என் காதலைச் சொன்ன நேரத்தின் உன் மெளனங்களைத்தான் மிச்சம் வைத்திருக்கிறேன் இன்றும் எனக்குள். ஒரு பறவையை அதன் காயங்களுடன் தூக்கிச் சென்று மருந்திட்டவன் போல் நடந்து கொண்டவள் நீ. என் பழைய சோகங்களை உன்னிடம் இறக்கி வைத்ததற்கு சொல்லி முடித்ததும் கிடைக்கும் உன் கரங்களின் சூடும் ஒரு காரணம் . கண்ணீர் வற்றிய கண்களின் கதையை புன்னகையுடன் சொல்லி முடிப்பேன். உன் பஞ்சுமிட்டாய் கரங்களுக்குள் வைத்திருப்பாய் என் கரங்களை. அந்தச் சூடு அத்தனை இதம்.

நகம் கடிப்பது பிடிக்காது உனக்கு. கடிக்கப்படும் என் விரல்களைவிட தட்டிவிடும் உன் விரல்கள் அத்தனை பிடிக்கும் எனக்கு. வெயில் நாளொன்றில் சோர்வுற்று என் தோள் பிடித்து நடந்துவந்தாய் நினைவிருக்கிறதா. அந்தத் தோளைத்தான் இன்றும் சுமந்து திரிகிறேன் நீ இல்லாத பாலையில். அத்தனை கனமாக இருக்கிறது உன் விரல்களின் நினைவு.

கல்லூரி விட்டு கல்லூரி வந்து நின்றாய் நீ. இன்றுமுதல் உன் கல்லூரி எனும்போது என் கண்களில் வெடித்த நச்சத்திரங்கள் உனக்கு நினைவிருக்கிறதா? அடங்காத மகிழ்ச்சியுடன் ‘ விளையாடாத’ எனக் கடந்து சென்றது ‘விளையாட்டுக்குச்சொன்னேண்’ எனச் சொல்லிவிடுவாயோ எனும் பயத்தில்தான் என்பது உனக்கும் தெரியும்தானே? ஒரு சின்ன ஊடலில் , ‘எங்க வீட்டுல இருந்து இங்க வர 4 மணி நேரம் டிராவல், பக்கத்துல காலேஜ் போகத்தெரியாதா. உனக்காகத்தான் இங்கு வந்தேன்’ என்றாய். பொய்தானா அது?200 புத்தகங்கள் இருக்கும். மூன்று வருட வார மாத இதழ்கள். 500 திரைப்படங்கள். 100 நண்பர்கள். இத்தனை மாற்றுகளால் நிறைவு செய்ய முடியாத ஒற்றைப் பறவை நீ.

நீ எனத் தொடங்கும் போது இறக்கை முளைக்கிறது வார்த்தைகளுக்கு. தீராத காதலை தீராத தாகத்தை தீராத மெளனத்தை தீராத மொழியை உன்னைச் சுற்றி வட்டமிட்டு வாரி இறைக்கிறது.

இந்தக் கூடு இப்போது வெறுமையாய் இருக்கிறது. இந்தப் பாதையில் இப்பொழுது யாருமில்லை. நகம் கடிப்பதைத் தட்டிவிட விரல்கள் இல்லை. அழுத்தங்களைப் புலம்ப அழுத சாய எந்த மடியும் இல்லை. இனி வரும் அறிவுரைகள் இரக்கமின்றி அலட்சியப்படுத்தப் படும். கேள்விகளுக்கு எரிச்சல் வரும். ஆறுதல்கள் அடி மனதிலிருந்து வெறுக்கப்படும். கோர்க்கக் துடிக்கும் விரல்கள் வேகமாய் உதறப்படும். புன்னகைத் தொலைந்து தூரமாயிற்று. இனி ஒரு போதும் திரும்பி வராத வந்தாலும் ஏற்றுக்கொள்ளாத அறை எளிதாய்ப் பழகிவிடும் வெறுமைக்கு.

தொடமுடியாத தூரத்தில்தான்இருக்கிறாய் நீ
மெளனியாக
முகமற்றவளாக
முகம் காட்ட மறுப்பவளாக
புறக்கணித்துச் செல்பவளாக
பழைய புன்னகையாக
கவனம் கலைப்பவளாக
நினைவாக
தொடமுடியாத தூரத்தில்தான்இருக்கிறாய் நீ
நீயாக.

அழுதுவடியும் நாட்குறிப்பைவைத்துக்கொண்டு என்ன செய்வது
உன் நினைவுகளை வைத்துக்கொண்டு
போலிப் புன்னகையை
வைத்துக்கொண்டு
புரியாதவர்களை வைத்துக்கொண்டு
மெளனங்களை வைத்துக்கொண்டு
நிராகரிக்கப்பட்ட காதலை
வைத்துக்கொண்டு என்ன செய்வது

o