ஊறும் கைகளுக்கு பேதங்கள் இல்லை

அபின் கலந்த பானங்களில்
உடைகள் கழன்றுவிழத்
தொடங்குகின்றன
மேலே ஊறும் கைகளுக்கு
பேதங்கள் இல்லை

விலக்கப்பட்ட உடல்கற்களை
ஸ்பரிசிக்கும் விரல்களை
நோக்கி
வீசித் திமிறுகிறாள்

திறந்திருந்த சொர்க்கத்தில்
கேளாமல் நுழைகிறாள்
லமீசா

கொடுக்கப்பட்டதிற்கும்
எடுக்கப்பட்டதிற்கும்
எந்த வேறுபாடும் இல்லை என்றாலும்
செய்தித்தாள்கள்
அழகி கைது
என்றே நாளை சொல்லும்

o

புரளிகளின் காலம்

நடிகையுடன் தற்சமயம்
தொடர்புடைய
தொழிலதிபர்
நடிகன் இரவில்
ஊர் சுற்றும் நடிகை
அரசியல்வாதியின்
ரகசிய நோய்
நேர்மையாளர்களின் மறைக்கப்பட்ட
உண்மைகள்

மற்றவர்களின் ரகசியங்களை
பேசி வாழ்ந்து நம்பி

நம்ப முடியாதவையாகப் போகின்றன
பக்கத்துவீட்டுக்காரனின் உண்மைகள்.

சிறிது வெளிச்சம்

விவாகரத்துகள்
கற்பழிப்புகள்
கொலைகள்
ஊழல்கள்
எல்லாவற்றிற்கும் நடுவில்

என் கண்ணில் மட்டும்
பட்டுத் தொலைக்கிறது

காணாமல் போனவர் பற்றிய
அறிவிப்பிலோ
அஞ்சலி விளம்பரத்தின்
பாஸ்போர்ட் புகைப்படத்திலோ
கவலையின்றி சிரிக்கும்
குழந்தை.