இரண்டு வார்த்தைக்கு
ஒருமுறை
சும்மா என்று சொல்வாய்
எதோ மொழியில்
சும்மாவிற்கு
உம்மா என்று அர்த்தமாமே?

o

காமமில்லாத
காதலென்பது
நீ இல்லாத
நான்

o

பூக்கூடை நீ எனச்
சொன்னேன்
பூக்களின் ஜென்மம்
கூடையில் இருப்பதற்காக
இல்லையென்கிறாய்

o

கடவுள் இப்போது எதிரில்
வந்தாய் என்னசெய்வாய்
என்றாய் ஒரு நாள்
கொஞ்சம் அந்தப்பக்கமாய்
போகச்சொல்லலாம்

o

ஒரு மொழியைப்போல்
நமக்கிடையே படபடக்கிறது
காதல்
வேறு பக்கத்தில் திரும்பி
இமைகளை அடித்துக் கொள்கிறாய்
நீர் பட்ட பறவையென
மொத்தக் காதலையும் ஒளித்துக்கொண்டு
தடுமாடுகிறேன்
வெண்ணைதிருடிய குழந்தையைப்போலே
இறுக்கி முத்தமிட்ட நாளொன்றில்
சொல்லவே விரும்பினேன்
நீ என் கடைசிகாதலிதானென.

o

ஒரு இரவு நீள்கிறது
குறுஞ்செய்திகளைப் பரிமாறிக்கொண்டு
அலைபேசிகளை ஈரமாக்கிக்கொண்டு
காமத்தைச் சொற்களில்
வடித்துக்கொண்டு
ரகசியங்களைப்பரிமாறிக்கொண்டு
பிரிவுகளுக்கான காரணங்களைப்
பற்றிக்கொண்டு
டாலர் எண்களைக் கணக்குப்பார்த்துக்கொண்டு
எங்கோ இருக்கும் நானும்
இங்கே இருக்கும் நீயும்தான்
தனியே இருப்பதாய்த் தான் தோன்றுகிறது
இதற்குப்பெயரும் காதல் எனச் சொல்லலாம்.

o

விரித்த ஈரத்தலையுடன்
மழையைப்போல் வருகிறாய்
நீ
கடலாகிக் கொண்டிருக்கிறேன்
நான்

oOo