விஷ்ணு
தனித்த அறை வாசம் சுமந்த
கருடப் பறவையின்
சிறகின் மீது அலையும்
பெருமாள்
இன்னுமா புரண்டு படுக்கவில்லை
மிஸ்டர்?
கனம்
ஓட்கா சிகரெட் கவிதை தொகுப்பு
அழுவதற்கு ஒரு மடி
உடைந்து கைகீறும்
சிறு
முகம் பார்க்கும் கண்ணாடி
பிடித்த சிகப்பு நிறத்தில்
நைலான் கயிறு
கெளரியின் புகைப்படம் ஒன்று
அற்புதமான கணத்தில்
தற்கொலை செய்து கொள்ளவேண்டும்
பாழாய்ப்போன வாழ்வு கடந்து
கொண்டிருக்கிறது
அற்புத கணத்தின் சாயலுக்கே வழியின்றி
உப்புக் கறை
உப்புச் சுவையேறிய
முத்தத்துடனே நாம் நம்
எல்லைகளை வகுத்துக்கொண்டோம்
பிறகெப்போதும் சந்திக்காமல் இருப்பதற்கான
முன்னேற்பாடுகளைச் செய்வதோடு
பிரியலாம் என முடிவெடுத்தபின்
தற்செயலான சந்திப்புகள்
உறுத்திக்கொண்டிருந்தன
மொட்டைமாடியில் காயும்
உள்ளாடையைப்போல்
ஆகச்சிறந்த கணத்தில்
நாய்குட்டிகள் திசைக்கொன்றாய்
பிரிய
நடந்துகொண்டிருக்கிறோம்
இல்லாத கரையை நோக்கி.
நன்றி – உயிரோசை
மறுமொழியொன்றை இடுங்கள்