இனி யாரும் நடவாத பாதை

யாரோ நடந்து தூர்ந்து போன
பாதையொன்றைக்
கண்டெடுத்தேன்
மலை மீது ஏறும் சாகசமொன்றில்

சிறகிழந்து தப்பித்த பறவையின்
இறகை வைத்துக்கொண்டு
குறிதவறிய அம்பின்
வேடனை நினைத்துப்பார்க்கிறேன்

சொல்லாத கதைகளை
மிச்சம் வைத்திருக்கும் பாதைகள்
மனிதர்கள் பார்க்காத
இடத்தில் தூர்ந்து போய்க்கொண்டிருக்கின்றன

என் இருப்பிடத்திற்கும்
தூர்ந்த பாதைக்குமான இடைவெளி
நீள்கிறது
வரலாற்றிற்கும் எனக்குமிடையில்

o

நர வாசம்

திறந்த ஜன்னல்களில்
கடவுள்களின்
வாசனையேறி
கதவுகளின் நாசியடைக்கின்றது

நரசிம்ம பிம்பத்தின்
ஒற்றைக்கூக்குரலில்
கண்ணீர் ஒலிகள்
அடங்கிப்போகும் குருதிதோய்ந்து

பிரிந்து போகும் வாசனை
கதவைத் தட்டிச் சொல்கிறது
திரும்பி வரும் நாளென ஒன்றை.

o

வார்த்தைப் பிரிவினை

உனக்கும் எனக்கும் இடையில்
தீர்க்க இயலாத கணக்கெதுவும்
மிச்சமிருக்கிறதா என்ன

கடைசி நாளில் பேசிக்கொள்வதற்கு
சொல்லாமல் விட்ட
சொல்லக்கூசிய வார்த்தைகள்
எதுவும் பாக்கியிருக்கிறதா என்ன?

திருப்பிக்கொடுத்துத் தீரவேண்டுமென்றோ
நினைவுகளில் நீங்காமல்
தங்கிவிட்டதென்றோ
எதாவது வைத்திருக்கிறேனா என்ன?

உனக்கும் எனக்கும் இடையில்
ஒன்றும் பாக்கியில்லை
ஒன்றும் கணக்கில்லை
ஒன்றுமே இல்லை
என நிறுவுவதற்கு
இந்தச் சில வார்த்தைகள்
போதுமா என்ன?