விட்டலுக்கு பாம்பு இன்னும் தன் தோளில் ஊர்ந்து கொண்டிருப்பதைப்போல் தோன்றியது. தோல்பையை எடுத்து மேஜை மீது வைத்தான். மேஜை மீதிருந்த கண்ணாடிக் குவளையில் கொஞ்சம் நீர் எடுத்து அருந்தும்போது அலங்கார விளக்கின் பிம்பம், குவளையில் தெரிந்தது. கண்களைப்போல. சின்ன கோலிக்குண்டுகளைப்போல. அத்தனை பக்கத்தில் ஒரு நாளும் அவன் பாம்பைப்பார்த்ததேயில்லை. சின்ன வயதிலிருந்து பார்த்த பாம்புகள் நினைவில் படம் எடுப்பதைப்போல் இருந்தது. தலையை உலுக்கிக்கொண்டான். எதோ ஒன்று நினைவிலிருந்து உதிர்ந்து விட்டதைப்போல் தோன்றியது. ஊஞ்சலில் போய் அமர்ந்தான். தேக்கிலான பலகை யானைத்துதிக்கை சித்திரம் வார்க்கப்பட்ட இரும்புச் சங்கிலியில் தொங்கிக் கொண்டிருந்தது. உண்மையில் நினைவிலிருந்து வரிசையாக பாம்புகள் உதிர்ந்துகொண்டிருந்தன உத்திரத்திலிருந்து ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சல் பாம்பின் வாலில் கட்டித் தொங்கவிடப்பட்டதுபோல் இருந்தது. காலுக்குக்கீழும் வழுவழுப்பாக உணர்ந்தான். காலை மடித்து ஊஞ்சலில் மீது வைத்துக்கொண்டான். காலில் ஒட்டியிருந்த குஞ்சுப் பாம்பொன்றை கையிலெடுத்துப்பார்த்தான். வால் மணிக்கட்டைச் சுற்றிக்கொண்டு உருளும் கண்களால் விரிந்த படங்களுடன் தன்னையே பார்ப்பதைப்போல் உணர்ந்தான். ஊஞ்சலின் மேல் இறக்கிவிட்டான். பாம்பு பலகையை ஊடுருவி மறுபக்கம் சென்றுவிட ஊஞ்சலின் மீது இடுப்புவார் மட்டும் மிச்சமிருந்தது.

முதல்முறை விட்டலின் பாம்பு நினைவு பதின்ம வயதின் தொடக்கத்தில். பள்ளிக்குச் செல்வதற்காக தூக்குச்சட்டியில் அம்மா கொடுத்த கஞ்சியும் மிதக்கும் கருவாட்டையும் நினைத்துக்கொண்டே மரக்கதவை ஒருக்களித்துச் சாத்திவிட்டு வீட்டைவிட்டு வெளியில் வரும்போது மிகச்சரியாக இவன் வருவதற்கு காத்திருந்தவளைப்போல எதிர்க்குடிசை மாரியாயிக்கிழவி அஜிதனைத் தள்ளிவிட்டு மறுபக்கம் மல்லாக்க விழுந்தாள் வாயெல்லாம் நுரையுடன். கை விலுக் விலுக்கென இழுத்துக்கொண்டது. கிழவிக்கு வலிப்புவரும் என பெரியவர்கள் ரகசியமாய் பேசியிருப்பதை பார்த்திருக்கிறானே தவிர வலிப்பு என்றால் என்னவென்றோ எப்போது எங்கிருந்து வரும், எதனால் வரும். என்ன செய்வாள் என்ன செய்யவேண்டும் எதுவும் தெரியாது. கிழவி தட்டியதால் ஆடிக்கொண்டிருந்த தூக்குச்சட்டியைக் கவனிக்க முடியாமல் அவன் கிழவியையே பார்த்துக்கொண்டிருந்தான். கிழவியும். இப்போது நினைத்து பார்க்கும்போது கிழவியின் கண்களும் இப்படித்தானே ஒடுங்கி பளபளப்புடன் இருந்தது எனத் தோன்றியது. ஒருவேளை ஒடுங்கிய பளபளப்புக் கண்களைப்பார்த்து நினைவில் இல்லாத கிழவியின் கண்களையும் அப்படியே நினைத்துக்கொள்கிறோமோ என இப்போது இந்த ஊஞ்சலில் அமர்ந்திருக்கும்போது தோன்றுகிறது. தூக்குச்சட்டி ஆட கிழவியைப் பார்க்கும்போது கிழவியின் கண்கள் சுட்டிய திசையில்தான் அதை முதல்முறை நேருக்கு நேர் பார்த்தான். சனிக்கிழமை அப்பா தலைக்கு எண்ணை வைத்துக்கொண்டு வெறும் கோமணத்துடன் வாசலில் முக்காலியில் அமர்ந்திருக்கும்போது கருமை நிறக் கைகளை உருவிவிட்டதை நினைவு படுத்துவதைப்போல கொஞ்சம் குறைவான கனத்துடன் அதே அட்டுக்கருப்பில் பளபளக்கும் கண்களில் அவனை படத்தின் நடுவழியாகப் பார்ப்பதைப்போல , திருடனைப் பார்க்கும் உரிமையாளனின் பார்வையில் பார்த்துக்கொண்டிருந்த அந்தப் பாம்பு பிறகு இவனால் எந்த ஆபத்துமில்லை என நினைத்துக்கொண்டதைப்போல படத்தைச் சுருக்கி தரையில் ஊர்ந்து கிழவியின் வீட்டின் அருகில் குவித்திருந்த பழைய கூரை ஓலைகளுக்குள் புகுந்து மறுபுறம் வெளியேறியது. ஓலைகளுக்குள் ஊர்ந்து செல்லும் சரசரப்பை விட்டல் இங்கிருந்தே கேட்க முடிந்தது. இத்தனை வருடங்களுக்கு பிறகு அந்தப் பாம்பு ஓலைபுகுந்த நிமிடத்தின் ஒலியை அசையும் ஊஞ்சலில் கேட்டான்.

இடுப்பு வாரை அதன் இடத்தில் வைப்பதற்காக வலப்பக்கம் திரும்பியபோது, மீண்டும் அதே கொம்பேறிமூக்கன் நெளிந்துகொண்டிருந்தது அந்த இடத்தில். வாய்க்கால் கரையோரத்தில் முதல்முதலாக விட்டல் கடிபட்ட பாம்பு.பதின்மத்தின் நடுவயதுகளில் ஓடுற பாம்பைக் கையில் பிடிக்கும் வயது என்றும், காலில் மிதிக்கும் வயது என்றும் இரு வேறு பழமொழிகளைச் சந்தித்திருந்தான். இரண்டில் எது சரியெனத் தெரியவில்லை. அவனுக்கு மட்டுமில்லை, அவன் விசாரித்த யாருக்குமே இதைப்பற்றித் தெரியவில்லை. இரு பழமொழிகளையும் ஒரு சேரக் கேட்ட அதே ஊர்க்காரர்கள்தான் என்றாலும், இதில் எது சரி என்ற அளவில் கூட அல்ல, இரண்டும் வேறு வேறு என்ற பிரக்ஞையே அவர்களுக்கு இல்லை. இந்தப் பழமொழிகளுக்கான காலங்கள் இப்போது நினைத்தாலும் சிரிப்பை வரவழைப்பவை. தெருபம்பில் தண்ணீர் எடுத்துவரவோ பின்னிரவில் தனியே போட்டுச் சாப்பிடவோ காலையில் கோனார் வீட்டுக்கு பால்வாங்கப்போகவோ அப்படி என்ன தைரியம் தேவை என தோன்றும். ஆனால் இந்த மாதிரியான சந்தர்பங்களில்தான் விட்டலின் அம்மா ‘ஓடுற பாம்பை மிதிக்கிற வயசு, நீ இங்க சும்மா உக்காந்துருந்தா எப்படிப்பா’ என கிளப்பி விடுவாள். அம்மா பழமொழியின் அர்த்தம் தெரிந்து போனானா எனத் தெரியாது, ஆனால் பிடாரன்களுடன் விட்டலுக்கு பதின்மத்தில் நட்பிருந்தது. அந்த சொல்லாத வாசனை, தாழம்பூ வாசனை கலந்த நெடி காற்றில் வந்தால் அந்த பகுதியில் பாம்பு நடமாட்டம் இருப்பதாக அறிந்துகொள்ளலாம் என்றும் ஒரு பாம்பை எந்த புள்ளியை அழுத்திக்கொண்டு எதைப் பிடித்துத் தூக்கவேண்டும் என்றும் விட்டல் அப்போது அறிந்திருந்தான்.

பள்ளியின் தோட்டத்தில் பார்த்த பாம்பைத் தொடர்ந்து வாய்க்கால் வரை வந்திருந்தான். தன் கண்ணுக்கு மட்டும் பாம்பு தெரிவதின் ரகசியம் அவனுக்குப் புலப்படவேயில்லை. சக நண்பர்கள் இதைப்பற்றி எதுவும் தெரியாமல் விளையாடிக்கொண்டிருந்தார்கள். தண்ணீரற்று, வறண்டு போயிருந்த வாய்க்கால் கற்களுக்கிடையில் பாம்பு வசதியாக நுழைந்து கொள்ளத் தொடங்கியிருந்தது. கிட்டத்தட்ட முழுப்பாம்புமே நுழைந்திருந்த போது வால் மட்டும் விட்டலின் கைக்குச் சிக்கியது. இடுப்பு வாரை உருவதுபோல் பாம்பைப் பொந்திலிருந்து உருவினான். அத்தனை விசையுடன் காற்றுப்போன பலூனைப்போல சீறிய சப்தத்துடனே வெளிவந்தது. இடது கையினால் படத்திற்கு கீழே அழுத்த வேண்டிய புள்ளியை நோக்கி அசைத்த போது, சடாரென வாலிலிருந்து தொடங்கி, பாம்பு விட்டலின் கையில் சுற்றத் தொடங்கியது. நல்ல முழங்கைக்குக் கீழே ஊசிபோட்டது போல பாம்பு கொத்தியதும்தான் வாலைவிட்டான். இனி விடாவிட்டால்தான் என்ன? வழுவிய வாலைப்பிடித்து உதறி, பாம்பின் தலையை அந்தரத்தில் தொங்கவிட்டு சுழட்டி வாய்க்கால் கல்லில் சப் என அடித்தான். அது கல்லில் ரத்தத்தை எழுதிவிட்டு செத்துப்போனது.ஆதிதாழம் என இருந்ததை வாசித்துக்கொண்டிருந்த போது விட்டல் மயங்கிக்கொண்டிருந்தான்.

விட்டல் இன்னொரு முறை தலையை உலுக்கிக் கொண்டான். சிறுவயதில் அடித்த பாம்பைப்போலவே இப்போது கண்ணில் படும் எல்லா பாம்பையும் அடிக்கவேண்டும் எனத் தோன்றியது. எதுவும் கையில் சிக்கவுமில்லை. எல்லாம் தண்ணீரின் பிம்பங்களைப்போல , ஓடி மறையும் தண்ணீரைப்போல ஊஞ்சலின் மேல், இவன் மேல், காலுக்குக் கீழ், உத்திரத்தில், தரையில் பார்க்கும் எல்லா இடங்களிலும் வழுவழுத்து ஓடி மறைந்தபடியே இருந்தன. ஆதி தாழத்திற்கான அர்த்தத்தைத் தேடி இவனும் எங்கெங்கோ அலைந்துவிட்டான். எந்த பயனும் இல்லை. எந்தத் தகவலும் இல்லை. சில நாடுகளுக்கு அலுவல் நிமித்தமாக சென்றிருந்த போது, பாம்பின் ரத்தத்தில் தயாரிக்கப்படும் பானம் பற்றி கேள்விப்பட்டு அந்த இடங்களிலும் அலைந்து பார்த்தான். தரையில் மரங்களுக்குள் அல்லாமல் கூண்டிற்குள் பாம்புகளை விட்டல் அங்குதான் பார்த்தான். இட நெருக்கடியான அடுக்கங்களில் அடைக்கப்பட்ட மனிதர்களைப்போல பாம்புகள் ஒன்றின் மீது ஒன்று அசூயையுடன் புரண்டு கொண்டிருந்தன. பல் பிடுங்கப்பட்ட பாம்புகளில் இவனுக்கென்ன அக்கறை. பானங்களை விலக்கிவிட்டு கொஞ்ச நேரம் பாம்புகளை வேடிக்கை பார்க்கத் தொடங்கினான். கொஞ்ச நேரத்தில் பாம்புகள் கூண்டிற்குள் வித்தியாசமாக புரளத் தொடங்கின. வால் பகுதியை கடைக்கும், தலைப்பகுதியை இவனுக்கும் நீட்டி எல்லா பாம்புகளும் திரும்பிக்கொண்டன. எல்லா கண்களும் ஒடுங்கி எதையோ யாசிப்பவை போல தெரிந்தன. இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் எலலாவற்றையும் வாங்கி கூண்டுகளைத் திறந்துவிட்டுவிடுவோமோ என்ற பயம் விட்டலுக்குத் தோன்றியபோது அவன் அங்கிருந்து நகரத் தொடங்கினான்.

இப்பொழுதெல்லாம் இரவுக்ள் தூக்கமற்றுக் கழித்துக்கொண்டிருக்கிறான். கனவெல்லாம் பாம்புகள் அலையத் தொடங்கியதே காரணம். எல்லாப் பாம்புகளும் இவனையே பார்த்துக்கொண்டிருக்கின்றன. ஓடிபோவதில்லை. இவன் விரட்டுவதில்லை. இவனையும் பாம்புகள் விரட்டுவதில்லை. நெடு நாள் பிரிவிற்குப்பின் சந்தித்துக்கொள்ளும் நண்பர்களைப்போல வார்த்தைகளற்று பார்த்துக்கொண்டிருப்பதுபோலவே நிஜத்திலும் நினைவிலும் கனவிலும் பாம்புகளும் அஜிதனும் சந்தித்துக்கொள்கிறார்கள். எப்போதும் தாழம்பூ வாசனையை மோப்பம் பிடித்தபடி திரிந்த விட்டல் இப்பொழுதெல்லாம் பிறர் கனவிற்குள்ளும் நுழைவதாகப் பேச்சு. உங்கள் கனவிலும் இன்றிரவு மூக்கை உறிஞ்சியபடியோ பாம்புகளை வெறித்துப் பார்த்தபடியோ உங்களுக்குத் தெரியாத ஒருவன் அலைந்தான் என்றால் அது விட்டலாகக் கூட இருக்கலாம்.