கணப்பு அடுப்பின் கதகதப்புடன்
தொடங்கியிருந்தது
அன்றைய  நாள்

முத்தத்திற்கு
பிறகு இன்னபிற
அத்தியாவசியங்களுக்குத் திரும்பியிருந்தாய்

வாழ்நாளின் ரகசியத்தை
உன்னிடம் உடைத்துவிடத்தான்
எழுந்து வந்தேன்.

மகளின் பெயர்க்காரணம்
என எளிதாய்ச் சொல்லிவிடலாம்

அந்தத் தெருவில் நடையின்
வேகம் குறைவதற்கான ஆதிக்காரணம்
எனச் சொல்லலாம்

திருமண நாளில்
ஊருக்கு போக அடம்பிடிப்பதின்
காரணமும் இதுதான் என்பதை
எப்படி எடுத்துக்கொள்வாய்

எப்போதும் போகும் சீரியலிலும்
எப்பாதாவது போகும் கடற்கரையிலுமே உன்
வாழ்க்கை அத்தனை
அர்த்தமுள்ளதாய் இருக்கிறதாக
முந்தைய நாள்தான்
கைபிடித்துச் சொல்லியிருந்தாய்

ஒரு கவிதையைப்போலவே
முடிவற்று தொங்கிக்கொண்டிருக்கிறது
உண்மைச் சொல்வதற்கான
அன்றைய நாள்.

நன்றி அதீதம்