#1

ஒரு கனவிலிருந்து எல்லாவற்றையும்
உரித்துக்கொண்டு
வெளியேறுகிறேன்

நீண்ட பாதையில்
ஓரச்செடிகளின்
ஒடிந்திருக்கும் அடையாளங்கள்
அப்படியேதான் இருக்கின்றன

பூச்சியுண்ணும் பறவைகளை
விரட்டத் தொடங்கிய வானம்
கொஞ்சம் மழையை ஊற்றுகிறது

கலைவதற்குள் வெளியேறிவிடவேண்டும்
எல்லாப் பாதையிலிருந்தும்.

#2
எல்லா விருப்பங்களும்
நிறைவேறத் தொடங்கிய
நாளொன்றை
கனவென்றே நம்பிக்கொண்டிருந்தேன்

அதிசிறந்த புன்னகையை
அதி சிறந்த உட்புகையை
ஒரு மிடற்று மதுவை
பழைய காதலியின் குறுஞ்செய்தியை
புது மரத்தில் உதிர்ந்த மழையை

மின்விசிறி
காற்றில் ஆடும்
சுருக்குக் கயிற்றை

எல்லாவற்றையும் கனவென்றே நம்புவது
சுகமானதுதான் இல்லையா?