பாதங்கீழ் நகரும் ரயில்

தூளியென ஆடும் கைப்பிடிக்குள்
நுழைத்திருக்கிறேன்
கோர்ப்பதற்கு யாருமில்லாத
கரங்களை

ஒற்றை மெளனம்
தூளென வீழ்ந்த படி இருக்கிறது
ஜன்னல் வழி காகிதமென

கதவின் கீழ்
நகரும் பாதை
குதித்துவிடுவதற்கான இடைவெளியுடன் தான்
இருக்கிறது.

o

ஒற்றைக்கண் ராட்சஷன்

தனித்துவிடப்பட்ட வேப்ப
மர நிழலில்
அழுது தீர்கிறது
தூளிக் குழந்தை

எங்கோ நடவிலிருந்து
கரையேறும் கிழவி
மாராப்பு விலக்கி இருக்கிறாள்

கேமரா எடுப்பவனோ
பேனாவை எடுப்பவனோ
பின்னொரு நாள்
அந்தக் குழந்தையின் கதையில்
வருவான் ஒற்றைக்கண் ராட்சஷனென.

தம்பியாதல்

நான் தம்பியாகி ஐம்பத்து நான்கு
ஆண்டுகளாகிறது

தம்பி பாயசம்
தம்பி மோர்
தம்பி ரசம்

கிட்டத்தட்ட
மறந்துவிட்ட நிலையில்
பேரனுக்கு வைத்தார்கள்
என் பெயரை

மரியாதை என
பெயர் சொல்லாமல்
தம்பி என்றுதான் அழைக்கிறார்கள் பேரனையும்.

oOo