கிழிந்த‌ ச‌தை வாச‌ம் ஏறும்
வ‌ல்லூறு சிற‌குக‌ள் மித‌க்க‌
உன்னிட‌ம் வ‌ருகிறேன்
சாத்தானே

என்னை நானே
அறுத்துப் ப‌டைய‌லிட்டு
மீள்வ‌து குறித்த‌
ம‌ந்திர‌ங்க‌ளைச் சொல்லி

ப‌ரிமாறுத‌லுக்கான‌
இலைக‌ளை ஒதுக்கிவைத்து
நாபி சூடேற்றும் விள‌க்குக‌ளுடன்
ஆதியிலிருந்து தீராத‌
கேள்வியொன்றை உன்னிட‌ம் கேட்பேன்

ஆண்டாண்டு கால‌மாய்ச்
சொல்லித் தீராத‌ பொய்யொன்றை
என‌க்குச் சொல்வாய்

சாத்தானாயிருத்த‌ல் உன் தேர்வு.
ப‌க்த‌னாயிருத்த‌ல் என்னுடைய‌து
என்ப‌தைப்போல‌வே.

o
க‌ட‌வுளாயிருத்த‌ல்
சலிப்பான‌ ஒரு வேலை என்றாய்

ந‌ல்ல‌வ‌ர்க‌ளின் ஒரே நாட‌க‌த்தை
திரும்ப‌த் திரும்ப‌த் திரும்ப‌த்
திரும்ப‌த் திரும்ப‌த் திரும்ப‌த்
திரும்ப‌த் திரும்ப‌த் திரும்ப‌த்
திரும்ப‌ பார்த்துக்கொண்டு

ம‌றைவுக‌ளைப்பார்க்கும் கண்க‌ளுட‌ன்
வாருங்க‌ள் தோழி என‌
ந‌டித்துக்கொண்டு

தொண்டை எரிய‌க் க‌ட‌க்கும்
நீர்ம‌ச் சுவை மொட்டுக‌ளுட‌ன்
பாட்டில்க‌ளை உடைத்துக்கொண்டு

தீக்குச்சி ம‌றைந்த‌ பைக‌ளுட‌ன்
பிள‌க்ஸ் பேன‌ர்க‌ளைப் பிடித்துக்கொண்டு

வ‌லி மீறிய‌ க‌ண்ணீருட‌ன்
புன்ன‌கைக‌ளைப் ப‌கிர்ந்து கொண்டு

எல்லா பிம்ப‌த்திலிருந்தும்
எல்லா நாட‌க‌ங்க‌ளிலிருந்தும்
எல்லா புன்ன‌கையிலிருந்தும்
நீ கலைந்த‌ பிற‌கு
உன்னைச் சாத்தான் என்ற‌ழைத்தார்க‌ள்
என்னை உன் ப‌க்த‌னென்றும்

வார்த்தைக‌ளைப்ப‌ற்றி எப்போது
க‌வ‌லைப்ப‌ட்டிருக்கிறோம் நாம்?

oOo