சும்மா ஒரு உளவியல் ரீதியிலான ஒரு முடிதேடும் படலம். ஆண்பார்வையில் எழுதியிருக்கிறேன். திணை பால் மாற்றிப்படித்தாலும் பொருந்தும்.

o

சசி
சஸி
ஸஸி
ஸசி
எப்படிச்சொன்னாலும்
நீ என்
ஸசி
ஸஸி
சஸி
சசி
-கலாப்பிரியா

o

காதல். மொழிகளை மீறிய மொழி. மனிதர்களை மீறிய மனிதம். மெளனங்களை மீறிய மெளனம். சொற்களையெல்லாம் ஒற்றைத்தாவலில் கடக்கும் ஒரு சொல். கனவுகளில் அசாத்தியங்களைத் தொடும் ஒரு கனவு. நிஜங்களிலேயே நம்ப முடியாத நிஜம். பொய்களில் அடங்காத பொய்.  வலிகளையெல்லாம் மீறிய வலி. இன்னதென வரையறுக்கமுடியாது எதோ ஒரு இன்னது.

இதுவரை எத்தனை பேர் எழுதியிருப்பார்கள் காதலைபற்றி. எத்தனை கதைகள். எத்தனை கவிதைகள். எத்தனை குறும்படங்கள் எத்தனை திரைப்படங்கள். எத்தனை நாவல்கள். பதின்ம வயதில் காதலியைத் தேடிக்கொள்ளச்சொல்லி எவன் சொல்லிக்கொடுக்கிறான். கவிதை எழுதுபவனுக்கு பெண்கள் ஏற்றுக்கொள்வார்கள் எந்த சட்டத்தில் இருக்கிறது. ஒரு காதல் இருவருக்கிடையில் தொடங்கும் நிமிடத்தை எவன் எப்படி குறித்துவைப்பது.. இவர்கள் காதல் கொள்வார்கள் என எப்போது நண்பர்களால் முடிவு செய்யமுடியும் யார் மீது எனக்கு காதல் வரும் வரவேண்டுமென நான் எந்த நிமிடத்தில் முடிவு செய்கிறேன். எதற்காக முருகன்கள் கையில் தாலியைக் கட்டிக்கொண்டு சுற்றவேண்டும்? எதற்காக கார்த்திக் மூன்று வருடம் பைத்தியக்காரனைப்போல் சுற்றிவிட்டு ஜெஸ்ஸி பெயரில் திரைப்படம் எடுக்கிறான்.

காதல் குறித்து சொல்லப்பட்ட கதைகளை கொஞ்சம் கலைத்து விளையாடலாம். முதன்முதலில் பதின்ம வயதில் தோன்றுகிறது இது முதல் கதை. உண்மையில் அந்த ஈர்ப்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆதியிலேயே இருக்கிறது, தன் ஈர்ப்பிற்கு காதலென ஒருவன் பெயரிடுவதுதான் பதின்மத்தில் ந்டக்கிறது இல்லையா?. தன் எதிர்பால் ஈர்ப்பிற்கு காதல் எனப் பெயரிடுகிறான். காதல் பாடல்கள் எனச் சொல்லப்பட்டவற்றை கேசட்டுகளில் , குறுவட்டுகளில்,ஐபாட் கருவிகளில் நிறைத்துக்கொள்கிறான். அதைக்கேட்டால் அவள் நினைவு வருவதாய் உணர்கிறான். இத்தனை நாளாய் கேட்கும்போது வராத உணர்வு, அவள்மீதான ஈர்ப்பு காதல் எனப் பெயரிடப்பட்டதும்தான் வருகிறது என்பது நகைச்சுவையில்லையா? . உண்மையில் அவள் நினைப்பு வருவதான இவனது நம்பிக்கைக்குத் தகுந்தே மனம் செயல்படுகிறது. மனம் என்ற கற்பிதமே பொய்தான். மூளையின் செல்களுக்குள் நடக்கும் விளையாட்டுதான் காலில் வலிப்பதும், கண்ணில் ஈரம் கசிவதும் மனதில் காதல் பிறப்பதும்.

ஆதியிலிருந்து பரிணாம வளர்ச்சிக்காக காமம் கொள்ளச் செய்த ஹார்மோன்கள் வேலை செய்யத்தொடங்கும்போது , நண்பர்கள் சினிமா புத்தகங்களின் கற்பிதங்களின் படி அதைக் காதலெனத் தீவிரமாக நம்புகிறான். எந்தப் பெற்றோர் காதல் இந்த வயதில் வரும் என அவனுக்கு போதித்தார்கள்? எந்தப்புத்தகம் காதல் என்பது இதுதான் என வரையறுத்திருக்கிறது? வரையறுக்க முடியும். எழுபதுகளில் தீவிர சண்டையிலிருக்கும் ஆணும் பெண்ணும் காதலர்கள். எண்பதுகளில் தற்செயலாய் மோதிக்கொண்டு புத்தகங்களைத் தவற விட்டவர்க்ள் காதலர்கள். தொண்ணூறுகளில் தற்செயலாய்ச் சந்தித்து கடந்து போகும்போது திரும்பிப்பார்த்த இருவர் காதலர்க்ள். இரண்டாயிரத்து வருடங்களில், நீண்ட கால குடும்ப நண்பர்கள். இரண்டாயிரத்துப் பத்துகளில் முதல் பார்வையிலேயே பிடித்துப்போய் பின்னால் சுற்றி முகவரி கண்டுபிடித்து முதல் வார்த்தையே ஐயம் கிரேஸி அபவுட் யூ வாகத்தான் இருக்க வேண்டும், அப்படி ஆரம்பிக்காமல் நண்பர்களோ உறவுமுறையிலோ நீண்ட கால பழக்கம் இருப்பவர்களோ காதலைப்பற்றி பேசத் தகுதியில்லாதவர்கள். முதல் பார்வையில் அந்த கிரேசியை சொல்லாத ஆண்கள் தைரியம் இல்லாதவர்கள். உடனே ஒத்துக்கொண்ட பெண்கள் முட்டாள்கள். குறைந்தது இரண்டு வருடமாவது பின்னால் சுற்ற வைத்து பிறகு ஒத்துக்கொண்டு கடற்கரைச்சாலையில் இறுக அணைத்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் பறந்தே ஆக வேண்டும்.விபத்துகளில் இறந்தாலும் பரவாயில்லை,.

இந்த முடிவுகள் ஒருவன் மனதில் எதிலிருந்து வருகிறது.சினிமா, நட்பு வட்டம், வார மாத இதழ்கள். எல்லாவற்றுக்கும் மேலாக காதல் கவிதைகள் இடை உடை முத்தம் இறுக்க அணைத்தல் காமம் இருந்தால் அவை காதல் கவிதைகள் எனப் பெயர்பெறும். இலக்கியவாதிகள் குப்பை என்று ஒதுக்குவார்கள். புத்தகங்களைக் காசு கொடுத்து வாங்குவது முட்டாள்தனம் என நம்புவர்கள் வார இதழ்களை மட்டும் படித்துவிட்டு சாமானியன் என்று ஒத்துக்கொண்டு இந்த்க் கவிதைகளைக்கொண்டாடுவார்கள். பெண்கள் அருமை சொல்வார்கள், ஆண்கள் முதல் வேலையாக வலைப்பூ ஆரம்பித்து கவிதைகள் எழுதத்தொடங்குவார்கள். என் காதல் என் காதலி என் காதலிக்கு பிடித்த  நிறம் என எதையாவது உண்மைபோலவே எழுதுவார்கள். நம்பித்தான் ஆகவேண்டும். நமக்கும் எவள் மீதாவது பாலின ஈர்ப்பு வந்தால் வலைப்பூ ஆரம்பித்தே ஆகவேண்டும் . அல்லது நான் காதலன் இல்லை. பத்து பதிவு போட்டால் கவிஞன் என பெயருக்கு முன்னால் சேர்த்துக்கொள்ளலாம், நூறு பதிவு போட்டுவிட்டால் தொகுப்பு கொண்டு வந்துவிடலாம், பத்து தொகுப்பு வந்தால் சினிமா சீரியல் பாடலாசிரியர். (ஒரு அரசியல் வாதிக்கு ஜால்ரா போட்டால் கதாநாயகனாக்கக் கூட ஆகலாம்) இத்தனை நன்மைகள் இருக்கையில் லவ் பண்ணுங்க சார். லைப் நல்லா இருக்கும்.

சரி காமம் மட்டும்தான் காதலா? இல்லை. இல்லவே இல்லை. இன்னொரு விஷயம் இருக்கிறது உள்ளே. தெய்வீகக்காதல். காலுடைந்தவளைத் தூக்கிக் சுமக்கும் காதல் கணவனுக்கும், குடிக்காரனை சகித்துக்கொள்ளூம் மனைவிக்கும் மலைமீதிருந்து வீழ்பவர்களுக்குள்ளும் இருக்கும் எல்லார்க்கும் தெரிந்த தெய்வீகக் காதல். கர்வம். நான் எனும் செருக்கு, நான் தேர்ந்தெடுத்த பெண் என்ற திமிர். நான் தேர்வு செய்த பெண் என்னை ஒத்துக்கொள்ளும்போது நான் வெற்றியாளனாகிறேன். என் வெற்றிக்கு உதவியவளைத் தூக்கி வைத்துக் கொண்டாடுவேன். அவளுக்காய் கவிதைகள் கதைகள். செத்தாலும் அவள் போட்டாவை எல்லார்க்கும் தெரியும் நடுக்கூடத்தில் மாட்டி வைத்து வருபவர் போவோருக்கெல்லாம் கண்ணீருடன் நாங்க எப்படி வாழ்ந்தோம் தெரியுமா சார் என கண்ணீர் மல்க கதைசொல்லுவேன். கால் உடைந்து கிடந்தாலும் தூக்கிச் சுமப்பேன். நான். நான் வெற்றியாளன். நான் நல்லவன். நான் தெய்வீகக்காதலன். நான் யோக்கியன். நான். நான். நான்.

சரி.. இதே கதையைக் கொஞ்சம் திருப்பிப்போடுவோம். அவள் என்னை மறுத்துவிட்டாள். நான் தோற்றுவிட்டேன். இல்லை. தோற்கடிக்கப்பட்டேன். அவள் என்னைத் தோற்கடித்தவள். என்ன செய்யலாம்? இவனுக்கும் அதே அஸ்திரம், எழுது காதல் தோல்வி கவிதைகள். தாடி வளர். தண்ணியடி. தம்மடி. என்னென்ன கெட்ட பழக்கங்கள் உண்டோ எத்தனை பழக்கங்கள் மீது உனக்கு ரகசிய ஆசையுண்டோ அத்தனையும் தீர்த்துக்கொள். கேட்டால் எளிதாக விளக்கிவிடலாம். காதல் தோல்வி. அவளை மறக்க முடியவில்லை. இதெல்லாம் செய்வதால் அவளை கொஞ்ச கொஞ்சமாயாவது மறந்துவிட்டாயா? இல்லை.. இன்னும் அதிகமாய் நினைக்கிறேன் . இன்னும் அதிகமாய் தண்ணியடி. காரணம் வேண்டுமே நம் ரகசிய ஆசைகளுக்கு, அடிப்பதையும் அடித்துவிட்டு ஊரெல்லாம் சொல், அவள் இருந்தால் அப்படி பார்த்துக்கொள்வேன்.. இப்படி பார்த்துக்கொள்வேன். அவள் நண்பர்களிடத்தில் புலம்பு. அவள் நண்பர்களுக்குத் தெரியுமிடத்தில் பைத்தியக்காரனைப்போல் திரி. அவள் நண்பர்கள் அவளிடம் ’அவன் உனக்காய் ஓடாய்த் தேய்கிறான்’ எனச் சொல்வார்கள். சொல்லட்டும். அவள் வருந்துவாள். வருந்தட்டும். கண்ணீர்விடலாம். விடட்டும். அதுதானே என் கர்வ மிருகத்தின் தீனி. என்னைத் தோற்கடித்தவள் என் பொருட்டு கண்ணீர் சிந்தியே ஆகவேண்டும்.

கண்ணீர் சிந்தவில்லையென்றால்? எடு தட்டச்சை. அடி கவிதையை. கல் நெஞ்சக்காரி. இரும்புத்திரை மனது. பொய். பெண்கள் பேய்கள். பெண்ணென்றொரு மாயப்பிசாசு.

பதின்மத்தில் ஆரம்பித்து இருபதில் முடிவு செய்து இருபத்தைந்தில் எல்லாவற்றிலிருந்தும் வெளியில் வந்து திருமணம் செய்து கொள். சிகரெட்டைக் குறை. சரக்கு ஒரு சமூகவியல் அடையாளமாகட்டும். பழைய காதலியின் பெயரை குழந்தைக்கு வை. பணம் தேடும் பணியில் முடங்கு. காதலாவது கத்திரிக்காயாவது. மகளோ மகனோ காதல் செய்தால் கழுத்திலேயே மிதி.

o