இருளிலிருந்து வெளியேறத்தொடங்குகிறேன்

கனவுகளற்ற

பெருந்தூக்கத்திலிருந்து

மேடேறும் சிறுகுழந்தையின்

சறுக்குதல்கள் நினைவிலிருக்கிறது

எல்லாவற்றிலிருந்தும் எனனைப்

பிய்த்தெறிந்த

ஒளிக்கோர்வையில்

யாரோ ஒரு அம்மா

யாரோ ஒரு பையனுக்காக

கதறியழுது கொண்டிருந்தாள்

மறுபடியும்

வார்த்தைகளைத் தின்று

செரித்து

கழிவுதள்ளி

ரத்தக்கறை காயாத

மனதை

எங்காவது எறிந்துவிட்டு

ஒரு தீக்குச்சியில் எல்லாவற்றையும்

முடித்துக்கொள்ளவேண்டும்

கொழுத்திக்கொள்வதற்கும்

கொழுத்திவிடுதலுக்கும்

நடுவில்

ஆயிரம் சங்கடங்கள்

ஆயிரம் வருட நினைவுச்சுமை.

oOo

உன் நாடகங்கள் எனக்குச் சலித்துவிட்டது

நண்பா

விரிந்த இரு கை விரல்கள்

ஒரு நாளும் எனக்கு ராவணனை நினைவூட்டவில்லை

உன் விரல்களின் நிழல்

எனக்கு எந்த மிருகத்தையும்

காட்டவில்லை.

உன் கோமாளித்தனங்கள்

நிஜ வெறுப்பைப்போல சிரிப்பை வரவழைக்கவில்லை.

தத்திச் செல்வதை நிறுத்திக்கொள்கிறாயா?

நிச்சயம் கங்காரு இப்படி

லெவிஸ் கால்சராயுடன் குதிக்காது.

நாடகம் செய்ய நீ நன்றாகவே பழகிவிட்டாய்.

என்ன செய்வது..

உண்மைகளைப் பதிலாய் எழுதி

நானும் பழகிவிட்டேன்.