நன்றி – உயிரோசை

முதன்முதலில்
மரணத்தைச் சந்தித்தபோது
வயது பதினான்கு

நாய்க்குப் பயந்து
ஓடி
தெருக் கல்லில் மோதி
உயிரிழந்த கிழவிக்கு
வயது அறுபது இருக்கலாம்

மண்ணில் கலந்து
உறைந்து போன
குருதி
இன்னும் கனவில் வருகிறது

அறுபதிற்கும்
பதினான்கிற்குமான
இடைவெளியைச் சுமந்தபடி.

o

அழிந்துகொண்டிருக்கும்
இனம் என
தினம் ஒரு பறவையச்
சொல்கிறார்கள்
வாரம் ஒரு மிருகத்தை
மாதம் ஒரு கடல்பிராணியை

எப்போதோ அழிந்துவிட்ட
மனிதத்தை
யாரும் எங்கும் பேசுவதில்லை.

o

பொதுமி அழியும்
உறிஞ்சுதாளைப்போல
முழுதுமாய் மறைக்கப்பட்டிருக்கின்றன
நினைவில் தங்கிய தோல்விகள்

உறிஞ்சுதாளின் ஈரம்
காய்வதுமில்லை
உறைவதுமில்லை.