ஊரோரோரம் புளியமரம்

புளியங்குளத்தா
ஊரில்
ஒரு ஊருணி இருந்தது
உப்பிய பாவாடைகளுடன்
நீராட
ஒரு குளம் இருந்தது
இளவட்டப்பெண்கள்
முங்கி கல்லெடுக்க
ஒரு கிணறு இருந்தது.
ஊர்பெண்கள் கூடி
துணிதுவைத்து வம்பளக்க
ஒரு ஏரிக்கரை
இருந்தது.

பிளாட்டுகளின் காலத்தில்
ஊர் பெருமை பேசியே
புளியங்குளத்தா இறந்து போனபோது
சில பழங்கதைகளும்
இந்தக் கவிதையும் மட்டுமே
மிச்சமிருந்தது.

பெயர்காரணம்

கெளரி
தலைசாய்த்துக் கூப்பிடும்
தினுசிற்காகவே
என் பெயர் அத்தனை பிடிக்கும்
எனக்கு

பிறிதொரு நாளில்
தற்செயலாய்ச் சந்தித்தபோது
சார் விகுதியுடன் கூடிய
என் பெயரை
அறிமுகம் செய்துவைத்தாள்
யாருக்கோ

புனைப்பெயர் மீதான ஆர்வம்
வந்தது அன்றுதான்.