கொங்குத்தமிழின் லாவகம் கிட்டத்தட்ட பழகிவிட்டது. தொடர்ந்து வாமுகோமுவைப்படித்துக்கொண்டிருக்கிறேன். சாந்தாமணியும் இன்னபிறகாதல்கதைகளும், கள்ளி . இப்போது சொல்லக்கூசும் கவிதை. ஒரு எழுத்தாளரைத் தொடர்ந்து தொகுப்பாக அல்லது வரிசையாக வாசிக்கும்போது ஒரு மெல்லிய சரடு அவரின் எல்லா எழுத்துக்களையும் சேர்த்து இணைப்பதை ஒரு எளிய வாசகனால் கூட அறிந்து கொள்ள முடியும் . வாமு கோமுவின் எழுத்துக்களின் உலகம் வெள்ளந்தி மனிதர்களாலும், அடக்குமுறைகளில் வெறுப்பேறிய சாமான்யர்களாலும் நிறைந்தது. இதில் மிகுபுனைவு என்றெல்லாம் போகாமல், புனைவளவே கூட மறுத்துவிட்டு, உள்ளது உள்ளபடி நேரடி கதைகள் சொல்லும் உலகம் வாமுகோமுவுடையது.

பகடியும் , காமமும், வெகுளித்தனமும், பாசாங்கு எளிமையும் ஒரு சேரக் கொண்டவை இந்தத் தொகுப்பின் கவிதைகள் ஒவ்வொன்றும்

’இயேசு ஒரு நாள் / மொபட்டில் போவதை / வன்னாம்பாறைக்குள்  / மீன் பிடித்துக்கொண்டிருந்த  / நான் கண்ணுற்றேன்’
எனத் தொடங்கும் ’முதல் மீன் ‘கவிதை பகடிக்கு சரியான எடுத்துக்காட்டு. திருடிய மொபெட் எனச் சொல்லி இயேசுவைத் தேடிவருபவர் பாதிரியார். பெத்லேஹேம்க்கு போகிறார் எனக் கிண்டல் செய்பவன் மீன் பிடிப்பவன். ‘அப்போதுதான் எனது தூண்டிலில் முதல் மீன் சிக்கியிருந்தது’ என முடியும் கவிதையின் எளிமையோ எள்ளலோ முழுக்க பாசாங்கு மட்டுமே. தன்னளவிலேயே பெரிய அரங்கிற்கான சின்ன கதவைத் திறந்து விடும் சாவியாகத்தான் இதனைப்பார்க்கிறேன்.

’சொல்லக்கூசும் கவிதை’ தன் நிலையைச் சொல்லக்கூசும் கிழவனின் கதை. விரித்து எழுதினால் வழக்கமான வாமுகோமு சிறுகதையாக வந்திருக்கவேண்டியது. காக்கைகளும் அசிங்கம் செய்யும்கிழவனின் கதை இத்தனை கால முதியோர் இல்லங்களின் வரலாற்றை மீட்டு எழுதுவது.வாழ்க்கையை அதன் போக்கில் சில வார்த்தைகளுக்குள் சொல்லி முடிப்பதுதானே கவிதை.

புயல் வீசிய இரவொன்றில்
அவினாசி என்.ஹச்.47ல்
ஸ்கூட்டர் ஒன்று சாலையில்
படுத்த வாக்கில் உறுமியபடி
ஓட்டுனரைத் தேடுகையில்
இரண்டு அறுந்து போன
ஹவாய் மிதியடிகளையும்
சிவப்பு நிற திரவத்தையும்
மட்டுமே
முகப்பொளியில் பார்க்கிறது

ஒரு புகைப்படமென மனதில் விரிகிறது இந்தக் கவிதை. உறுமியபடி ஒரு ஸ்கூட்டர். படுக்கைவசத்தில். அறுந்து போன ஹவாய் மிதியடிகள். சொன்ன வார்த்தைகளால் காட்சியை விவரிக்கிறார். சொல்லாத வார்த்தையில் அத்தனை வீரியமாய் மனதில் இறங்குகிறது நிகழ்வு. இதற்கு மேல் என்னவேண்டும் கவிதைக்கு?

<கூடப்படித்தவள்கள்> கவிதை, இதுவரை சொல்லிவந்த அடிமைத்தனங்களின் ஒட்டுமொத்த குறுக்குவெட்டுத் தோற்றம். சீரோ டிகிரியின் அத்தியாயத்தில். ஏ வாசகி என அழைத்து, நீ இதைச் செய்துகொண்டிருக்கலாம், அதைச் செய்து கொண்டிருக்கலாம் என முனியாண்டி ஒரு பட்டியல் இடுவான். இதற்கு மேல் எதுவும் பெண்களுக்கு கொடுக்கப்படவில்லை என முகத்தில் அறைந்த பக்கங்கள் அவை. 4 பககங்களில் முனியாண்டி சொன்னதை, ஒன்றரைப்பக்கத்தில் பட்டியலிடுகிறார் வாமுகோமு. விதவித காட்சிகளாய் மனதில் உறைந்து போன சிறுவயது தோழிகள் அனைவரும் விதவித புணர்தலில்தான் போய்ச் சேருகிறார்கள் என  நிலையைச் சொல்லி, இறுதியில் திருமணமாகாத தோழியில் சலிப்பின் முடியும் கவிதை குட்டி வெடி.

வேப்பை உச்சியில் தவிட்டுக்குருவி
ஒன்று எதற்கோ கத்தியதற்கு
நீதான் கூறினாய் அம்மணி
அதற்குத்தான் கத்துகிறது என
உன் காமத்தைக் கூறுவதில் கூட
உன் வெளிப்பாட்டு உத்தி உத்தமம்

இப்படித்தான் போகிறது மொத்தத் தொகுப்பும். உத்தி முறை வடிவம் என சிலர் உருட்டி மிரட்டிக்கொண்டிருக்க,  இலை உதிர்தலைப்போல அத்தனை வேகமாய், அத்தனை அழகாய் அத்தனை வீரியமாய் அவிழ்ந்து விடுகின்றன ஒவ்வொரு கவிதையும். இதுவரை சொல்லப்படாத வாழ்க்கையை இதுவரை பேசிக்கொண்டிருந்த மொழியிலேயே பேசித்தீர்ப்பதுதான் ‘சொல்லக்கூசும் கவிதை’ யின் முதல் பாதை எனப் புரிந்து கொண்டால், வட்டார வழக்குகள் போடும் சிறு தடைக்கற்களைத் தாண்டியும், தொகுப்பை ரசிக்கலாம்.

சொல்லக்கூசும் கவிதை – வாமுகோமு

உயிர்மை பதிப்பகம் – ரூ.90