பெருமாள்முருகன். எனக்குப் புதியவர். இதுவரை இவரது படைப்புகள் எதுவும் படித்ததில்லை. நண்பர்கள் திரும்பத்திரும்பச் சொல்லி., கூளமாதிரியை வாங்கி அலமாரியில் உறங்குகிறது. சிறுகதைகளை வாசிப்பதில் சில செளகரியங்கள் இருக்கிறது. கிடைத்த இடைவெளியில் ஒவ்வொரு கதையாகப் படிக்கலாம். பொட்டிதட்டும் தொழிலில், நள்ளிரவில் வீடு திரும்புபவனின் நாளில் சிறுகதைக்கு நேரம் கிடைப்பதே அரிதுதான் இல்லையா?

தொகுப்பிலுள்ள பதினான்கு கதைகளிலும் மலம் அல்லது கழிப்பறை பொதுவான காட்சியாக இருக்கிறது. ஆனால் கரு எந்தக் கதையிலும் மலம் அல்ல. விலக்கப்பட்ட கதைகளைச் சொல்வதுதான் இலக்கியம் என்றால், இதுவும் இலக்கியமே. வெறும் அதிர்ச்சி மதிப்பீட்டிற்கான நடிப்பு என்றால் அதையும் ஏற்றுக்கொள்ளலாம். இல்லை, எல்லா களங்களைப்போலவே இதுவும் ஒரு துண்டு வாழ்க்கை என்றால் அதற்கும் அடங்கிப்போகும். எல்லாக் களங்களையும் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டு எல்லா நாற்காலிகளிலும் உரிமையுடன் அமரும் படைப்பு வாசித்துத் தீர வேண்டிய இடத்தில் வைக்கப்படவேண்டியது. இந்தத் தொகுப்பும் அப்படியே.

நகரத்தின் நெருக்கடியை முகத்தில் அறையச் சொல்லும் கதைகளின் தொகுப்பில் முதலில் வைக்கப்படவேண்டியது ‘பீவாங்கியின் ஓலம்’ சிறுகதை. நகரத்தின் புதிதாக மணமுடித்து வந்த பெண்ணொருத்தி மீந்துபோகும் சோற்றைக் எங்கு கொட்டுவது எனத் தடுமாற்றமடைகிறாள். கழிப்பறையில் கொட்டும் நகரத்து கணவனின் செய்கை இவளுக்கு உறுத்திக்கொண்டேயிருக்கிறது. பெரும் வாயத்திறந்து எல்லாவற்றையும் விழுங்கும் ராட்சசனைப்போல் உணர்கிறாள் நாள்களின் நகர்தலில். இதை வெறும் சின்னக் கதையாய் நினைத்து விலகிப்போகலாம். அல்லது கொஞ்சம் விரிக்க்லாம். எல்லாவற்றையும் தின்று செரிக்கும் கழிப்பறைக்குழி என்ன சொல்லவருகிறது., ஒரு கழிப்பறைக்குழியில் பெண் விழுந்து இறந்து போவதை ஏன் சொல்லவேண்டும். நகரமே ஒரு கழிவறைக்குழி இல்லையா? குப்பைகள் மாசுகள் ரசாயனங்களின் குழி. இதில் தன்னைத் தொலைக்கும் ஒரு கிராமத்து மனுஷி என விரிக்கும்போது எப்படி இருக்கிறது கதை?

ஒரு கெட்ட பழக்கமுண்டு. பறக்கும் ரயிலிலோ அல்லது நகரத்தின் பாதைகளிலோ கூவத்தைக் கடக்கும்போது மூக்கைப்பொத்தி கடந்து போவீர்கள். அப்பொழுது கொஞ்சம் கண்ணைத் திறந்து அதைச் சுற்றியிருக்கும் மனிதர்களைப் பார்க்கும் பழக்கம் எனக்கு உண்டு. கூவத்தின் கரையிலும் சில மனிதர்கள் குடிசைக்குள் இருக்கிறார்கள். பத்து மணி நேரம் தூங்கினாலும், பதினைந்து நிமிடம் மூகைப் பிடிக்காமல் கடக்க முடியாத அந்த இடத்தில்தான் பதினான்குமணி நேரம் உயிரோடு இருக்கிறார்கள். எட்டு வயது 10 வயதுச் சிறுவன்கள் ஒருவரை ஒருவர் துரத்திக் கொண்டிருந்தை பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு நாற்றத்தைப் பிரித்தறியும் செல்கள் அழிந்துவிட்டனவா அல்லது அதையெல்லாம் நாற்றம் என மூக்கைப்பொத்தும் கலாச்சாரம் அவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்படவில்லையா?

நெடுந்தொலைவுப் பயணங்களில் கழிப்பறைகளைப் பார்த்திருக்கிறீர்களா. ஆக மோசமான அத்தனை வியாதிகளையும் உற்பத்தி செய்து பரப்பி விடும் அந்தக் கழிப்பறையில்தான் ஒரு 55 வயது பெரியவர் வெளியில் ஒரு மேஜையில் சில்லறைக்காசுகளுடன் அமர்ந்திருப்பார். பல்லடுக்கு அங்காடிகளில் பளிக்குக் கழிப்பறைகள் திறந்து கிடக்கும் இதே நகரத்தில்தான் ஆக மோசமான கழிவறை வாசலில் ஒருவன் ஒரு ரூபாய்க்கும் இரண்டு ரூபாய்க்கும் காத்துக்கிடக்கிறான் எப்பொழுதாவது அந்த மனிதர்கள் நமது கவனத்திற்கு வந்திருக்கிறார்களா? அவர்களைக் கவனப்படுத்துவதும்தான் இந்தத் தொகுப்பின் நோக்கம் என்று சொல்லுவேன்

’சந்தனச்சோப்பு’. சிறுகதை இப்படிப்பட்ட ஒருவனைத்தான் பேசுகிறது. ஒரு பெரு நகரத்தின் கட்டணக்கழிப்பறைக்குள் நுழையும் விற்பனைப்பிரதிநிதி அங்கேயே வேலை செய்யும் தன் ஊர் சிறுவனைச் சந்திக்கிறான். பட்டணத்தில் வேலை வாங்கித் தருவதாய்ச்சொன்ன பெரியவர் இதில் சேர்த்ததாகவும், இந்த வேலை பிடிக்கவில்லை என்றும் சொல்கிறான் சிறுவன். விற்பனைப்பிரதிநிதி சொந்த ஊருக்கும் போகாமால், சிறுவனைப்பற்றி அவன் வீட்டுக்கும் தெரிவிக்காமல் ஊர் ஊராய்ச் சுற்றிவிட்டு திரும்பி இதே இடத்திற்கு குற்றவுணர்ச்சியுடன் வரும்போது அந்தச் சிறுவனை எதிர்கொள்கிறான். விற்பனைப்பிரதிநிதி சிறுவனுக்குச் செய்யும் நன்மை ஒரு சந்தன சோப்பு வாங்கிக்கொடுப்பது.

தொகுப்பின் எல்லாக் கதையிலும் மலம் இருக்கிறது. ஆனால் சொல்ல வருவது அது இல்லை. எல்லாக் கதைகளிலும் புன்னகைக்கவோ வெடித்துச் சிரிக்கவோ நகைச்சுவை இழையோடுகிறது. சொல்லவருவது இதுவும் இல்லை. எல்லாக் கதைகளிலும் ஒரு வலியிருக்கிறது. ஆனால் எந்தக் கதையும் அந்த வலியை நேரடியாகச் சொல்வதேயில்லை. படுக்கையில் கிடந்த கிழவி, சீலையில் மலம் கழித்து, மகளிடம் திட்டு வாங்கி, அன்றிலிருந்து உண்ணாமலிருந்து இறந்து போகும் ‘மஞ்சள் படிவு’ ஆகட்டும்., நரகல்தின்று செய்வினை செய்யும் மந்திரவாதியாகும் ‘பிசாசுக்குப் போதுமான விஷயம்’ கதையாகட்டும், கிராமத்தில் முதல் முறை கழிப்பறை கட்டி, இறுதியில் கிழவியே பூட்டுபோடும் ’கருதாம்பாளை’ கதையாகட்டும், இவற்றில் சொல்லவருவதை எந்தக் கதையும் நேரடியாகச் சொல்வதில்லை, இதை வெறும் பீக்கதைகள் என ஒதுக்குவதைவிட, கழிவுகளும் சேர்ந்த உடலைக் கவனப்படுத்துகின்றன. கழிவுகள் சுமந்த மனங்களை. கழிவுகள் நிரம்பிய நகரத்தை. கழிவுகள் நக இடுக்கின் அழுக்கைப்போல, நடு நகரில் ஓடும் கூவத்தைப்போல, வாழ்ககையின் அங்கமாகிவிட்டன, கவனிப்பதில்லையெனச் சொல்லிக் கடந்து போகிறோம் தேர்ந்த நடிகனைப்போல. முகமூடியைக்கிழித்து, நம் அவலங்களை கண்முன் எடுத்துக் காட்டும் வேலையைச் செய்ய முயல்கிறது பெருமாள் முருகனின் பீக்கதைகள்.

நினைவிற்கு வந்தவை:

1. என் காதலி கூட காலையில் கக்கூஸிற்குத்தான் போகிறாள் – கோபிகிருஷ்ணன் ( டேபிள் டென்னிஸ்)

2.

ராமருக்கு வேண்டும்

கோயில்

பாபருக்கு வேண்டும்

மசூதி

ஜனங்களுக்கு வேண்டும்

சுகாதாரமான கழிப்பறைகள்"

– மனுஷ்ய புத்திரன் ( என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்)

3.

இரண்டு நிமிஷத்திற்கு ஒரு இரயில்

அறிவித்தார் அமைச்சர்.

அச்சப்பட்டார்கள் – என் அம்மாக்கள்

அடிக்கடி எழுந்துநிற்கும்

அவஸ்தையை நினைத்து..

– புதியமாதவி ( நிழல்களைத் தேடி)

நன்றி அதீதம்