நிலாரசிகன். தொழில் நுட்பத்துறையில் இவருக்கிருக்கும் புகழ் பொறாமைகொள்ளச் செய்வது (இன்னொருவர் அருட்பெருங்கோ) எனது கவிதை ஆனந்தவிகடனில் வந்ததைப்பகிர்ந்தபோது அதிகம் எதிர்கொண்ட கேள்வி ”இன்னொரு நிலாரசிகன் ஆகிவிடுவீர்களோ?” தனிப்பட்ட முறையில் ஒரு அங்கீகாரமாகவே இதை கருதுகிறேன். நல்ல உழைப்பு நிலா.

முதல்முறை 2009ல் சாரு புத்தக வெளியீட்டுவிழாவில் சந்தித்தேன். 2010ல் நிலாரசிகனின் ‘வெயில் தின்ற மழை’ வெளியீட்டுவிழாவில். இடைப்பட்ட காலங்களில் க்டந்துவந்த பாதையை மீள்பதிப்பு செய்கிறது வெயில் தின்ற மழை.

வெயில் தின்ற மழை ஒரு தனி உலகம். அங்கு முழுமையாக ஒரு இழப்பு படிந்திருக்கிறது. மென்சோகப்பாடல் ஒலிக்கும் ஒரு மழைப்பின்னிரவுதான் மொத்த தொகுப்பும். இரவும் மழையும் கண்ணீரும் திரும்பத்திரும்ப வந்து கொண்டே இருக்கிறது. இந்த உலகத்தில் புன்னகைப்பதற்கென்று எதுவுமில்லை. மனப்பாரங்களை அதிலிருந்து மீழும் வாதையினை பின்னப்பட்ட சொற்களால் பேசுகிறது வெயில் தின்ற மழை. சமர்ப்பணத்தில் கூட ஒரு பாரத்தை அழுத்தி தொகுப்பிற்கு தயார் செய்துவிடுகிறான் கவிஞன்.

மொத்தக் கவிதைகளிலும் கவனித்த ஒரு முக்கிய விஷயம், இதில் தன்னிலை மிகக்குறைவு. தொண்ணூறு சதக் கவிதைகளில் ஒரு ‘அவன்’ அல்லது ‘அவள்’ இருக்கிறார்கள். இந்த மூன்றாவது மனிதனை கவிஞன் என்றோ வாசிப்பவன் என்றோ கொள்ளலாம்.

உங்களுக்கான நிறம்
கரைந்துருகி மறையும் அந்தியில்
பிம்பங்களற்ற உருவத்தில்
உலாவுகின்றன
உங்களது வெற்றுடல்கள்.

தற்கால கவிதைகளில் அதிகம் கிடைக்கும் பதம் நான் என் உலகம் என் வெற்றுடல். ஒரு தேர்ந்த சிற்பியைப்போல நானையெல்லாம் நீங்களாக்கியிருக்கிறார் நிலா. இதில் ஒரு வேற்றுமை நிகழ்கிறது. கவிஞனைப்பார்க்கும் வாசகன் என்பது இல்லாமல் கவிஞனோடு சேர்ந்து இன்னொருவனை வேடிக்கை பார்க்கும் நிலைக்கு கொண்டுபோகிறது வார்த்தைகள். ரசித்தேன்.

‘எதிர்ப்புகளின்றி
வெட்டுண்ட மரமென
வீழ்கின்ற
உயிரில் படிய ஆரம்பிக்கிறது
நீங்குதலின் ரத்தக்கறை.’

இந்த வரிகளில் ’எதிர்ப்புகளின்றி’ பதத்தை மிகவும் ரசித்தேன். வெட்டுண்ட மரம் என்பதின் கூரிய உணர்வை அழுத்தமாக்குகிறது எதிர்ப்புகளின்றி எனும் பதம். உங்களை ஒருவர் கீழே தள்ளும்போது தள்ளியவனை விட வேடிக்கைப்பார்ப்பவன் மேல் அதிக கோபம் வருமில்லையா அத்தகைய மன நிலை இது,

தொகுப்பிலேயே மிகப்பிடித்த கவிதை என இதைச்சொல்வேன்.

நீந்துதலின் சுகம் பற்றியும்
சுதந்திரம் பற்றியும் பேசிக்கொண்டன
இரு மீன்கள்

குளம் வற்றிய ஓர் இரவில்
பறத்தலின் சுகம் பற்றி அவை
பேச ஆரம்பித்தன

உரையாடல் முடியும்முன்பே
நின்று போனது அனைத்தும்

மெளன சுகத்துடன் சிரித்துக்கொண்டது
வெண்ணிலா.

மொத்த புத்தகத்திலும் ஒரே விஷயத்தை திரும்பத்திரும்ப படிக்கும் உணர்வை தவிர்க்க முடியவில்லை. பல கவிதைகளின் சாரம் இப்படி இருக்கிறது . ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட சோகத்துடன் வருகிறார்கள். இறுதியில் ஒரு இயற்கை காட்சியுடன் முடிகிறது. இந்த வடிவமைப்பை பல கவிதைகளில் பார்த்தேன். இன்னொரு முரண்பாடு கவிதையில் சந்தித்தது அவற்றின் தலைப்புகள். எல்லாத் தலைப்புகளும் கவிதைகளின் முதல் வரியிலிருந்து எடுத்தாளப்பட்டிருப்பது பத்து கவிதை தாண்டியதும் சலிப்பூட்ட ஆரம்பித்துவிடுகிறது. மொத்தத் தொகுப்பையும் படித்து முடித்தபின் ஒரு கவிதை கூட முழுமையாய் மனதில் நிற்கவில்லை. ( ”நான்கு சுவர்களுக்குள்/ சுற்றி சுற்றி வரும் /ஏதோ ஒரு பறவை /விட்டுச்சென்ற இறகு /நான்” விதிவிலக்கென்றாலும், உச்சங்கள் பிரமிளும் கல்யாண்ஜியும் ஏற்கனவே தொட்டுவிட்டதால் அடிபட்டுப்போகிறது)

அறிமுகப் பதிவில் சொல்லியது போல மென்பொருள் துறையில் கவிதை என்றால் நினைவுக்கு வரும் பெயர்கள் நிலாரசிகனும் அருட்பெருங்கோவும். பெரிய எதிர்ப்பார்ப்புடன் வாங்கிய தொகுப்பு ஏமாற்றத்தைக்கொடுத்தால் தொடர்ந்து வாசிப்பதையே அவர்கள் நிறுத்திவிடும் அபாயம் இருக்கிறது நிலா. உங்களிடம் எங்கள் எதிர்ப்பார்ப்பு அதிகம். வெயில் தின்ற மழை நிலாரசிகனின் ரசிகர்களுக்கு சோளப்பொரி மட்டுமே.