ஆனந்தவிகடன் 11.5.11 இதழில் வெளியான கவிதை

மூன்றாம் வகுப்புப் பாடப்புத்தகத்தில
பாம்புபடம் இருந்த
பக்கத்தைக் கிழித்துவிட்டாள்
பெரியாயி

இரவுக்கு மேல் பாம்பைப் பற்றி
பேசவேண்டியிருக்கும்போது
பூச்சியென்றோ
பெயர்சொல்லாதது
என்றோ அழைக்கச் சொல்லி
தாத்தா சொல்லிக்கொடுத்தார்

ஓடுற பாம்பை மிதிக்கும் வயசு என
ஊக்கப்படுத்தும்போதே
புற்றின் திசைக்கு
அண்ட விடமாட்டார்
அப்பா

ஒரு இடத்தில்
நாகராஜனென பாலூற்றியும்
இன்னொரு இடத்தில்
கம்பெடுத்துக்கொடுத்தும்
வினோத பக்தியிலிருந்தாள் அம்மா

எல்லா பழையகதைகளையும்
கிளறிவிட்டபடிக்கு சுருண்டு படுத்திருக்கிறது
கீரியிடம் சண்டைப்போடக்
கூடையில் காத்திருக்கும்
பல் பிடுங்கிய பாம்பு.