வெயில் தீர்ந்த ஒரு மாலைப்பொழுதில் உன்னை முதல் முதல் பார்த்தேன் காதலி. சுண்ணாம்புப் பொடிகளின் காலத்தில் கோலமிட அரிசிகளை இடித்துக்கொண்டிருந்தாய். பதின்மம் கடந்த இளமையில் மிதிவண்டிகளில் வித்தை காட்டிக்கொண்டிருந்தவன்களுக்கு நடுவில் நூலகத்திற்கு மட்டும் மிதிவண்டி வைத்திருப்பவன் வித்தியாசமாகத் தெரிந்திருக்கலாம் உனக்கும். தூக்கிச் செருகிய தாவணியுடன் அரிசி இடிப்பது கூட அழகுதான் அதை எழுதுவது கூட கவிதைதான் என அன்று தெரிந்து கொண்டேன்.

என் பாதைகளில் உன் வீட்டினைக் கடக்கும்போதெல்லாம் உன்னைப் பார்க்கத் தவறுவதில்லை நான். உனக்கும் எனக்கும் இடையில் ஒரு தீராத விளையாட்டு இருந்ததாய்த் தோன்றியது. என் பயண நேரங்கள் உனக்குத் தெரியும். நீ வெளிவரும் நேரங்கள் எனக்குத் தெரியும். ஆடைகளைக் காயவைக்க அத்தனையையும் சுமந்து கொண்டு நீ வீட்டைவிட்டு வெளிவரும்போது சூரியன் உன்னை எட்டிப்பார்க்க ஓரத்திலிருந்து உயரத்திற்கு வந்திருப்பான். துண்டு, சோப்பு சகிதம் கிணற்றுக்கு கிளம்பிக்கொண்டிருப்பேன்.

கிணறு உன்னைத்தான் நினைவுபடுத்தும் காதலி. அத்தனை ஆழம் நீ. எத்தனை தூரம் கடந்தாலும் இன்னும் எதையோ ஒளித்து வைத்திருப்பதைப்போலப் பயமுறுத்தும் ஆழம் நீ. முதல் முறை விழுபவனுக்கும், கடைசிக்காலமென நினைத்து விழுபவனுக்கும் சிரித்துக்கொண்டே விலக்கிப்போகும் மர்ம ஆழம் நீ. இருளில் வீழ்ந்தவனுக்கும் எங்கோ உயரத்தில் வெளிச்சக்கீற்றை ஒளித்துவைத்திருப்பவள் நீ.

கைகள் வெளுத்து, நகக்கண்களில் ரத்தமேறி கண் சிவந்து கரையேறித் திரும்பும்போது குடமொன்றைத் தூக்கிக் கொண்டு நீர் இறைக்க வந்துகொண்டிருப்பாய் நீ. நான் குளிக்கும் கிணற்றையும் நீ நீர் இறைக்கும் கிணற்றையும் ஒரே தோட்டத்தில் அருகருகே தோண்டி வைத்து செத்துப்போன முத்தையா கிழவனுக்கு கோயில் கட்டுவதற்கு எத்தனை முறை விரும்பியிருக்கிறேன் தெரியுமா? கிழவன் தோட்டத்தில் இளநீர் அத்தனை ருசி. குடித்துத் திரும்பும்போது நிறைகுடத்துடன் திரும்பித் தழும்பிவரும் உன்னைப்போல அத்தனை இனிப்பு.

உன் தோழி கிணற்றில் வாளி தவறவிட்ட நாள் சுத்த முகூர்த்த நாளாக இருக்கும். திருமணங்கள் சொர்க்கத்திலோ நரகத்திலோ நிச்சயிக்கப்பட்டு போகட்டும். நம் காதல் தென்னத்தோப்பை ஒட்டிய அந்த கிணற்றடியில் அன்று நிச்சயிக்கப்பட்டது. கூட வரும் வானரங்கள் இல்லாத நாளொன்றில் வாளியைத் தவறவிட்டதற்காகவும், அதை எடுக்க என்னை அழைத்ததற்காகவும் முத்தையாக் கிழவனுக்கு நாம் கட்டும் கோயிலில் தனியாய் ஒரு சன்னதியே கொடுக்கலாம் உன் தோழிக்கு.

எனக்குப் பிடிக்காத சில வீண் வேலைகள் இருக்கிறது. அவற்றைப் பற்றி பிற்காலத்தில் சுயசரிதையில் எழுதும்போது முதலில் சொல்வதற்காக மனதில் வைத்திருந்த வேலை கிணற்றில் வாளியெடுப்பது. அந்த நாள் முதல் என் காதல் சரிதையின் முதல் அத்தியாத்தில் அதைச் சேர்க்க வேண்டியதாயிற்று.

அன்றைக்கு எடுத்துக் கொடுத்ததிலிருந்து நான் குளித்து முடிக்கவும், உங்கள் படை தண்ணீர் எடுக்கவும் சரியாக இருக்க, மிதிவண்டியை உருட்டிக்கொண்டே உங்களுடன் பேச்சுக்கொடுத்துக்கொண்டு வீடு வந்து சேர வேண்டியிருக்கிறது. முதல் நாளில் பேர் சொல்லி அழைத்தீர்கள் எல்லாரும். இரண்டாவது நாளிலிருந்து உன்னைத்தவிர எல்லாரும் சகோதர உறவில் அழைக்கத் தொடங்கினார்கள். பேர் சொல்லி அழைப்பதை கண்டித்தவள் நீ என பிறகு தெரிந்து கொண்டேன். நீ என்னை அழைப்பதற்காக காரணங்களை தோழியிடம் தள்ளிவிடுவாய். ஒரு தபால்காரியாய் தோழி அலைந்த கதை பெரும்பாலான சினிமாக்களில் இல்லை என்கிறார்கள்.

எல்லாரும் அவரவர் வீட்டிற்கு பிரிந்தபின் ஒரு பெரிய தெரு முழுக்க நாம் மட்டும் நடந்து வருவோம் எதுவும் பேசாமல். எனக்குத் தெரிந்து அந்த தெருவில் மொத்தம் ஐந்தே வீடுகள்தான். குறுந்தெருவாகியிருக்கவேண்டியது பெருந்தெருவானது உனக்கு என்னாலும் எனக்கு உன்னாலும்.

– நிலா பொழியும்