கொடி பறக்கும்
மரத்தின் மேலிருந்து பறந்து
சென்ற பறவை கனவிலிருந்து
வெளியேறுவதில்லை

பூனை நடந்துபோகும்
நாற்காலிக்கு நடுவில்
விழுந்து கிடக்கும்
நிழல் நானெனத் தோன்றும்
கனவின் மயக்கத்தில்.

குதிரைகள் மேயும்
ஆற்றங்கரைகளின்
மஞ்சள் வெயில்
நிஜத்திலும் எப்போதாவது
எதிரில் வரும்

மேற்சொன்ன வரிகள்
கனவில் வரும்போது
எல்லாம் என் விருப்பம்
என முடியும்.