எஸ்.ராவின் எழுத்துக்கள் மனதுக்கு நெருக்கமாகவே இருக்கின்றன எப்போதும். படித்து முடித்ததும் எதுவும் செய்ய இயலாத ஒரு ஆற்றாமை மனமெங்கும் பொங்குகிறது. இதுவரை கட்டிவைத்திருந்த சுயபிம்பம் உடைந்து கழிவிரக்கம் மேலேறி மின்விசிறி ஒலி மட்டும் தனித்து இரையும் அறையில் வீழ்த்தப்பட்டவனைப்போல் படுத்திருக்கிறேன்.

உறுபசியின் சம்பத் இன்னும் தீயாக உள்ளே கனன்று கொண்டிருக்கிறான். துயில் படிப்பதற்கு முன் நெடுங்குருதியைப் படித்துவிட வேண்டும் என ஆசை வந்தது. நெடுங்குருதி, துயில், யாமம் எல்லாவற்றையும் அலமாரியில் வைத்துக்கொண்டு அவ்வப்போது பார்த்துக்கொள்வேன். எடுத்துப்படிக்க சின்னப் பயம் மனதில் அலைந்து கொண்டிருந்தது. குதூகலங்களையெல்லாம் வழித்துப்போட்டு குருதியை பூசிப்போய்விடுகின்றன எஸ்.ராவின் புனைவுகள் ( அபுனைவுகள் பழகிய ஒரு சட்டத்திற்குள் வேறுவேறு படங்களைப் பொறுத்துவதைப்போலாயிற்று).

எஸ்.ரா பின்னட்டையில் சொல்வது போல எந்த வரைபடத்திலும் இல்லாத கிராமம் வேம்பலை. எல்லாக் கிராமத்தின் எதோ ஒரு அடையாளத்தை வேம்பலை சுமந்து கொண்டிருக்கிறது. வேம்பலை கிராமமும், வேம்பர்கள் இனமும், வேம்பலையில் நிகழும் வெயிலும் மழையும் காற்றும் பனியும் சேர்த்துக் கட்டப்பட்ட ஒரு புனைவு வரலாறு இந்த நெடுங்குருதி. ( வெயில் , மழை , காற்று , பனி படிமங்கள் ஸ்பிரிங் சம்மர் வின்டர் பால் படத்தின் தாக்கம் என யூகிக்கிறேன்)

வேம்பர்களின் முன்கதை குற்றப்பரம்பரையை நினைவூட்டுகிறது. முன்னாள் திருடர்கள் நிறைந்த ஒரு கிராமம் அரசியலால் எப்படி சிதைக்கப்படுகிறது என நுட்பமாகக் காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது. மொத்த கிராமத்தின் குரல்வளையையும் அறுத்துவிட்டுப் போகும் ஒரு துரையோ, கூட்டத்தில் குரங்காட்டியைப்போல் புகுந்து துரையின் கழுத்தை அறுக்கும் வேம்பனோ அவரவர் மூர்க்கத்தை ஆகக் குரூரமாஇ வெளிப்படுத்துக்கின்றனர்.

நாவலில் மனிதர்மீதெல்லாம் படிந்து போயிருக்கும் குரூரம் மனிதர்களின் குணமல்ல அந்த மண்ணின் குணம் என நுண்ணிய தெளிபுகளால் சுட்டப்பட்டிருக்கிறது. வேம்பலை எல்லாக் காலங்களிலும் ஒரு கூரிய வன்மத்துடனே இருக்கிறது. புதிதாய் ஊருக்குள் வந்தவர்களையும் அந்த குரூரம் நிழலைப்போலே தொற்றிக்கொள்கிறது. ஊரைவிட்டு வெளியேற நினைப்பவர்களை வேம்பலை ஒரு போதும் விலகி நிம்மதியாய் இருக்க விடுவதில்லை. ஊர் தனது தீராத நாக்குகளால் எல்லாரையும் தொடர்ந்து வேம்பலைக்குள்ளேயே புரட்டிக் கொன்Dஇருக்கிறது. வேண்டியவரளை இழுத்து வருவதைப்போலவே, வேண்டாதவர்களை சுழட்டி உமிழ்வதிலும் வேம்பலை தெளிவாகவே இருக்கிறது.

நாகு என்ற பத்து வயது சிறுவனில் தொடங்கும் கதை மொத்த ஊரையும் ஊர் மனிதர்களையும் விளக்கிக் தீர்ந்து நாகுவின் மகன் இளைமையடைவதில் முடிகிறது. இடைப்பட்ட காலத்தில் தான் எத்தனை மனிதர்கள் எத்தனை விதவித மரணங்கள். நாவல் முழுவதும் இயற்கையாய் இறந்தவர்கள் என யாருமே இல்லை. வயதேறிய சென்னம்மா கிழவி பகுதி பதட்டம் கொள்ளச் செய்வது. இறவாமல் முதிரும் சென்னம்மாவை தானியக் குலுக்கைக்குள் வைத்து மூடியும், அவள் உடல் காய்ந்த கருவேப்பிலையைப்போல் உதிர்கிறதே அன்றி அவள் மரணிப்பதே இல்லை. தீராத தாகத்துடன் உடலற்ற உயிருடன் ஊர் முழுவதும் அலைகிறாள்.

துயில் வெளியீட்டு விழாவில் எஸ்.ராவிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர் சொன்னவை

‘ நாவல் ஒரு விதையப்போலே எழுத்தாளனுக்குள் உருவாகுவது. அதை அவன் விதைத்து நீரூற்றி பாதுகாத்து வரமுடியுமே தவிர மரம் எப்படி வளர்வது என்பது விதையைப்பொறுத்தது. வளர்ப்பவன் கையில் ஒன்றுமே இல்லை. ‘

வேம்பலையின் மனிதர்கள் எதற்கும் கவலைப்படுவதில்லை. கோபப்படுகிறார்கள். பயம் பீடிக்கிறது. கொலை செய்கிறார்கள். அடுத்த வேலையைப்பற்றி யோசிக்கிறார்கள், தத்துவ எண்ணங்களைப்போட்டு குழப்பிக் கொள்கிறார்கள். காதல் காமம் நோய் பொய் கொலை பயம் எல்லாவற்றையும் அதனதன் உச்சத்திற்கு இட்டு சென்று ரசிக்கிறார்களே ஒழிய ஒரு நாளும் எதற்கும் வருந்துவதே இல்லை.

இருந்தாலும் நாவலில் உறுத்தும் சில விஷயங்கள், வேம்பர்களுக்கென்று வழக்கு மொழி எதுவுமில்லை. எஸ்.ராவின் உயர்கவித்துவ மொழியில் ( அல்லது அப்படித் தெரியும் ஒரு மொழியில்) தான் பேசிக்கொள்கிறார்கள். மனிதர்களைவிட இயற்கை இன்னொரு பாத்திரம் என ஏற்றுக்கொண்டால் கூட பக்கத்திற்கு ஐந்து முறை வரும் ” வெயில் சுவர்களில் ஊர்ந்து கொண்டிருக்கிறது ” “மழை தெருவில் நடந்து கொண்டிருக்கிறது” “காற்று வேம்பின் மேல் அலைந்து கொண்டிருக்கிறது’ போன்ற மொழி நடை நாவலில் பாதியைத் தாண்டும்போது சலிப்பூட்ட ஆரம்பித்துவிடுகிறது. கூர் மொழிகளைக் கொண்ட வர்ணனைகளை எடுத்துவிட்டால் நாவல் வெறும் 100 பக்கங்களே தேறும். இருந்தாலும் இப்போது நாவல் கொடுக்கும் நடுக்கம் இருக்காதோ எனத் தோன்றுகிறது.

ஊமை வேம்புவில் பிடுங்கப்பட்ட பேயாணியின் வெற்றிடம் போல் தீராத வெற்றிடத்தை விட்டு கிளம்பிப்போகிறார்கள் வேம்பர்கள் வேம்பலையை நோக்கி. நெடுங்குருதியைத் தீராமல் தடவிக்கொண்டிருக்கும் நாகுவின் கரங்களை நமக்குக் கொடுத்துவிட்டு

நெடுங்குருதி – எஸ்.ரா – நாவல்
உயிர்ம்மை பதிப்பகம்