அபிக்குட்டியின் உலகத்தில்
எப்பொழுதாவது மாட்டிக்கொள்கிறேன்

யானைகளுக்கு இறக்கைமுளைத்திருக்கிறது
குருவிகள்
மயில்களை விரட்டிக்கொண்டிருக்கின்றன

அபிக்குப் பிடிக்காத
பாம்பும் கரப்பானும்
அழிந்துவிட்டிருக்கின்றன.

கடைசியாய்த் திடுக்கிடுகிறேன்

அலுவலகம் போகாமல்
அபியுடன் விளையாடிக்கொண்டிருக்கும்
அப்பாவை பார்க்கும்பொழுது.

o

எழுத்துக்களை வைத்து
விளையாடிக்கொண்டிருக்கிறாள்
அபி

கவிதையைப்போல
முடிவிலி சாத்தியங்களில்
புதிதாக உருவாகிக்கொண்டேயிருக்கின்றன
புதிய வார்த்தைகள்

எல்லாவற்றையும்
இயலாமையில் கலைக்கும்
அபி
முகம் திருப்பி
பாவமாய்ச் சொல்கிறாள்

இந்த எழுத்துக்கள்
வார்த்தைக்குள்
நிற்பதேயில்லை அப்பாவென.

o

முன்னூறு கண்கள்
கொண்ட ராட்சஷன் கதையை
படுக்கையில் விரும்பிக்கேட்பாள்
அபி

வடைதூக்கிப்போன
காக்காக் கதையை
பீட்ஸா தூக்கிப்போன
காக்காவாக
சாப்பிடும்போது சொல்லவேண்டும்

டோரா புஜ்ஜி பார்க்கும்போதெல்லாம்
அபியை சாமி வந்து
வீட்டில் விட்ட கதையைச் சொல்லவேண்டும்

நம்ப முடியாத கதைகளைச்
சொல்லி வளர்க்கிறேன் அபியை

நம்பாத கதைகளைத்
தொடர்ந்து கேட்டே வளர்கிறாள்
அபி.

o

கசகசப்பின் நடுவில்
ஓடி வந்து கழுத்தைக் கட்டிக்கொள்வாள்
அபிக்குட்டி

பேருந்து நிலையங்களில்
என் சுண்டுவிரல்
எப்பொழுதும்
அவளது
ஆள்காட்டி விரல்களுக்குள் இருக்கவேண்டும்

நண்பர்களுடன்
எதையாவது பேசிக்கொண்டிருக்கையில்
என் கால்கள் அவள் கைகளுக்குள்
கட்டுண்டிருக்க வேண்டும்

மூன்று வருடத்தில்
இவள் வந்து ஆள்வதற்காகத்தான்
முப்பது வருடம்
வளர்த்து வைத்திருக்கிறேன்
இத்தனை இடங்கள்
கொண்ட உடலை.