யுத்தம் செய் மெமரிஸ் ஆப் மர்டரின் காப்பி என படம் வெளிவருவதற்கு முன்பே வலையுலக பரமாத்மாக்களின் ஜோதிடத்தால் தரவிறக்கம் செய்து வைத்திருந்து யுத்தம் செய் பார்த்த பிறகு பார்த்தேன். ஒரே வார்த்தைதான் பதில். இல்லை.

மூடப்பட்ட வாய்க்காலில் குனிந்து எட்டிப்பார்க்கும் ஒருவனில் தொடங்குகிறது கதை. வாய்க்காலுக்குள் கைகள் கட்டப்பட்ட நிலையில் ஒரு பிணம். தமிழ் படமாக இருந்தால் தடபுடலாகியிருக்கும் காட்சி அப்படியே மெதுவாகவே நகர்கிறது. கூட்டம் சேர்ந்து கூட்டத்தையும் சம்பவ இடத்தில் விளையாடும் குழந்தைகளையும் கட்டுப்படுத்த முடியாத கையாலாகாத டிடெக்டிவ். ஒரே ஆதாராமாகக் கிடைக்கும் கால்தடத்தையும் பாதையில் செல்லும் வண்டி அழித்துச் சென்றுவிட கையைப்பிசைகிறான்.  இந்த டிடெக்டிவும் இன்னும் இரண்டு டிடெக்டிவ்களும் சேர்ந்து துப்புத் துலக்க முயல்கின்றனர். கொலைகள் தொடர்கின்றன. விசாரணையின் முடிவு என்ன என்பதுதான் மொத்த திரைக்கதை.

படத்தின் தரத்தினை கூறுவது முதல் டிடெக்டிவை முன்வைத்து பகடி செய்யப்படும் விசாரணை முறைகள். முதல் டிடெக்டிவும் அவன் உதவியாளனும் சேர்ந்து ஒரு மன நிலை பிறழ்ந்தவனை அடித்துத் துன்புறுத்தி கொலை செய்தது தாந்தான் என ஒப்புக்கொள்ளவைக்கிறார்கள். தலைகீழாகத் தொங்கவிட்டு , வாய் திறக்கும்போதெல்லாம் மிதிமிதியென மிதித்து, டிடெக்டிவ்கள் அருகில் வந்தாலே இந்தக் கொலை மட்டுமல்ல, இதுவரை நடந்த எல்லாக் கொலைகளையுமே தானே செய்ததாக ஒத்துக்கொள்கிறான் மன நிலைபிறழ்ந்தவன். மேலும் அழிந்துவிட்ட கால்தடத்திற்கு பதிலாக, டிடெக்டிவே மன நிலை பிறழ்ந்தவனின் காலணிகளை எடுத்துப்போய் கொலை நடந்த இடத்தினருகே பதித்து புகைப்படமும் எடுத்துக்கொண்டு வருகிறான். இப்படி படம் முழுக்க நுட்பமான பகடிகள்.

மூன்றாவது புதிதாய் வந்த டிடெக்டிவ் மெல்ல மெல்ல கதையை மாற்றி தன் தோளில் சுமக்கத் தொடங்குகிறான். தொடர் கொலைகளுக்கு நடுவிலிருக்கும் அதிகமாய் கவனிக்கப்படாத ஒற்றுமைகளின் முடிச்சுகளை அவிழ்க்கிறான். எல்லாக் கொலைகளும் மழை நாளில் நடந்திருக்கின்றன. பெண்கள் உள்ளாடையால் வாய் கட்டப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். கொலை நடக்கும் நாள்களிலெல்லாம் வானொலியில் ஒரு குறிப்பிட்ட பாடல் நேயர் விருப்பமாக ஒலிபரப்பப் படுகிறது. ஒரு சுவாரசியமான வெகுஜன மர்ம நாவலைப்போல் மெல்ல மெல்ல அவிழ்கிறது முடிச்சுகள்.

புதுடிடெக்டிவ் முடிச்சுகளை அழித்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் பழைய டிடெக்டிவ்கள் இன்னும் அபத்த சிந்தனைகளுடனே அலைகிறார்கள். முட்டாள்தனமான முடிவுகளுடன் சம்பந்தமில்லாத இடத்திற்கு போய் சம்பந்தமில்லாதவற்றை நோண்டிக்கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட திருப்பதியில் மொட்டை அடித்தவன் என ஊர் நாட்டுப் பக்க நகைச்சுவையில் சொல்வோமில்லையா அப்ப்டி ஒரு நிலையில், கொலை செய்தவனின் முடி பிணத்தில் இல்லை எனத் தெரிந்து மொட்டை அடித்தவன் கொலை செய்திருக்கலாமென்றும் புத்த பிட்சுவாயிருக்கலாம் என்றும் முடிவுக்கு வருகிறார்கள். அது குறித்த காட்சிகளும் அவர்களின் தேடலும் புன்னகை வரவழைப்பவை.

பழைய டிடெக்டிவ்களுக்கு கொலைகாரனை கண்டுபிடிப்பதைவிட வழக்கை முடித்து பரணில் போடுவதிலேயே அதிக ஆர்வமிருக்கிறது. புதிய டிடெக்டிவைப்பார்த்து ”இப்படியெல்லாம் உன்னால் யோசிக்க முடியாது. என் அனுபவமும் ஒரு காரணம்” என அவர்கள் சொல்லும் காட்சியும், பழைய குற்றவாளிகள் அனைவரையும் நேரில் வரிசையாகப் பார்த்து ‘கண்ணைப்பார்த்தே கொலைகாரனை என்னால் கண்டுபிடிக்க முடியும்’ என பீற்றிக்கொள்ளும் காட்சியும் நுண்ணிய நகைச்சுவை. எத்தனை அபத்தமானது நமது விசாரணை முறைகள். எத்தனை வேகத்தில் விசாரணையிலிருப்பவர்கள் வழக்கை முடிப்பதில் ஆர்வமாயிருக்கிறார்கள் என சின்னச் சின்ன காட்சிகளில் போகிற போக்கில் பின்மண்டையில் அடித்துவிட்டுப்போகிறார்கள். கடைசியில் கொலையாளியை நெருங்கிவிட்டோமென ஒருவனை நெருக்கிப்பிடித்து கைது செய்யப்போகையில் அவன் இல்லை எனத் தெரிகிறது. அதைத்தவிர படத்தில் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. கொலை காரர்கள் எல்லாரும் கிடைத்துவிடுகிறார்களா என்ன?

படத்தில் குறிப்பிடத் தகுந்த இன்னொரு முக்கிய அம்சம் உளவியல் ரீதியிலான சிறுசிறு விவரணைகள்,. பழைய டிடெக்டிவ்கள் அடித்து உண்மையை வரவழைக்க முயல்கையில் புதிய டிடெக்டிவ் பொறுமையாக இருக்கிறான். இவர்களின் முட்டாள்தனங்களை சித்ரவதைகளை எந்த ஒரு ஆர்வமின்றி புன்னகைத்து கடந்து போய்விடுகிறான். பின்னாளில் இவனே அலைந்து திரிந்து  கண்டுபிடித்த குற்றவாளி கொலைகாரனில்லை எனத் தெரியவரும் போது , அதை நம்பாமல் தன் விசாரணையின் மீதான நம்பிக்கையில் மூர்க்கமடைகிறான். உண்மையில் புதிய டிடெக்டிவ் அனுபவம் அடைந்துவிட்டான். பழைய டிடெக்டிவ்களைப்போலாகிவிடுகிறான் என்பதுதான் இதன் உள்ளர்த்தம் அல்லவா?

இதை எப்படி யுத்தம் செய் படத்துடன் ஒப்பிடுவது? தொடர் கொலைகள். மூன்று டிடெக்டிவ். இதைத்தவிர இரண்டு படங்களுக்கும் பொதுவான அம்சங்களை எப்படி நிறுவுவது. ஒன்றுமேயில்லை. கொலைகளின் பின்புலம், விசாரணை முறைகள், எல்லாமே வேறு வேறு. எதோ எங்கயோ படித்துவிட்டு சும்மா போகிற போக்கில், மிஷ்கின் காப்பி அடித்தார் என அடித்துவிட்டால் தன்னையும் பெரிய ஆளாக நிறுவிக்கொள்ள எத்தனிக்கும் சிறுபிள்ளைத் தனத்தைத்தவிர இரு படங்களையும் ஒன்று, காப்பி, குளோனிங்க் என புலம்ப எந்த முகாந்திரமும் இல்லை.

உணமையில் மெமரிஸ் ஆப் மர்டர் திரைப்படத்திலேயே சிலாகித்துச் சொல்லுமளவு கலையம்சம் எனபெரிதாய் ஒன்றுமில்லை அந்த அபத்த விசாரணை குறித்த பகடிக் காட்சிகளைத் தவிர்த்து, படம் ஒரு வெகுஜன மர்மத்திரைப்படம் அவ்வளவே.