பூஜை அறைக்குள்
நுழையும் போதெல்லாம்
கைகூப்பிக்கொள்கிறாள் நேஹா
கைகூப்பத் தெரியாத
கடவுள்கள் ஒளிந்து கொள்கின்றன
சாம்பிராணி புகைகளுக்கு உள்ளே.
o
பொம்மையை எடுக்கவென
கிளம்பி
தரையெல்லாம்
அங்கப்பிரதட்சணம் உருள்கிறாள்
இடம் போய்
சேர்வதற்குள்
தலைகீழாகிவிடுகிறது
பார்த்துக்கொண்டிருப்பவன் உலகம்.
o
விளையாட்டென நினைத்து
அழும் பாவனையுடன்
முகத்தைச் சுருக்குகிறேன்.
திடீரென
பதறி அழத்தொடங்கும் நேஹாவை
சமாதானப்படுத்துவதில்
முதல் வேலை
நிஜமாய்த் துளிர்த்த கண்ணீரைத் துடைப்பது.
o
நடைவண்டியை இழுத்துக்கொண்டு
தத்தக்கா பித்தக்காவென
சமையலறைக்குள் நுழைகிறாள்
நேஹா
என் சமையலறைகள்
அசீர்வதிக்கப்படுகின்றன
பிஞ்சுப்பாதங்களால்.
o
களைத்து விழுந்து நாளொன்றில்
மேலேறி
கன்னமெல்லாம் கடிக்கிறாள்
பார்க்காமல் விட்ட
நிமிடங்களுக்கும் சேர்த்து
கண்ணோர ஈரம்
நேஹாவின் எச்சில் அல்ல.

oOo