தேவாரம் பாடி
நடந்து கொண்டிருந்தவர் பின்னால்
ஞ்ஞா ஞ்ஞா என சத்தமிட்டு
ஓடிக் கொண்டிருந்தது ஒரு குழந்தை
குழந்தையின் பின்னால்
நடந்து போய் கொண்டிருந்தார்
கடவுள்.
o
எந்த நேரமும்
கோவிலில் விளையாடிக் கொண்டிருக்கும்
குழந்தையிடம் கேட்டேன்.
ஏன் இங்கேயே இருக்கிறாய் என.
சாமி இங்குதான் இருப்பார்
என்றது சம்பந்தமில்லாமல்.
சம்பந்தம் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
o
நடைதாண்டி
வெளியேறிக்கொண்டிருக்கும்
குழந்தைகளைப்பார்க்கும்பொழுது
எந்த பக்கம் தெயவமென்று
குழம்பிவிடுகிறது
சில நேரம்.
o
குழந்தை தொந்தரவு பண்ணுமென
வீட்டில் விட்டு கோவிலுக்கு
வந்ததாய் சொன்னார் அவர்
தெய்வத்தை வீட்டில் விட்டுவிட்டு
யாரைப்பார்க்க வந்தாரென
நினைத்துக் கொண்டேன் நான்.
o
நல்லவர்களையும் சோதிக்கிறது
கருவறைக்குள் ஒளிந்திருக்கும் தெய்வம்.
கெட்டவர்களுக்கும் புன்னகை தருகிறது
வெளியில் விளையாடிக் கொண்டிருக்கும்
குழந்தை.

9-5-2011 தேதியிட்ட குங்குமம் இதழில் வெளியானவை