உண்மைகளைப் பகிர்ந்துகொள்கிறேன்

உங்களுடன்

பார நீக்கியைப்போல

பாவ மன்னிப்பைப்போல

தோள்சாய்ந்த உறவைப்போல

மருத்துவ ஆலோசனையைப்போல

உண்மைகளை வரவழைக்கிறீர்கள்

என்னிடமிருந்து

பார நீக்கியைப்போல

பாதிரியாரைப்போல

உறவைப்போல

மருத்துவரைப்போல

பிறகு

என் ரகசியங்களை வைத்துக்கொண்டு

ஒரு எழுத்தாளராகிறீர்கள்

கதை எழுதுகிறீர்கள்

ஒரு கவிஞனாகிறீர்கள்

சோகக் கவிதைகள் உங்களுக்கு உவப்பானவை

ஒரு கதைசொல்லியாகிறீர்கள்

உங்கள் நண்பர்கள்

கைகொட்டி ரசிக்கிறார்கள்

கதையல்ல உண்மையெனச்

சொல்வதற்கு வழியற்று கூனி நிற்பவன்

பிறகு வட்டங்களை

குறுக்கி வரைந்து கொள்கிறேன்

கவிதையின் வார்த்தைகளைப்போல.

0

இனி யாரிடம்

என் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்வது

ரகசியங்களைக் குவளையில் ஊற்றி

மாடியில் வைக்கிறேன்

குருவிகள் குடித்துப்போகட்டுமென

ரகசியங்களைக் கடலில்

கல்லைக்கட்டி அமிழ்த்துகிறேன்

ஆழங்களில் இனி அமைதியாய் இருக்கட்டும்

நாட்குறிப்பில் எழுதி தீயிலிடுகிறேண்

சாம்பல்கள் யார்கைக்கும் கிடைக்காது

ரகசியங்கள் ரகசியங்களாகவே

இருப்பதற்காகத்தான்

மனிதர்களிடம் பகிர்வதேயில்லை.

O

நன்றி திண்ணை