திண்ணை இதழில் வெளிவந்தது

விருப்பமற்று அலைந்துகொண்டிருக்கிறது
புக விரும்பமில்லாத நீர்
வெட்டிவிடப்பட்ட தக்கையின்
இடைவெளிகளில்
ஆதியில் ஊறிய வன்முறையுடன்
சிப்பி மூடிக்கொண்டிருக்கிறது
தன்னுள் விழுந்து
ஒற்றைத் தூசியின்
உறுத்தலில் ஊறும் அன்னிச்சை நீருடன்
எப்போதும்
உப்பாகாத மீனின் அலைவை
வன்மமற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது
செதில்களையுரசும் அலை
கோடுகள் தாண்டா சத்தியங்களுடன்
அதே கடலில்தான் மிதக்கிறது
மனிதர்களைச் சுமந்த தோணி
இதில் எதிலும்
பட்டுக்கொள்ளாததாய் இருக்கிறது
சிலர் வணங்கும் கடல்.

o

அழுக்குகளைக் களைவதாகச் சொல்லி
ஊருக்குள் வந்தபோது
அதை நாம் அறிந்திருக்கவில்லை.
உப்பும் மீனும்
பாசியும் உணவும்
சதையும் மணலும்
தந்துகொண்டிருந்தபோதும்
அதை நாம் அறிந்திருக்கவில்லை
சில உயிர்களைத் தின்றபோதும்
வன்முறையைக் கற்றுக்கொடுத்த போதும்
பிரிவினையைத் தூண்டியபோதும்
எல்லைகளை வகுத்த போதும்
நாம் அதை அறிந்திருக்கவில்லை

இல்லை என்பதை நாம் அறிந்திருக்காதவரை
இருந்துகொண்டுதான் இருக்கும்
எல்லைகளுக்குள் அடங்கும் கடல்.