சாருவின் தளத்திலிருந்த சுட்டி மூலம் மனோஜின் வெயில் வட்டம் சிறுகதைதான் மனோஜுடனான முதல் வாசிப்பு என நினைக்கிறேன். கடைசியாய் படித்த இரண்டு புத்தகங்களும் கவிதை (1 ,2) எனபதால் இன்று இந்தத் தொகுப்பு. மனோஜின் ”சுகுணாவின் காலைப்பொழுது”. 4 வருடங்கள் கழித்து ஒரு படைப்பாளன் தன் தொகுப்பை வெளியிடுகிறான் அதில் 12 படைப்புகள் மட்டுமே இருக்கிறது என்பதில் ஒரு ஆர்வம். தன்னளவிலான ஒப்பிட்டால் 4 வருடத்தின் ஆகச் சிறந்த 12 கதைகளாக இருக்கவேண்டும் என்ற நம்பிக்கைதான் காரணம்.

இந்தக் கதைகளிலிருந்து மனோஜ் சிறுகதை வடிவத்தில் தன்னளவிலான ஒரு முடிவிற்கு வந்துவிட்டார் எனத் தோன்றுகிறது. எல்லாக் கதைகளிலும் ஒரு மர்ம முடிச்சு இருக்கிறது. முடிச்சைத் தேடுவதற்காவது பாதிவரையிலான கதையை படித்தாக வேண்டியிருக்கிறது. எல்லாக் கதைகளும் சரி பாதியாக பிரிக்கப்பட்டிருப்பதாக தெரிந்தது. முதல் பாதி ஒரு வெகுஜன ரசனையை முன் வைக்கிறது. தொடர்ந்த வெகுஜன வாசகனை அதே நடையில் உள்ளே கூட்டி வந்து மையத்தில் திடுமென முடிச்சு தெரிகிறது. அதன்பிறகான வேகம் ஒரு அதிவிரைவுவிளையாட்டு ரயில் வேகத்தில் முடிச்சும் அவிழாமல் வேகமும் குறையாமல் விரைந்து செல்கிறது. சட்டென்று முடிச்சை அவிழ்த்து இவ்வளவுதான் என நெற்றிப்பொட்டில் அடிக்கிறது.

இந்த வழிமுறை இல்லாதது தொகுப்பிலேயே ஆயுதம் மட்டும்தான் என நினைக்கிறேன். ஆரம்பித்த கதையைவிட்டு எங்கேயோ போய் முடிக்கும் விளையாட்டுகளில்லாமல் சிலந்தி வலைப்பின்னல் அமைப்பில் ஒன்றோடொன்று இணைந்த மூன்று அல்லது நான்கு கதைகள் இதற்குள்ளேயே ஒளிந்திருக்கிறது. முதல் இரண்டு கதைகளில் ஆரம்பித்த வேகத்தில் படித்து முடித்தவன், மூன்றாவது இந்தக் கதையைப் படித்தவுடன் தடுமாறி கீழே வைத்துவிட்டேன். மனதில் இதயத்துடிப்பு ஏறிக்கொண்டே இருக்க மனுஷ்யபுத்ரன் வரிகளில் வருவது போல் ஒரு காபி குடித்தால் எல்லாம் சரியாகி விடும் எனத் தோன்றிக்கொண்டிருந்தது. எப்போதோ பார்த்த விதவித கதைகள் செய்திகள் கொலைகள் தலைசிதைந்த புகைப்படங்கள் காணொளிகள் நினைவுக்கு வந்து கொண்டே இருந்தது.

வெயில் வட்டம் ஏற்கனவே படித்ததுதான். கார்மேகத்தைப்பற்றி முதல் வரி தொகுப்பில் படிக்கும்போதே அழுக்கு மஞ்சள் பையை சுருட்டி அடிக்கும் அந்த வன்மம் நினைவுக்கு வந்தது. கார்மேகத்தினை யாராவது பள்ளிப்பிராயத்தில் பார்த்திருக்கிறீர்களா? அழுக்கு துணிப்பை. கிழிந்த ஆடை. ஏற்படுத்திக் கொண்ட தனிமை. சக நண்பர்களுடனான தாழ்வு மனப்பான்மை கொடுக்கும் போர்வைக் கோபம். அதன் இறுதி வரிகளை மிகவும் ரசித்தேன்.

செத்த் மிருகத்தின் திறந்த கண் மாதிரி கார்மேகத்தின் கண்கள் இப்போதும் என்னைப்பார்ப்பது போல அடித்துப்பிடித்து எழுவேன். சில்க் சட்டையோடு கடை முதலாளியாய் கற்பனை செய்து சமாதானம் கொள்வேன்.

அறியாமையின் குற்றங்கள் குறித்த உணர்ச்சிகள் எல்லாம் சரியாய் நடந்ததெனும் குருட்டு நம்பிக்கை சமரசம். அத்தனை நெருக்கமாக உணர்கிறேன் இந்தக் கதையுடன்

தேர்வுகள் சிறப்பானவை. தனிப்பட்ட முறையில் மனோஜிடம் ரசித்த முக்கிய விஷயம் பொறுமை. எழுதிக் குவிக்கலாம். எழுதுவதே எழுத்தின் ரகசியம். இருந்தாலும் 4 ஆண்டுகளில் 12 கதைகளை மட்டும் தொகுக்கும் ஒரு சீரிய சுய மதிப்பீடு அருமை. புத்தகக் காட்சியில் புனைவின் நிழல் வாங்குவதாய் முடிவு. பார்க்கலாம். அதுவும் இப்படியே ரசிக்க வைக்கிறதாவென.

இது என் ரசனை வரிசையில் டாப் 3. மற்ற கதைகளை புத்தகத்தில் படித்துக்கொள்ளுங்கள்.

புத்தகம் : சுகுணாவின் காலைபொழுது
பதிப்பகம் : உயிர்மை