மழை விட்டுத் தீர்கிறது

பறவை மிதக்கும்

கடல்

கூர்முனைக் கனவுகளில்

துரோகிகளின்

நிழற்படம்

பிரித்தறியா இரட்டைக்கிளவிகளின்

மெளனச் சிதறலில்

ஒலிக்குறிப்புகளின்

இசை.

மஞ்சள் இசை இரவில்

மனங்களைக் கடலில் தள்ள

இழுத்துப்போகிறான்

காக்கிச்சட்டை பாணன்

0

கடல் கொண்ட கனவிலிருந்து

வெளிவருகிறாள்

கெளரி

நட்சத்திரங்களைப்பிடுங்கி

கடலில் எறிகிறாள்

கொஞ்சம் அலையெடுத்து

நிலவின் மேல் வீசுகிறாள்

தென்னைமரங்களின்

வேர்களில் தன் பெயரை

எழுதி வைக்கிறாள்

எல்லாவற்றையும் மீறியும்

கெளரியைச் சூழ்கிறது

யாருமற்ற கரையின் தனிமை.

0

விவாதங்களில்

என் தரவுகளை எடுத்துவைக்கிறேன்

குற்றங்களை

ஒப்புக்கொள்கிறேன்

தவறுகளைச்

சுட்டிக்காட்டுகிறேன்

அறிவின்மை பற்றி

விளக்குகிறேன்

தீராக்கேள்விகளுடன்

விவாதம் புரிபவனுக்கு

இறுதியாய் மெளனத்தைக்

கொடுக்கிறேன்.

வாங்கியதும் போய்விடுகிறான்.

0

மொட்டு விரிதலென்பது

ஒரு எதிர்பார்ப்பன்றி

வேறென்ன?