மெல்வினுக்குக் குழப்பமாக இருந்தது. கொஞ்சம் பயமாகவும். நிழல் நீல நிறத்திற்கு மாறுவது என்பது முற்றிலும் புதிய பிரச்சினை. அனுபவித்திராத பார்த்திராத கேள்விப்பட்டிராத புதிய பிரச்சினை. உடன் தங்கியிருந்தவன் ஊருக்கு கிளம்பிப்போகும்போது வழியனப்பச் சென்றவன் திரும்பி அறைக்குள் நுழையும்போது நிழல் நீல நிறத்தில் இருப்பதைப்பார்த்தான். வழக்கமாய் மங்கிய கருப்பு நிறத்தில் இருக்கும் நிழல் அன்று நீல நிறத்திற்கு மாறி இருந்தது. இரவு நேரமெனபதால் நிழல் வரவே சாத்தியமில்லை எனும்போது நீல நிறத்தில் அவன் அசைவுகளுக்கு ஒத்து கால்களில் கட்டப்பட்டதைப்போல் உடன் அலையும் நிழலை என்ன பெயர் வைப்பதெனத் தெரியாமல் நிழல் என்றே நினைத்துக்கொண்டான். தனியே எரிந்து கொண்டிருந்த இரவு விளக்கை அணைத்துப்பார்த்தான். விளக்கின் ஒளிக்கற்றை மாற்றங்களால் நீலம் தோன்றியிருக்கலாம் என. விளக்கு எரியும் போது மங்கிய நீலமாக இருந்தது, விளக்கை அணைத்து இருளில் நுழைந்ததும், அடர் நீலத்திற்கு மாறியது. பயந்து போய் மறுபடியும் இரவு விளக்கைப்போட்டான். குழல் விளக்கை போட்டபோது நீலம் இன்னும் தெளிவாகத் தெரிய குழல்விளக்கை அணைத்துவிட்டான். நீண்ட நேரம் நிழலைப்பார்த்தபடியே நின்றுகொண்டிருந்தான்.

அறையில் தனியாக இருப்பதில் அவனுக்கு எந்தத் தொந்தரவும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இருபத்துமூன்று வருடங்களில் அவனது பெரும்பான்மை வாழ்க்கை தனியறையில் அடைக்கப்பட்டு அல்லது அடைபட்டு கழிந்திருக்கிறது. தனிமை நினைவுதெரிந்த காலத்திருந்தே தொடங்கியது. அப்பா அம்மா கிடையாது. அல்லது அவனை ஒதுக்கி வைத்த்துவிட்டார்கள் அல்லது இவன் ஒதுங்கிக்கொண்டான். படித்தது பாட்டி வீட்டிலிருந்து. பாட்டிக்கு கண் தெரியாதா அல்லது இவனைத்தெரியதா என்பது தனியாக எழுதவேண்டியவிஷயம். இருந்தாலும் தனியறை. புத்தகங்கள் புத்தகங்கள் மேலும் புத்தகங்கள். பாடபுத்தகங்கள். வார மாதாந்திர இதழ்கள். நூலகத்தில் கடன் வாங்கிய இதழ்கள். பக்கத்த்துவீட்டில் திருடிய புத்தகங்கள். நண்பர்கள் கொடுத்த மற்றும் பிடுங்கிக்கொண்ட அரைகுறை ஆடையில் பெண்கள் விதவிதமாய்க்கிடைக்கும் நாலாந்தர இதழ்கள். எல்லாவித புத்த்தகங்கள் இறைந்து கிடக்கும் அறையில் தாளுடன் தாளாய் தானாம் புரட்டப்பட மின்விசிறி சத்தத்தைக் கேட்டுக்கொண்டே எதைஎதையோ நினைத்துக்கொண்டும் சில நேரங்களில் எதைப்பற்றி நினைக்காமலும் படுத்துக்கிடந்திருக்கிறான். தனிமை மெல்வினின் பிரச்சினையில்லை. .

யார்மீதும் எந்த வெறுப்பும் இல்லாததைப்போலவே மெல்வினுக்கு யார் மீதும் எந்த விருப்பும் கூட கிடையாது. தனியறை. மின்விசிறி சத்தம். பின்ன்னிரவு விழிப்பு. புத்தகங்கள். இதனுடனே வாழ்ந்து இதைத்தவிர எதன் மீதும் எந்த ஆர்வமும் அற்றே போய்விட்டது. மின்சாரம் இல்லாத இரவுகள் ஒரு மூர்க்கமான மிருகத்தைப்போல் குணம் கொண்டு விடுவான். அருகிலிருந்து பேசிக்கொண்டிருப்பவனுடன் சிரித்தபடி இருந்தாலும் மெல்வினுக்குள் மிருகம் மூர்க்கமாக அலைந்து கொண்டுதான் இருக்கும். தீக்குச்சியைப் பற்றவைத்து நெருப்பில் வழியாக ஆள்காட்டி விரலைச் செலுத்தியபடியே பேசிக்கொண்டிருப்பான். சதைப்பற்றுள்ள கோழியை ஒரு வார பட்டினிக்குப் பிறகு தின்பவனைப்போல் வெறியுடன் நகங்களைக் கடித்துக்கொண்டிருப்பான். அரைமணி நேரத்திற்கு ஒரு சிகரெட் வீதம் கணக்கில்லாத எண்ணிக்கையில் சிகரெட்டுகளை ஊதித்தள்ளுவான். மீண்டும் மின்சார வெளிச்சம் அறையில் பாயும்போது மிருகம் இருட்டுடன் சேர்ந்து தொலைந்தே போயிருக்கும். சிகரெட் துண்டங்கள் சுற்றிக்கிடக்க அமர்ந்திருக்கும் மெல்வினின் முகத்தில் யோகியின் கண்கள் ஒளிரும். எதோ ஒரு மரணத்திலிருந்து விடுபட்டவனைப்போல, ஆபத்து விலகியவனைப்போல அத்தனை ஆசுவாசமாய் தண்ணீர் குடித்துவிட்டு படுக்கையில் வந்து விழுவான். மின்விசிறி சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருக்கும் அறையில் மீண்டும் வந்து சேரும்போது இளமைக்குத் திரும்பிய கிழவனைப்போல அத்தனை நிம்மதி அவனுள் குடிகொள்ளும். இப்போதைய பிரச்சினை மின்சாரம் அல்ல. நிழல்.

பிரச்சினை மூன்று நாள்களுக்கு முன் சரியாய் மூன்று நாள்களுக்கு முன் தொடங்கியது. இரண்டு பேர் பகிர்ந்து கொண்டிருக்கும் அறையில் தங்கியிருக்கிறான். அவன் பாட்டியைவிட்டோ பெற்றவர்களை விட்டோ வந்து நான்கு ஆண்டுகள் ஆகிறது. தனிமை இன்னும் தொடரத்தான் செய்கிறது. மிருகம் அப்படியே இருக்கிறது. இடையில் ஒரு முறை ஒரு பெண்ணிடம் ஈர்க்கப்பட்டு முயற்சி பாதியில் வெட்டப்பட மிருகம் இன்னும் வளர்ந்து முழு மூர்க்கத்துடன் மனதுக்குள் அலைந்து கொண்டிருக்கிறது. வெளியில் தெரியாதவாறு சமாளிப்பதில் பெருமளவு வெற்றி பெற்று விட்டான். மெல்வினின் வாழ்க்கையில் முக்கிய பயம் மிருகம் குறித்ததே. இப்படி ஒரு மிருகம் இருக்கிறது என்பதைவிட வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதில்தான் முழுக்கவனம். கொஞ்சம் வாசிப்பும் எழுத்தும் இருப்பதால் தான் விரும்பும் பிம்பத்தை தானே படைத்துக்கொள்ள முடிந்தது. மீறிய சந்தோஷமாய் இருப்பதைப்போலவும் கொள்ளாத துக்கத்தில் இருப்பதைப்போலவும் ஒரே நேரத்தில் எழுதுவான். மன நிலையைப்புரிந்து கொள்ள முயல்பவர்களிடம் இதில் இல்லாத இன்னொரு பிம்பத்தை வடிவமைத்துக்காட்டுவான். நான் என்பது நான் உனக்குக்காட்ட விரும்பும் பிம்பம் என்பதே மெல்வினின் கொள்கை. ஒவ்வொருவருக்கும் மெல்வினைப்பற்றி ஒவ்வொரு கருத்து. எல்லாமே மெல்வினே தனக்குத்தானே உருவாக்கிக்கொண்டது. அல்லது அந்தந்த நேரத்தில் மிருகம் அவனை ஆட்டிவைக்கும்படி ஆடிக்கொண்டிருக்கிறான் என்றும் சொல்லலாம்.

மெல்வின் இப்படித்தான் எதைப்பற்றியாவது ஆரம்பித்து எதையாவது எழுதிக்கொண்டிருப்பான். என்ன எழுத ஆரம்பித்தான் என்பதை மீண்டும் ஒருமுறை பக்கத்தைப்புரட்டிப்பார்த்துவிட்டு மறுபடியும் ஆரம்ப்பித்த விஷயத்திற்கு வந்தான். நிழல். நீல நிழல். முதல்முறையாக நிழலைப்பார்க்கும்போது ஒரு நிமிடம் திடுக்கிட்டான். பிறகு துணி எதாவது கிடக்கலாம் என நினைத்து கீழே குனிந்து எடுக்க முயலும்போது அது அவனது நிழல் என்பதே புரிந்தது. மெல்வின் குனிந்து எடுக்க வந்தபோது நீல மனிதன் தரையின் மறுபுறத்திலிருந்து குனிந்து விரலைத்தொட வந்தான். மெல்வின் திடுக்கிட்டு எழுந்தபோது நீல மனிதனும் பழைய நிலைக்கு மீண்டான். மெல்பினுக்கு நீச்சல் குளமொன்றின் தண்ணீர் பரப்பின் மீது நிற்பதைப்போலவும், மறுபுறம் நிழல் ஒன்று காலுக்குக் கீழ் நிற்பதைப்போன்றும் தோன்றியது. சில நொடிகள் கண்ணாடித்தரை மீது நிற்பதைப்போலவும். இருந்தாலும் காலுக்குக்கீழுள்ள மனிதனின் முகம் தெளிவாகத்தெரியாமல் நீலம் பூசி இருந்ததால் நிழல் என்ற முடிவுக்குத்தான் வரவேண்டியிருந்தது.

குழப்பங்களில் முக்கியமான ஒன்று மற்ற நிழல்களைப்போலல்லாமல், நீல நிழல் செங்குத்தாக காலுக்குக் கீழ் விழுந்ததுதான். மற்ற நிழல்கள் இப்படி இருப்பதில்லை. சூரியன் அல்லது வெளிச்சத்தின் திசைக்கேற்ப நிழல் தன்னைத்தானே மாற்றிக்கொள்வதைப்போல அல்ல. 90 பாகையில் செங்குத்துக் கீழாக நீல நிழல் விழுந்தபடி இருந்தது. தனியே இருப்பதில் இப்படி ஒரு பிரச்சினை இருப்பது இப்போதுதான் தெரியும். இதுவரை அவன் இந்த மாதிரி அனுபவித்ததில்லை. தன் நிழல் மீதிருந்த கவனத்தை வேறு எதெதிலோ திருப்ப எத்தனித்தான். ஒரு சிகரெட் பிடித்தான். பாதி சிகரெட்டில் சாம்பலைத்தட்டும்போது தற்செயலாக கீழே பார்த்துவிட இவன் தட்டிய சாம்பலும், நிழல் மனிதன் தட்டிய சாம்பலும் எதிரெதிர் திசையில் புறப்பட்டு தரைப்புள்ளியில் மோதிக்கொண்டது. சிகரெட்டை எறிந்துவிடலாம் என கதவைத்திறந்தான். மணி நள்ளிரவு 2.30ஐத்தாண்டி இருந்தது. தெருவில் நாய் கருப்பாக எதையோ கவ்விக்கொண்டு ஓடியது. சிறிய கோழிக்குஞ்சோ பழைய காலணியாகவோ இருக்கலாம். சிகரெட்டை எறிந்துவிட்டு அறைக்குள் நுழைந்த போது நிழலும் அப்போதுதான் இவனுடன் சேர்ந்து நுழைந்தது.

ஜன்னல் வழியாக மறுபடி வெளியில் எட்டிப்பார்த்தான். பக்கத்துவீட்டின் இரவு விளக்கு கம்பிக்கோடுகளால் பிரிக்கப்பட்டு மெல்வின் வீட்டின் திண்ணையில் விழுந்து கொண்டிருந்தது. எதையோ நினைத்து சிரித்துக்கொண்டான். திரும்பியபோது நிழல் காலுக்கு கீழிருந்து மறுபடியும் எட்டிப்பார்த்தது. எத்தனை நாளுக்கு எத்தனை வருடங்களுக்கு இந்த அவஸ்தை எனத் தோன்றியது. அறை நண்பன் திரும்பி வந்ததும் நிழல் போய்விடும் என்றுகூடத் தோன்றியது. நிழலுடன் கொஞ்சம் கொஞ்சமாய் சினேகமாய் மாறிவிடலாம் என நினைத்தான். ஆள்காட்டி விரலையும் சுண்டு விரலையும் மேல் நோக்கி வைத்து மற்ற விரல்களை பெருவிரலுடன் சேர்த்து வைத்து குனிந்து பார்த்தான். மான் நீல நிறத்தில் நின்றிருந்தது. இன்னும் சில பிம்பங்களை உருவாக்கியபடி இருந்தான். மெல்வினின் எதோ ஒரு பழைய நாளில் மீண்டும் நுழைந்தது போல் இருந்தது. நீல மனிதன் இன்னும் சினேகமாய் நெருங்கிவந்துவிட்டதைப்போல் தோன்றியது.

மெல்வின் இரவெல்லாம் நீல மனிதனுடன் விளையாடிபடி இருந்தான். புதிய அறைத்தோழனைப்போல, அறையில் இணைந்து கொண்ட குழந்தையைப்போல. முதல் முறை சண்டையிடும் எதிரியைப்போல செல்லக்கோபத்துடன் சண்டைகூட போட்டுப்பார்த்தான். தலையை நன்கு குனிந்து கொண்டு விரல்களை மடக்கி தரையில் கொட்டும்போது நீல மனிதனின் தலையில் கொட்டுவது போல் இருந்தது. கை வலித்தது. தலையைத்தடவிக்கொண்டான். நீலன் தன் கொட்டிற்கு வலித்து தலையைத் தடவிக்கொள்வது சந்தோஷமாக இருநதது. நீண்ட நேரம் விளையாடிவிட்டு நீல மனிதனுடனே படுத்துக்கொண்டான். இந்த முறை குழல்விளக்கை ஒளிரவிட்டான். அடர் நீலத்தில் அருகில் நீல நிழல் படுத்திருந்தது. தோளில் கைபோட்டபடி நீண்ட கதைகளை பழைய வலிகளை இதுவரை செய்த துரோகங்களைப்பற்றி பேசிக்கொண்டிருந்தான், எப்போது என்று தெரியாமல் உறங்கி, மறு நாள் எழுந்த போது நீல நிழல் இல்லை. எல்லா அறைக்குள்ளும் நுழைந்து பார்த்தான். எல்லா விளக்கும் அணைத்தும் எரித்தும், விதவித சாத்தியக்கூறுகளில் நிழலைத் தேடியும் கடைசிவரை கிடைக்கவேயில்லை. திடுமென மெளனியின் ‘ எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்’ வரி நினைவின் மேலடுக்குக்கு வர மெல்வின் உதட்டைக் கடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தான்.

நன்றி – உயிரோசை