பிழையிரண்டு

பிழை #1

வளர்சிதைப் புனலின் தீர்த்தக்கரையில்
அலையும் தேரைகள்
கல்லுக்குள் இருப்பதாக
கற்பிக்கப்பட்டிருக்கின்றன

முத்தம் மிச்சம்வைத்த உதடுகளில்
வழியும் விஷவார்த்தைகள்
அறுத்த தொப்புள்கொடிகளில்
உயிரினைக் காயவைத்திருக்கிறேன்

கரைக்கும் கொடிக்கும்
இடைப்பட்ட அளவில்
நீள்கிறது கண்ணி

பிழை #2

எப்படி எதிர்பார்க்கிறீர்கள்
நெற்றி முத்தத்தை
சாலைகடக்கையில்
இறுக்கும் அழுத்தத்தை
பால் மறந்து கண்ணீர்துடைக்கும்
விரலை

ஆயுதமேந்திய கடவுள்களால்
வளர்க்கப்பட்ட வாழ்வை
வைத்திருக்கும்
என்னிடம்
எப்படி எதிர்பார்க்கிறீர்கள்

சிறு கருணையை

நன்றி – பண்புடன்