44 கவிதைகள். மொத்தம் 62 பக்கங்கள். இதைப்படிக்க ஏன் ஒருவாரம் எடுத்துக் கொண்டேன் எனயோசிக்கிறேன். மொழி. கட்டமைப்பு. எஸ்.ரா (துயில் வெளியீட்டுக்கு முந்தய வாசகர்களுடனான சகஜ உரையாடலில்) சொன்னதுபோல கவிதை என வரிக்குக்கீழ் வரியில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் நமக்கான கற்பிதங்களுடன் அர்த்தங்களைத் தேடுகிறோம். நர்சிமின் கவிதை மொழி மொத்தமாய்க் கடப்பதில் எனக்கு புது அனுபவம் என்பதாய் கொஞ்சம் அதிகமாக நேரம் எடுத்துக்கொண்டேன். பின்னட்டைக்குறிப்பு ததும்புதல்களும் தவிப்புகளும் எனச் சொல்கிறது.

ஒரு கவிதைப் புத்தகம் குறித்த ஒரு கட்டுரையில் நான் எழுத விரும்புவது அல்லது எழுதுவது கவிதையை எந்த விதத்திலும் தரம் பிரிக்கும் செயலில்லை. முழுக்க முழுக்க எனது அறிவிற்கு புரிதலுக்கு எட்டியவரை எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே. பரிந்துரையோ அறிவுரையோ அல்ல.

தீக்கடல் தலைப்பைப்பற்றிக் கேள்விப்பட்டதுமே சாருவின் கவிதையில் வந்த ”பற்றி எரிந்து கொண்டிருக்கிறது கடல்” வரி மட்டுமே நினைவுக்கு வந்தது. தண்மையும் வெம்மையும் தொட்டுக்கொண்டு ஒன்றை ஒன்று கலக்காமலும் பிரியாமலும் ஒற்றை நேர்க்கோட்டில்  நிற்கும் ஒரு காட்சிப்பின்புலத்தை எனக்கு நினைவூட்டியது. தேகம் நாவல் பற்றிய பார்வையில் பற்றி எரியும் கடல் என்பதைத்தான் தலைப்பாய் வைத்திருந்தேன். அதே வரி இங்கேயும் தலைப்புக்கவிதையில் வருகிறது.

முதலில் கொண்டாட விரும்பும் சில வரிகளைச் சொல்லிவிடலாம்.

‘மேலே மேலே
இங்கிருந்து பார்த்தால் நான்
அடிபட்ட சாலையில்
இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது
குருதிக்குழம்பு
சிறு புள்ளியாய்’

ஒரு பறவையின் பார்வையில் இந்த இடம் எப்படி அமைகிறது. ஒரு அடிபட்ட குழந்தையின் பார்வையில். தனிமைப்படுத்தப்பட்ட கிழவனின் பார்வையில். குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு நிரபராதியின் பார்வையில். உணர்ச்சிவசத்தில் தவறிழைத்த இளைஞனின் பார்வையில். பார்வைகள் மாறுகையிலும் இருப்பது ஒரே வானம். ஒரே குருதி. ஒரே வலி. அருமை நர்சிம்.

’ நதி தன்னுள் நனைந்த
கால்களின் தடங்களை
சேகரித்து வைத்திருப்பதில்லை’

ஒரு புது இலக்கிய கவிதை புத்தகங்களின் வாசகனாக இது போன்ற வரிகள் கோப்பை குளிர் நீரை ஊற்றுவது போல் அத்தனை ஈர்த்துவிடுகின்றன.

ஒரு வேப்பமரம் இரு முருங்கை
என இருந்த இடத்தைச் சுத்தம் செய்து
வீடு கட்டிவிட்டார்கள்
அவ்வீட்டு
டிஷ் ஆண்டெனா தவிர
வேறெங்கும் அடைவதில்லை
அவை

கடைசி வார்த்தை ’அவை’யை மிகவும் ரசித்தேன். எவையெனச் சொலாமல் விட்ட அந்த புதிரை. எதற்காக எனக் கேட்கத்தூண்டும் அந்த முடிச்சை. பறவை என வைத்துக்கொண்டால் பழமற்ற மரத்தில் காத்திருக்கும் அவை எங்கு சென்று இரை கொள்ளும். விரிந்து கொண்டே போகிறது கேள்விகள் கதைகள். இது கவிதை நர்சிம்.!

மரத்தின் நிழலில் நின்று மரத்தை வெட்டிக்கொண்டிருக்கிறேன்
………………………..
………………………..
………………………..
விழப்போவது தெரியாமல் என்னைப்பார்த்துக்கொண்டிருக்கிறது
கிளைமீது தலை சாய்த்த பறவையொன்று.

எத்தனை துரோகத்தை தெரிந்தே செய்திருப்போம்? எத்தனை வலிகளை கைமாற்றி கொடுத்திருப்போம். இதில் ரொம்ப ரசித்த இடம் ’தலை சாய்த்த பறவையொன்று’. ஒரு பேச்சுக்கு நினைத்துப்பாருங்கள். அலுவலகச் சூழலில் தெரிந்தே ஒருவனுக்கு தீங்கு செய்கிறீர்கள். அவனைப்பற்றி எதோ கோள் மூட்டும்போது அவன் தலை சாய்த்து உங்களைப்பார்த்துக் கொண்டிருந்தால், உங்களின் பதில் என்ன? துரோகம் ரத்தம் வர அறுக்கப்பட்டிருக்கிறது இந்த வரிகளில். தலைப்பு தொல்நிகழ். வியந்து கொண்டிருக்கிறேன் நர்சிம் இப்படி ஒரு தலைப்பிற்கு.

சரி.. மாற்றுக்கருத்துக்களே இல்லையா? எல்லாமே அருமையா ? குறைகள் இல்லாமல் ஒரு நிறை சாத்தியமா. எனக்குப் பிடிபடாத சில இடங்களைச் சொல்லலாம். நர்சிமுடன் நெருங்கிய பழக்கம் இல்லாததின் கூடுதல் பலன் குறைகளை ஒரு வாசகனாக மட்டுமே பேசலாம்.

முதலில் உரையில் தொடங்கி கவிதைக்கு வரும் எல்லாரும் சந்திக்கும் பிரச்சினை என நினைக்கிறேன். தேவையற்ற நீளம். திகத் தகவல்கள். விரிவான காட்சிகள். கவிதைக்கு இதெல்லாம் எதற்கு? குறுக்குவெட்டிப்போடுங்கள். வாசகன் பிரித்தறிவான் என்ன வாசலை அவன் தேரப்போகிறான் என. எடுத்துக்காட்டு மேற்சொன்ன அதே தொல்நிகழ் கவிதை. மூன்று வரிகள் வெற்றுப்புள்ளிகள் வைத்திருக்கிறேன். அந்த இடத்தில் 7 வரிகள் வரிகிறது. இந்த மூன்று வரியில் முழுவீரியத்துடன் வெளிப்படும் கவிதை தேவையற்ற வரிகளில் நமத்துப்போவதாய் தோன்றியது. 44 கவிதைகளில் சுமார் 30 சிறந்த கவிதைகளை எடுத்துப்பேசலாம். அதில் 25ல் இந்த வெட்டி நீளம். வெட்டிவிடுவது குழந்தையை ஊனம் செய்வதாய் நினைக்காதீர்கள். தேவையற்ற வரிகள் கவிதைக்குழந்தையின் உறுப்புகள் அல்ல. நகம். மயிர். வெட்டிவிடுங்கள் குழந்தையின் அழகு மிளிரும்.

தொகுப்பின் ஆகப்பிடிக்காதகவிதைகள் ”கொல்” & சர்வம் . மொழி விளையாட்டு கூரற்ற கத்தி, அதைவைத்து கயிறருக்க கொஞ்சம் நாட்கள் எடுத்துக்கொள்ளுங்கள். அவசரம் வேண்டாம்.

சின்ன சந்தேகம், தீக்கடல் கவிதையில் இருக்கும் அவள்தானோ/கால்கள் நான் தானோ/ முதுகு வரிகள் புரூப்ரீடிங்க் தவறுகளோ எனத் தோன்றியது.

”தோளும் காலும் பற்றிக் கடலிறங்கும் நான் தானோ முதுகு
உடலெங்கும் தீயின் சூடு”

என்பது

”தோளும் காலும் பற்றிக் கடலிறங்கும்
உடலெங்கும் தீயின் சூடு”

என வந்திருக்கவேண்டியதோ?

மொத்ததில் தொகுப்பைப்பற்றி தொகுப்பிலிருந்த கவிதையை வைத்தே சொல்லலாம்

வண்ணத்துப்பூச்சியின்
இறகைத்
தொட்டுப்பார்த்தேன்
ஒட்டிக்கொண்டது
மூன்றாவது இருக்கையில்
த்ன்னந்தனியாய்
அமர்ந்திருப்பவள்
அழுதழித்த மை போல.

இதெல்லாம் பேசுறதுக்கு உனக்கு என்னடா தகுதி திறமை இருக்குன்னு கேட்குறீங்களா? ஒரு படைப்ப பத்தி சக எழுத்தாளனவிட ஒரு வாசகன் பேசுறதுதான்ங்க் சரியா இருக்கும்.

நர்சிம் தளத்தில் இந்த புத்தக வெளியீட்டுவிழா குறித்த புகைப்பட பதிவில் ஒரு புகைப்படத்தில் நானும் இருக்கிறேன். முடிந்தால் கண்டுபிடியுங்கள்