தொலைத்த இடம் தெரியாமல்
வழிகளில் உன்னைத்
தேடிக்கொண்டிருக்கிறான்
மெளனச் சித்தன்

சிறகுகள் அசைந்த
தடந்தெரியாமல்
பறந்து போயிற்று
பொன் பறவை

கண்மூடிக்கிடந்த
நேசம் உறங்குகிறது
இறந்த குதிரையென

சாட்டைகளைச் சுழற்றும்
இடம் தெரியாமல்
இன்னொரு முறை
உன் பழைய பாதைகளில்
தன்னையறுத்துக்கிடப்பான் மெளனச்சித்தன்.

o

பழைய பிசாசொன்றைச் சந்தித்தேன்
இரவுப் பாடல்களில்
உன் முகம் வருமென்றேன்

எனக்குத் தெரியாத
ஜோடிகள் உன்னை நினைவூட்டுமென்றேன்

நீ தந்த மெளனங்களைப்
பத்திரமாய் வைத்திருக்கிறேன் என்றேன்

எழுதியவன் இறப்பது புதிதல்ல என்றாலும்
இறக்கும் நிமிடத்தில் உறைந்திருக்கிறேன்
என்றேன்

நீ பிசாசாகி சில வருடமாகிறது
என்பதைத் தவிர
பிசாசு எதுவும் என்னிடம்
பேசவில்லை.

o

பெயரில் என்ன இருக்கிறது
கெளரி
பிரியா
நேஹா
ராஜி
சித்ரா
சிந்து
சுசீலா
ஸசி
மதுமிதா

எல்லா வார்த்தைகளிலும்
உள்ளே ஒளிந்திருப்பது நீயெனும்போது
பெயரில் என்ன இருக்கிறது

o

மூர்ச்சையடைந்த பறவையொன்றை
மடியில் வைத்திருக்கிறேன்

பறவையின் குணங்கள் தெரியுமென்றாலும்
கிழிந்த பறவையின்
மருத்துவம்
நான் அறியாயதது

குழந்தையின்
வாஞ்சையுடன் குருதியைத்துடைக்கிறேன்

தீராத பதட்டமென்பது
பறவை
மூர்ச்சையிலிருக்கிறதா
இறந்து விட்டதா என்பதே.

o

தயக்கமின்றி கொன்றுவிடுங்கள்
உங்கள் வழியில் எதிர்படும்

கிழவனை
துரோகனை
மெளனனை
புத்தனை
கடவுளை
சாத்தானை
பிசாசை
காதலை
பிரிவை

தயக்கமின்றி கொன்றுவிடுங்கள்
உங்கள் வழியில் எதிர்படும்
என்னை.
oOo