வரலாற்றின் கதை

கைவிரித்துக் காத்திருக்கிறார்கள்
மனிதர்கள் கண்ணிகளின்
மறுமுனையில்
தனக்கும் அதற்கும்
சம்பந்தமில்லையென்ற
ஒரு பாவனையை முகத்தில் வைத்துக்கொண்டு

கடவுள்கள்
முன் நடந்த பாதையை
விலக்கி மேல்துண்டில்
முகம் மறைத்துக்
கடந்து போகிறார்கள்

கதையெதுவும் தெரியாத
தெரிய விரும்பாத
பிசாசொன்று
மன்றாடிக்கொண்டிருக்கிறது
எங்கோ இருந்தபடி
தன் பாவங்களையெல்லாம் மனிக்கச்சொல்லி.

0

சாம பூசைக்கான மணி

மூன்றாவது உரசலில்
எரியும் தீக்குச்சியை
அணையாமல் பார்த்துக்கொள்ளுமாறு
என்னிடம் சொல்லியிருந்தார்கள்

வெண்சுருட்டின் வாய்ப்புகள்
மறுக்கப்பட்டிருந்தன
விளக்குக்கு மாற்றவும்
அனுமதியில்லை
மெழுகுவர்த்தியற்ற நிலத்தில்
மாட்டிக்கொண்டிருந்தேன்

விலக்கப்பட்ட கனிபுசித்த
ஆதி ரசனையில்
விலக்கப்பட்டவற்றைச்
செய்வதற்காய்
காரியங்களை முன்னெடுக்கும்போது

இரண்டாம் சாம பூசைக்கான
மணியடித்து நேரமாகியிருந்தது
மூன்றாம் தீக்குச்சி
அணைந்து நேரமாகியிருந்தது.