செம்மண் புழுதி சூழ
குதிரைக்கு மேலாக அமர்ந்திருக்கிறார்
கொடுமீசை அய்யனார்

கூர்கத்திகளுடன்
கொடுவாளுடன்
கொலைப்பார்வைகளுடன்

யாருமற்ற வெளியை
பதனீர் கொண்டு
கடக்கும் கிழவி
அய்யனார் நிழலில்
புடவைத்தலைப்பில் விசிறிக்கொள்கிறாள்
வெயில் தணிய

எப்போதாவதுதான்
கிழவி வியர்வை பட்டு
வெயில் தணிய அய்யனார்க்கு
விதிக்கப்பட்டிருக்கிறது
பன்னெடுங்காலத்தின் வரலாற்று சாபம்

0

செங்குளக்கரைகளின் நந்தியாவெட்டை
கம்புகள் சுடலைக்கு
உரியவை.

விளையாட்டாய் வீட்டிற்கு
எடுத்து வந்தவர்கள்
மதிமயங்கி விழுந்த கதைகள்
சில உண்டு
திண்ணைக்கிழவிகளிடம்

பூப்பறித்து விளையாடிய‌
ஜோடியொன்று
வயிறு உப்பி
கரை ஒதுங்கியது
சுடலை கோயில் படித்துறையில்

கடவுள் மனுஷ்ய ரூபனாமே?