கரி நாள் பொழுதொன்றில் நாம் இருந்தோம் காதலி. ஊரின் பெரும்பாலான காதலர்கள் பொங்கல் திரு நாளுக்கு காத்திருப்போம். மறு நாள் கரி நாள் என ஊரே அந்த மாந்தோப்பிற்கு போய் உண்டு விளையாடித் திரும்புதல் ஒரு சம்பிரதாயம். காதலி காதலனுடன் ஒரு நாள் முழுமையாய் செலவளிக்க கிராமத்தில் அதைத்தவிர எதுவும் நாள் பொழுதில்லை காதலி. வெயில் உள்ளேவரப் பயந்து எங்கோ இருக்கும். சருகுகள் நிறைந்த தோப்பினுள் அலைகையில் சில தலைமுறைகள் முன்சென்றதைப்போல் அத்தனை ஆசுவாசம். பிறர் கண்ணிலிருந்து மறைவதற்கு, இருவர் அமரும் அகலத்தில் மாமரங்கள். அருகில் அமர்ந்திருக்க நீ.

உனக்கு கண்ணைக் காட்டிவிட்டு மறுபக்க கடைசி மரத்தின் நிழலில் போய் அமர்ந்துவிட்டேன் காதலி. உனக்காக காத்திருக்கும் நிமிடத்தில் கிளிகள் மாம்பழங்களைக் கொத்தி என் மடியில் போட்டுக்கொண்டிருந்தது. நீ வந்ததும் நீ கடித்த பழமொன்றைத் தருவதாய்ச் சொல்லி கிளியை என் கையில் நிற்க வைத்திருந்தேன். கிளிகளுக்கும் எனக்கும் தெரிந்த சுவை உன் இதழ்ச்சுவை தாவணிகள் தனி அழகு . உன் தாவணிக்கு உன்னால் தனித்தனி அழகு காதலி. பட்டு சரசரக்க என் அருகில் வந்தமர்ந்தாய் நீ மிதித்து வந்த சருகுகள் மலர்களாக மாறிக்கொண்டிருந்தது. அருகில் அமர்ந்திருக்கும்போது உன்னிடம் பேசுவதற்கு எதுவுமில்லை காதலி. நிலாவில் கால் வைத்தவன் கூட பேசிக்கொண்டிருக்கவில்லை. நினைத்துப் பார்க்கும்போதுதான் எதையாவது பேசியிருக்கலாம் எனத் தோன்றுகிறது. நின்றிருந்த கிளியை உன்னிடம் கொடுத்தேன். பறக்கவிட்டாய். மிதந்து உன் தோளில்தான் திரும்ப அமர்ந்தது. அதற்கு உன்னை விலகும்வதில் விருப்பம் இல்லை. கிளி கடித்த மாம்பழத்தை உன்னிடம் கொடுத்தேன். தூக்கிப்போட்டு கிளிக்கு கை காட்டினாய். அது உன்னைக் கொத்திக்கொண்டிருந்தது. சுவை மிகுந்த பழம் எதுவென கிளிக்குத் தெரியாதா என்ன?

அப்பாக்களை ஏமாற்றுவதற்கு காதலிகளுக்கு ஆயிரம் காரணம் கிடைத்துவிடுகிறது. தோழியுடன் கிளி பார்க்கப் போவதாய் சொல்லி வந்திருந்தாய். அந்தத் தோழி இன்னொரு மாமரத்தின் கீழ் இருந்ததாய்ச் சொன்னாய். அவளும் அதே காரணம்தான் சொல்லியிருப்பாள். பெண்களை முட்டாள்கள் எனச் சொல்பவர்கள்தான் முட்டாள்கள் காதலி. உங்கள் புத்திசாலித்தனம் காதலிக்கும்போதுதான் வெளிவருகிறது. பார்க்க வந்த கிளி சும்மா இருக்கவேண்டுமா என்றேன். எதோ ஒரு கிளி என் கன்னத்தைக் கொத்திக்கொண்டிருக்கிறது என்றாய். காதல் அழகாவது காதலிகளால்தான் காதலி.

உன்னுடன் இருப்பது தனியாய்க் கேட்டுவாங்கி வந்த வரம் காதலி. என் பாசாங்குகள் தேவையில்லை. என் முகமூடிகளைக் கழற்றிவைத்துவிடலாம். நான் நானாகவும் நீ நீயாகவும் முகமூடிகளற்று இருக்கும் போது உலகம் நிஜ உலகமாக இருக்கிறது காதலி. என் தவறுகள் உனக்குத் தெரியும். உன் தவறுகள் எனக்கும். என்னை நானாகவே ஏற்றுக்கொண்ட உன்னைவிட இனி என்ன வேண்டும்? நீர்த்துளி மிதக்கும் தாமரை இதழைப்போல்தான் என்னுடன் இருந்தாய் நீ. என் விரல்களை உன்னுடன் கோர்த்திருந்தேன். பால்யமொன்றில் பெருங்கூட்டமொன்றில் அப்பாவின் விரல் பிடித்து நடந்தது நினைவிற்கு வந்தது. கூட்டத்தைப்பற்றி எதிரில் வருபவர்களைப் பற்றி எதற்கும் கவலை கொள்ளாமல் விருப்பத்தை வேடிக்கை பார்த்து அலையும் குழந்தையின் மன நிலை உன் விரல் பிடித்திருக்கும் நிமிடங்களில்தான் வாய்க்கிறது.

உன் அபாயகரமான வளைவுகளில் ஆடிக்கொண்டிருந்தது தங்கச் சங்கிலி. தாமரையைப் பார்த்துக்கொண்டிருக்கும் இரண்டு அன்னங்கள் செதுக்கப்பட்ட சுட்டி கொண்ட சங்கிலியை இப்பொழுதெல்லாம் பார்க்க முடியாது காதலி. நல்லதுதான் உன் தனிப்பட்ட சின்னங்களென எங்காவது செதுக்கி வைக்க எதாவது அடையாளங்களை வைத்திருக்க வேண்டுமென அப்போதே எப்படித் தெரியும் உனக்கு? நாம் பிரியவே போவதில்லையினெ நான் தான் தவறாக நினைத்துக்கொண்டிருந்தேனோ. உனக்கு எல்லாம் தெரிந்திருந்தது காதலி. என்னையும். எனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. உன்னைத் தவிர. அன்னிச்சை செயலைப்போல முடிக்கற்றைகளை ஒதுக்கிவிடும் லாவகம் உன்னைத் தவிர எவளுக்கும் வராது காதலி. ஒதுக்க ஒதுக்க மீண்டும் உன் விரல்தீண்ட வந்துவிழும் பொல்லாத ஓரமுடிகள் கூட யாருக்கும் கிடையாது. பாதிவெட்டப்பட்டு நீள்வாக்கில் தோய்த்து செப்புக்கம்பிகளைப்போல் நீண்டிருக்கும் இவர்களின் முடிகள் எனக்கு எரிச்சலூட்டுகிறது காதலி. சிற்சில மேடு பள்ளத்தைப்போல உன் தலையில் தொடங்கி தோளில் அலையும் கூந்தல் உன் நியாபகமாக எனக்குத் தங்கிப்போயிருக்க வேண்டாம்.

இன்று பார்க்கக்கிடைக்கும் மெகந்திகளின் வளை நெளிந்த வரிகள் போலியானவை காதலி. நீயில்லா நாளில் பார்த்த சிவந்த நிலவைப்போல உள்ளங்கைகளில் வட்ட வடிவ பெரிய பொட்டும் விரல் நுனிகளில் மேளக்காரனின் குப்பியைபோல் கவிந்திருந்த மருதாணியும் உன் நினைவுகளின் சிவப்பு. மருதாணி அதிகம் சிவந்தால் மாமன் மேல் அதிக ஆசை என்பார்கள் ஊர்பக்கம். மருதாணியில்லாத இடங்கள் கூட பொன்சிவப்பு உனக்கு. மருதாணி இல்லாமலும் உன் காதல் எனக்குத் தெரியாததா என்ன? உன் பெயரை நானும் என் பெயரை நீயும் அந்த மரத்தில் செதுக்கத் தொடங்கினோம். செதுக்கும் போதெல்லாம் உன் பெயரை சில நூறு தடவை உச்சரித்திருப்பேன் காதலி. அதைச் சொன்னதற்கு கோபப்பட்டாய். என் பெயரை நீ சில ஆயிரம் தடவைகள் உச்சரித்திருப்பாய் என எனக்கெப்படித் தெரியும் நீ சொல்வதற்கு முன்?