தீராக் கனவிலிருந்து
விழுந்து கொண்டிருக்கின்றன
அரளிப்பூக்கள்

மலர் வீழ்ந்த மரங்கள்
கிளையசைத்துக் கிடக்கிறது
காற்றினைத் தின்றபடி

முன்பனியில் கவியும்
தனிமை எரிகிறது
காய்ந்த சருகென

இதழ் மூடிய நெப்பந்தஸ்
உறிஞ்சுகிறது
உள் நுழைந்த வண்டின் உதிரம்

ஆனாலும்
உதிரம்
உதிரத்தின் சுவை.

o
ஆடைகள் நெகிழ்ந்திருந்தன
எனக்காய் ஒரு சமயம்

அகோரிப் பசியென
தின்னப்பட்டன உடல்கள்
உன் பசிக்கென நானும்
என் பசிக்கென நீயும்

என் உடைகளை அணியும்
சமயம் சொன்னாய்
நீ ஆதிக்கவாதி என

அடிமைகள்தான் ஆளுமைகளை
உருவாக்குகிறார்கள் என
உனக்குப் புரிவதில்லை
எப்போதும்.

o

காற்றலைந்த குரலில் சொன்னாய்
உனக்காக இங்கே வந்தேன்

காற்றில் கலைந்து சொன்னாய்
உன்னால் இங்கிருந்து போனேன்.

கலைந்த கற்றாய்
அலைகிறேன் வார்த்தைகளின்
தர்க்கங்களைத் தூக்கிக் கொண்டு

oOo