பெரியாத்தா புள்ளைக்கு
நேத்திக்கு சடங்காம்
திண்ணைக்கிழவிகளுக்கு
பேசுவதற்கு
எத்தனையோ கதைகள்

உறைக்குதயிர் குடுங்க
காப்பிப்பொடி இருக்கா
முதல்கட்டு கிழவிகளுக்கு
கடன் வாங்க
ஆயிரம் சாக்கு

வேகாத வெயில்ல
தாகத்துக்கு பைனி குடுத்தியே
நாக்குச்செத்தப்ப
கொட்டப்பாக்கு உடைச்சியே
நடுவீட்டுக் கிழவிக்கு
ஒப்பாரி வைக்க
ஒரு நூறு நிகழ்ச்சிகள்

திண்ணைகள் பாக்குகள் கிடைக்காத
நகரத்தில்
சாவிற்கு அழுவதற்குக் கூட
ஆளில்லை எவருக்கும்.
o

கண்ணகி தெரியுமா?
புருஷனுக்காக நாட்ட எரிச்சா
சாவித்ரி தெரியுமா?
எமன் கூட சண்டபோட்டா
இம்புட்டு ஏன்
எங்காத்தா
எனக்காக பட்டினி கிடந்தா
எல்லாஞ்செரி
ஆம்ளைக்கு செய்ற பொம்பள கதையா
இருக்கே வேற இல்லையான்னு
கேட்டப்ப
என்னாத்த சொல்றது நான்?
o

எங்கூரு செல்லத்தாயிக்கு
பேர் அன்ட் லவ்லி தெரியாது
எல்லா உறுப்பையும்
வச்சு கவிதை எழுதத் தெரியாது
எந்துணி என் இஷ்டம் கண்ண மூட்றா
கபோதின்னு இறங்கி
அடிக்கத் தெரியாது
அவளையும் யாருக்கும் தெரியாது
குளிக்கையில எட்டிபார்த்தவன
அருவாமனையால வெட்டிட்டு
ஜெயிலுக்கு போற வரைக்கும்.
o
பொண்ணுங்க பிரச்சினைக்கு
முன்னாடி மேடை ஏறுறவன்
முத்துசாமி
நெஞ்சத்தட்டி கையத்தூக்கி
பெண்கள் நம் கண்கள்னு கத்துவான்
ஊர்ல மொத பொறந்த
பொண்ணுல இருந்து
மொத மொதலமைச்சர் வரைக்கும்
எல்லார் பேரும் தெரியும்.
இந்த வரிசையில் தேவைஇல்லாத
ஒரு விஷயம்
ஊருக்கு ஒரு வப்பாட்டின்னு
மொத்தம் பதினெட்டு உண்டு அவனுக்கு.
o
இப்படி பெண்கள்
தின எழுத்தைப் படித்துவிட்டுதான்
கோபப்பட்டாள் கெளரி
உன் எந்தத் தவறுக்கும்
நான் காரணமில்லை என்றாள்
உன் எந்தச் சரியாதலுக்கும் தான்
எனச் சேர்த்துக்கொண்டாள்
காரணங்கள் ஒழியட்டும்
காரியங்களுக்கு பதில் சொல் என்ற
கடைசிக் கேள்விக்கு
அவள் தந்த
மெளனத்தைத்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
oOo