத்துக்கொள்வார்கள்
பிறகு
சூழல் பற்றி கவலையின்றி
தன் காயங்களை அறுத்து
குருதி துடைத்துக் கட்டுப்போட்டுக்கொள்வார்கள்

முதலில் அவர்கள்
காயம் கொள்கிறவர்களாய் இருந்தார்கள்

பிறகு
காயப்படுத்துகிறவர்களாக.

திருவாளர் நந்து அவர்கள்..

பின்னூட்டமொன்றை இடுக

செல்வி.ஆர் நம் குழந்தைகள்
அன்பை அறிந்திருக்க வேண்டும்
நந்து என்றாள்.

செல்வி.கே-வுக்கு பணமதிப்பறிந்த
குழந்தைகள் மீது விருப்பம்.

செல்வி.யூவிற்கு எத்தனை பேர் தன்னைச் சுற்றி
வருகிறார்கள்
என்பதை உலகிற்கு அறிவிக்க
வேண்டுமாயிருந்தது.

செல்வி.ஏ, ஒவ்வொரு காதலனும்
ஒரே முறை
காமத்தை நிறைவு செய்து விலகிக்கொள்ள
விரும்பினாள்.

செல்வி ஏ முதல் இசட் வரை
கனவுகள் வைத்திருந்தார்கள்

நாளைக்கான கனவுகள்
நாற்பது வருடங்களுக்கான கனவுகள்
தலைமுறைகளுக்கான கனவுகள்.

திரு.நந்து
அறிவற்றவர்.
கனவுகள் அற்றவர்.
நாளை அற்றவர்.
இன்று காதலிக்கலாம் என்றார்.

திருமதி ஏ முதல் இசட் வரையிலானவருக்கு
திரு. நந்து அவர்கள்

இன்று
பெருநாள் தினம்

தனது சமையல் பாண்டித்தியத்தின்படி
பிரியாணி செய்வது எப்படி என்பதை
மட்டும்
முப்பத்தி இரண்டாவது முறையாக
மின்னஞ்சலில் பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறார்

முதலில் அடுப்பைப் பற்ற வைக்கவும்…..

o

செல்வி.ஆர்க்கு
பல வருடங்களாக
பல்லாயிரக்கணக்கான சந்தேகங்கள்.

அவர்தம் தொழில் குறித்த கேள்விகளை
திரு.நந்து அவர்கள் தீர்த்து வைத்தார்

கரகோசங்களை எழுப்புவோம்.

அவர்தம் வாழ்க்கை குறித்த சந்தேகங்களை
திரு.நந்து அவர்கள் தீர்த்துவைத்தார்

கரகோசங்களை எழுப்புவோம்

நண்பர் எக்ஸ் குறித்த சந்தேகங்களை
திரு.நந்து அவர்கள் தீர்த்து வைத்தார்

கரகோசங்களை எழுப்புவோம்

திருமதி.எக்ஸ் அவர்கள்,
மேலும் முன்னாள் செல்வி ஆர் அவர்கள்,
பொது நண்பர்
திரு. நந்து அவர்களுக்கு
சில சொற்களை சொல்ல
விரும்புகிறார்கள்

அவர்களைப் பாராட்டி சில சொற்களை…….

கரகோசங்களை எழுப்புவோம்.

o

செல்வி ஏ முதல் இசட் வரை

இன்று
(மன்னிக்க முன்னாள் செல்வி இடிசி இடிசி)
நண்பர்
திருவாளர் நந்து அவர்களை
அழைத்து

பதினாறு நாட்களுக்கும் மேலாக இணையத்திற்கு வரவில்லை
என நினைவூடடினார்கள்.

மேலும் அவர்கள் பேசும்போது
நீ நல்ல நண்பன் என்பதை பலமுறை
அடிக்கோடிட்டார்கள்
(நந்து ஏற்கனவே அறிந்திருந்தார்.
யாராவது வந்து அறிவுரை சொன்னால் குழம்பிவிடுவார்)

திருவாளர் நந்து அவர்கள்
வழக்கம்போல
எதையும் மறைக்காமல் உளறிக்கொட்டினார்.

இன்னாள் திருமதிகள் புன்னகைத்தனர்.
நண்பர் நந்து கணித்திருந்தார்

இது நிகழுமென.

நிகழ்ந்தபிறகு திருவாளர் நந்துவிற்கு
என்ன செய்வதென தெரியவில்லை.

அழத்தொடங்கினார்.

நண்பர்காள், தயவுசெய்து நம் நண்பனை
தொடாதீர்கள்.
குழப்பாதீர்கள்.
அழைக்காதீர்கள்.

ஓட்காவிற்கு எழுதின சுவிசேஷம்

பின்னூட்டமொன்றை இடுக

பிதாவானவர் திராட்சை ரசங்களை
உண்டுபண்ணி
பகிர்ந்துண்ணும்படி
உத்தரவிட்டார்

பிதாவானவர் மாமிசங்களை
தோலுடையவையாகப் படைத்து
கெட்டுப்போவதிலிருந்து
காத்தார்

பிதாவானவர் தன் குறிப்புகளை
பரப்பும்பொருட்டு
குமாரனை
அனுப்பி வைத்தார்

குமாரனைக் கொன்றவர்கள்
பிதாவினை
விற்கும் குத்தகையை எடுத்துக்கொண்டு

மாமிசங்களை திராட்சை ரசங்களை
பாவமென
உண்டுபண்ணினார்கள்

குமாரனை நம்புகிறவர்கள்
பிதாவை மறுதலிக்கத் தொடங்கினார்கள்.

o

ஓட்கா தானியங்களின் சாறு.
பியர் வெறும்
பார்லித்தண்ணி
ஒயின் இன்னும் சைவம்.
திராட்சைகளின் சாறு கடவுள்கள் பரிந்துரைத்தது.

இந்த தேசத்தில்
சோச்சுகள்
கிடைக்கின்றன.
உருளைக்கிழங்குகளின் சோச்சு
அரிசி சோச்சுவைவிட சுவையானது

குடிக்க வந்த நந்து-சானும்
பரிமாற வேண்டிய ஷிண்டோ-மாப்ளையும்
இடங்களை மாற்றிக்கொண்டு
எல்லாரையும் குழப்பிவிடுமளவு
சுவையானது

போதங்கள் மொழியற்றது
மாப்ள

மதங்கள் சுவையற்றது
நந்துசான்

குடி ஒரு தேவ ஒளி
உலகத்தீரே.

o

முப்பதாவது வயதில்
குமாரன் மீது தேவன்
ஒளியாக இறங்கினார்

எனது ஹையர் செகண்டரி ஸ்கூலில்
புதிதாக கட்டிய சேப்பலில்
(பதினைந்து வருடம் முன்பு நான்
படிக்கும்போது புதியது)
சுவரில் ஓவியமாக
பிதா குமாரன் மீது
இன்றும் இறங்கிக்கொண்டிருக்கிறார்.

பிதாவுக்கும் குமாரனுக்கும் இடையில்
ஒளி
புறாவாக மாறியிருக்கிறது.

இருப்பத்தி இரண்டாம் வயதில்
நந்து தன் முதல் போதத்தின்
இரவை
மலைத்தலத்தின் காட்டு பங்களாவில்
அடைந்தான்.

பிறகு குமாரன் எல்லாரிடமும் பிதாவானவரை வெளிப்படுத்தி
தனியாக வெளிதேசத்தில் வந்து
தெருவில் விழுந்து கிடந்தார்

பிறகு நந்து எவரிடமும்
எதையும்
வெளிப்படுத்த முடியாமல்
சிலுவையில் அறையப்பட்டான்.

நிழற்குருதி

பின்னூட்டமொன்றை இடுக

சனியிரவுகளில்

யானைகள்
வழிதவறி கூடாரத்திற்குள்
நுழைந்துவிடுகின்றன

கொல்ல நினைத்தவர்கள்
இறந்துவிடுவது
எதிர்பாராமல்
நிகழ்ந்துவிடுகிறது

சனியிரவுகளில்

ஊரின் அத்தனை குழந்தைகளும்
குறிப்பாக நமது
சுற்றுவட்டாரங்களில்
இருப்பழிந்து நள்ளிரவுகளில்
அழுகின்றன

தெருநாய்கள் அற்ற
தேசத்தில்

சனியிரவு
நீண்டு கிடக்கிறது

ஆதூர மரணத்தின்
அழுகைக்கான காரணங்களுடன்.

o

ஒரு கொடுங்கனவு

எதிர்பாராமல் இறந்துவிட்டவள்

இந்தமுறை
தெளிவாக
எனது சொல்படி
எடுத்த முடிவின் படி
இறந்துபோகிறாள்

கடைசியாக ஒருமுறை
முகம் பார்த்து
என் மரணத்திற்கு
நீதான் காரணம்
என்று
தீர்க்கமாகச் சொல்லிவிட்டு

இதற்குப்பிறகு எங்கே உறங்குவது
இதற்காகத்தான் இத்தனை உறக்கமுமா?

o

ஒரு மழையிரவில் முடிவெடுத்து
சொல்லற்ற போதத்தில்
உறைந்திருக்கும்போது

கண்ணிகளை அறுத்துக்கொண்டு
ஏகாந்தத்தின்
கடைசிதுளி குருதியை பருகியிருக்கும்போது

அத்தனை
வாய்ப்புகளையும் தவிர்த்துவிட்டு
மெளனத்தை சூடிக்கொள்ளும்போது

நிழல்
விழுகிறது

கோபுரத்தை மறைக்கும் சொற்களின்
நிழல்

o

இங்கே பிசாசுகள் கிடைக்கும்

பின்னூட்டமொன்றை இடுக

பிசாசே என்றொரு குறுஞ்செய்தி

அழிப்பதற்கு முன்னால்
இன்னொரு முறை
பார்த்துக்கொள்கிறேன்

என் மடி பிசாசே
என்றவள் சொன்னாள்

தற்கொலை இரவே யாருமின்றி இருக்கிறேன்
என்றெழுதியிருக்கிறேன் அன்றுதான்

பேரமைதியின் காலங்கள் கடந்து
மீண்டும் புதியவர்களாக
மாறியிருக்கும் நாளில்

குறுஞ்செய்தியின் ஒலி
மீண்டும்
ஒருமுறை அதிர்கிறது
கடைசியாக

o

பிசாசு பீடித்தவனை
அவளிடத்து கொண்டு வந்து
சொஸ்தமாக்குங்கள் மாதாவே என்றார்கள்

அன்று அவனை
அவள் அழைத்துச் சென்று
சிறிது நேரம் சிரிக்கவைத்து
திருப்பி அனுப்பினாள்

அவன் திரும்பிச்சென்று
அதே சிரிப்பை
பலமுறை செய்ய முயற்சித்து
தோற்றுப்போய்
அவளிடத்தே வருவதற்கான பாதையைத் தேடிச்சென்று
தொலைந்து போனான்

அவனைப் பார்த்தவர்கள்
அவளிடத்தே அனுப்பி வையுங்கள்
என்று

தேவன்
தன் தொடர்புகளின் வழியாக
நாளிதழ்களில் விளம்பரம் கொடுக்கப்பணித்தார்

அங்கேதான்
மூன்றாவது பக்கம் பத்தாவது பகுதி.

o

உம் உடுக்கையொலி
அதிரும் பெருங்காடு பிசாசே

உம் கால்பாவா நிலங்களில்
விழுதுகளுடன் வளர் மரம் பிசாசே

உம் ஞாபங்களில் நிலம் மிதக்கும்
பெருங்கடல்கள் பிசாசே

உம் கொலைகளில் காத்திருக்கும்
கழுகுப்பார்வை பிசாசே

உம் தற்கொலைகளின்
எழுதப்படாத இறுதிக்கடிதம்
பிசாசே.

Older Entries

%d bloggers like this: