வல்லினம் மே இதழில் வெளியான கவிதைகள்

சாமக்கோடாங்கி

சிக்கிமுக்கிப் பறவையின்
கூட்டின் கிளம்பிய பொறியொன்று
மூன்றாம் சாமத்தை
வெளியேற்றிக்கொண்டிருக்கிறது

வெண்சுருட்டின் புகை நிறைந்த
அறைகளெங்கும்
பிரிவின் துர்வாடை

தூக்கிப்போட்ட
பலூன்களில் இறந்த குழந்தைகளை
எறும்பு மொய்த்துக்கொண்டிருக்கிறது

சுவர்கோழிகளின் அலறல்கள்
மோதி உடையும் இரவு
விழித்திருப்பவனையும்
பார்த்துக்கொண்டிருக்கிறது

o

சில்லறைகளுக்கு ஒளியூட்டும் கடவுள்

கடலாடும் தோணியொன்றில்
ஏறி நடந்த கடவுள்கள்
மரணத்தைப் பேசிக்க்கொண்டிருக்கிறார்கள்
வெறியுடன்

ஆயுதம் தாங்கிய கடவுள்கள்
இறையாண்மைகளைக்
கற்றுத் தருகிறார்கள்
வேட்கையுடன்

பொருட்காட்சித் திடல்களில்
சீட்டுக்கட்டுகளுடன்
விளையாட்டுக்காட்டிக்கொண்டிருக்கிறார்
வித்தைகளின் கடவுள்

கலவிகளின் கடவுள்கள்
அடையாளப்படமாய்
தொங்கவிடப்படுகிறார்கள்

சில்லறைகளுக்கு ஒளியூட்டும்
இன்னொரு கடவுள்
புன்னகைத்துக் கொள்கிறார்
மனிதர்களை நினைத்து

o