குடங்களின் தழும்புதல் அலையும்
நீரில் சப்தம்
வெடித்துச் சிதறும் தட்டச்சுப்பலகைகள்
வெள்ளைக்கோட்டுப்
புறா நினைவில்
அம்பராத் துணிகளின் அவசர விலகல்
கற்பனை நாணில் காதம்
கிழிக்கும் அலறல் கொடிகள்
ஜென்ம தண்டனைகள் புற்றில்
நுழையும் துருவேறிய
நாகங்கள்
சதுரடிதிரையில்
இடையெல்லாம் தேகம்

கடவுள் அப்போது
குறி நசுக்கிப் படுத்திருந்தார்

o

மூன்றாம் சாமத்தில்
கனவைத் தட்டும்
கைகள் உங்களுடையவைதான்

பழைய துரோகத்திற்கும்
புதிய தவறிற்குமான
சூட்சுமக் கண்ணியினை
உங்களிடம்தான் கொடுத்துவைத்திருந்தேன்

கடைசி காலத்தின்
விழிப்பிற்கு பிறகு
அசை கேசம்
தேடியது
உங்கள் ஸ்பரிசத்தைத்தான்

கடைசியாய் ஒன்றே ஒன்று
எப்படி இருக்கிறது
உதவியாளுக்கான
அழைப்பு மணியில்
விரட்டிவிட்ட
விரல்