# 1

தாவும் எத்தனத்தில் கிளையமர்ந்திருந்த
பறவையொன்றைச் சந்தித்தேன்

கொத்தப் பூச்சிகள் அற்றுப்போன
மரத்திலிருந்து
உதிர்ந்துகொண்டிருக்கிறது நிழல்

சிறகுகள் கோதி வலசைக்கு
தயாராகும் பறவையிடம்
புத்தனின் கோபம்

பறந்த வானத்தில் விட்டுவந்த
தடங்களை
உருவிப்போட்டபடியிருக்கிறது

சின்ன அழுத்தத்தில்
பறக்கத் தொடங்கிவிடும்
என்றாலும்

அழுத்தத்திற்கான காலம்
நீண்டுகொண்டேயிருக்கிறது முடிவில்லாமல்

#2

எல்லா பொருட்களையும்
கட்டிவைத்தாயிற்று
சொல்லவேண்டியவர்களுக்கெல்லாம்
சொல்லியாயிற்று

உறவுக்கேற்ப
பேருந்து நிலையத்தில்
ரயில் நிலையத்தில்
விமான நிலையத்தில்
வழியனுப்பிக் கையசைக்கின்றன
உறவுகள்

புளிக்காய்ச்சல் பாட்டில் எடுத்துவைத்த
அம்மாவும்
டிக்கெட் எடுத்துவந்து
கொடுக்கும் போது
கையழுத்திய அப்பாவும்
அழத் தெரியாமல்
சிரித்த தம்பியும்
எதையோ மிச்சம் வைத்திருக்கிறார்கள்

ஆறுதல் கொடுத்து அணைத்து
தேற்றி
விமானம் ஏறும்போது
நெஞ்சுக்குள் உருள்கிறது
வேடனால் குறிவைக்கப்பட்ட
பறவையின் கண்கள்.