எவர் வைத்ததெனத் தெரியாத
ரோஜாச் செடியொன்றை
வைத்திருந்தேன்

என்னாளும் பிரியாத ஒரு செடியெனத் தோன்றியபோது
இலைகளைக் கிள்ளி விளையாடிக்கொண்டிருந்தேன்

பிடிமண்ணையும் உதறி
பிடுங்கப்பட்டிருந்ததை
எவர் செய்ததெனத் தெரியாது

ரோஜாவின் வெறுமையைக் காப்பாற்ற
அதே இடத்தில் கள்ளிச்செடி
வளர்க்கிறேன் இப்போது

புகைகுடித்து வளரும் கள்ளிச்செடி
வேர்களை நீட்டிக் கொல்வது
சுகமாய் இருக்கிறது

o

கள்ளிச்செடி வளர்ப்பவனிடம்
நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது

அவனிடம்
ஒரு வெற்றிடம் இருக்கிறது என்பதை
வேறெந்தச் செடி மீதும் ஆர்வமில்லை என்பதை
கவனத்தை இறைஞ்சுகிறான் என்பதை
மரணத்தை விரும்புகிறான் என்பதை
பிரிவுகள் ரத்தம் படிகிறது என்பதை
முக்கியமாய் அவனிடம்
நீங்கள் கவனிக்க வேண்டியது

கள்ளிச்செடி பற்றி
அவன் ஒருபோதும்
கவலை கொள்வதில்லை என்பதை.

o

இதை அவர்கள்
ஏற்றுக்கொள்வார்களா
எனபதைப்பற்றி எனக்கு கவலையில்லை

இனி திரும்ப்பச் சந்திக்க
விரும்பாத
முகங்களின் அறிவுரைகளை
தூக்கிக் சுமப்பதில் விருப்பமில்லை

நீங்கள் உள்ளே வரமுடியாத
ஒரு வேலியாக
இருந்துவிட்டுப் போகட்டும்
இந்த கள்ளிச்செடிகள்

o
தேர்ந்த தோட்டக்காரனின்
கைவண்ணத்தில்
அடைந்திருக்கும்
கள்ளிச்செடிகள்
மரணங்களுக்கு நடுவில்
என்னைப்பாதுகாக்கும் நித்யகண்டமாய்.

oOo