அந்த குட்டிச்சுவரில்தான் எப்போதும் பார்ப்பேன் அவனை. பழுப்பேறிய உடைகள். வழித்து தொடைக்கு மேல் ஏறிய லுங்கி. சடைசடையாய் திரிந்த சுருட்டை முடி.தோளிலிருந்து கால் வரை தொங்கும் இற்றுப்போன ஒரு ஜோல்னாபை.

யாரோ நட்டு வேறு யாரோ வெட்டிய கட்சிக்கொடியின் கம்பம் இருந்த இடம் அது.சின்னக் குதித்தலுடன் அவன் அதில் ஏறி அமர்வது குழந்தையின் லாவகத்துடன் இருக்கும். அந்த வட்டாரத்தின் குழந்தைகள் அனைவரையும் பயமுறுத்தி வைத்திருந்ததால், யாரும் அவன் பக்கம் போவதில்லை. பெரியவர்கள் கூட. மீறிப்போகும் குழந்தையிடம் அவன் கண்ணை உருட்டி “அம்மா திட்டுவாங்க. ஓடிருங்க” எனச் சொல்வது அவ்வளவு அழகாக இருக்கும். அருகில் போகும் பெரியவர்களுக்கு ஜோல்னாப்பையை மொத்தமாக முறுக்கி முதுகில் ஒரு அறை.
அந்த பையில் என்ன இருக்குமென்பது யாருக்கும் தெரியாத ரகசியம். நள்ளிரவில் பையில் இருக்கும் கத்தை காகிதங்களை மொத்தமாகத் தட்டி சுருக்கம் நீக்கி ஒவ்வொன்றாகப் படித்துப்பார்த்து பிறகு சுருட்டி பையில் திணித்துக்கொள்வதாக ஊரின் ஒட்டுமொத்தப்பேச்சு. ஆனால் அந்த காகிதங்களில் இருப்பவை குறித்து விதவிதமான கதைகள் ஊருக்குள் உலவி வந்தன. அந்த பையிலிருந்தவை அனைத்தும் காதல் கடிதங்களென்றும், அவற்றின் நடுவே காதலியின் கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்று இருப்பதாகவும், எல்லாக்காதலிகளைப்போல அவளும் ” நான் உங்கள நல்ல பிரண்டாத்தான் நினைச்சேன்” வசனத்துடன் பிரிந்ததிலிருந்து அவன் அப்படித் திரிவதாகவும் ஒரு கதை இளைஞர்களிடம் சுற்றுகிறது. அந்தக் காகிதங்கள் அனைத்தும் அவன் பெயரிலிருக்கும் சொத்துப் பத்திரங்கள் என்றும், அவன் உறவினர்கள் ஏமாற்றிப்பிடுங்கிக்கொண்டு அவனை தனியாக விட்டதிலிருந்து அவன் இப்படி அலைவதாக வயதான பெருசுகளின் கதை. நடுவாந்திர வயதுக்காரகள் இன்னொரு கதை வைத்திருந்தார்கள், மனைவியுடன் சண்டையில் ஆரம்பித்து இதுவரை பார்த்திராத பெண்ணின் அந்தரங்கங்களைத் தொட்டுப்போகும் விசித்திரக் கதை அது. எதையும் யாரும் அவனிடம் கேட்டு உறுதிசெய்யமுடியாது. மேலும், அவன் காகிதங்களை விரித்துப்பார்த்துக்கொண்டிருக்கும்போது அருகில் வருபவர் மீது தீக்குச்சியைக் கொளுத்திப்போடுவதாகக் கூட ஒரு கதை உண்டு.

இதுவரை அவனிடம் பெரியவர்கள் யாரும் பேசி யாரும் பார்த்ததில்லை. பசித்தால் அந்தத் திண்டின் நேர் எதிரில் நிற்கும் உணவத்தின் வாசலில் போய் நிற்பான். அந்த நேரத்தில் காசுக்கொடுத்துக்கொண்டிருப்பவனுக்கு ஒரு கூரிய பார்வை. கண்ணை அகற்றாமல் தலையைச் சாய்க்காமல், முக்கியமாக எதுவும் பேசாமல். பெரு நகரத்தின் தென் நுனியில் ஒட்டியிருக்கிறது என்றாலும், உள்ளூர்காரர்களே அதிகமாய்த் தென்படும் சிறு நகர் என்பதால், காசுகொடுத்துக்கொண்டிருப்பவர், இஅவனுக்கும் சேர்த்து ஒரு பொட்டலாம் வாங்கி கையில் திணித்து விட்டுச் செல்வார். நின்ற இடத்தில் அப்படியே அமர்ந்து பொட்டலத்தைப்பிரித்து அங்கேயே சாப்பிட்ட்டு விட்டுத்தான் கிளம்புவான். ஆனாலும் தரையில் எதுவும் சிந்துவதில்லை. அவ்வளவு தெளிவு. அவ்வளவு நாசூக்கு. ஆனால் அந்த இடத்திலும் அவனுடன் எதாவது பேச முயன்றால், முதுகில் ஒரு அறை. பிறகு திரும்பி எதுவும் பேசாமல், வாங்காமல் நகர்ந்துவிடுவான்.

 

எல்லா கட்டுமான பணிகளுக்கும் ஊரில் முதலில் தேடுவது முருகனைத்தான். அழுக்கேறிய ஒரு பழைய பொன்வண்டு சோப்பு விளம்பரம் பொறித்த பனியன். வெளிறிய நீலமும் வெள்ளையும் கலந்த கட்டம் போட்ட லுங்கி இவ்வளவுதான் முருகன். சிங்கப்பூர் பணம் என்ற பெயரில் திடீரென ஒரு ஜேசிபி வாங்கியதிலிருந்து முருகனும் ஊரில் முக்கியபுள்ளி. வீடுகட்டுவதற்கு முன்னதாக தளம் நிரப்ப வானம் தோண்ட முருகனின் ஜேசிபிக்கென்று தனி ராசி என ஊரில் ஒரு பேச்சுண்டு. முருகன் ஜேசிப்பிக்காக மாதக்கணக்கில் காத்துக்கிடந்த புதுப்பணக்காரர்கள் உண்டு.
செருப்பு போடாமல் வண்டியேறுவது, எலுமிச்சையைப் பிழிந்து வண்டிக்கு வாசமேற்றுவது என இன்னும் சில பல பின்னொட்டுகளுடன்தான் அந்த ராசி விஷயம் ஊருக்குள் உலா வந்தது. கொஞ்ச நாள் கேரளாவில் ஓட்டல் வேலை பார்த்தது குறித்த பல யூகங்களும். சிரிக்கச் சிரிக்க பேசும் வெள்ளந்தி மனதென்று சிலரும் வசியமை வேலையென்று சிலரும் பலவித வித்தைகள் தெரிந்தவன் என்று சிலரும் கதை சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

பான்பராக் கறையேறிய பற்களுடன் விடைத்த உதடுடன் சைக்கிளிலில் ஊருக்குள் அலையும் முருகனும், ஈரம் காயாத தலையுடன் சலவை லுங்கி வெள்ளை பனியன் சகிதம் ஜேசிபியில் வானம் தோண்ட வரும் முருகனும் ஒரே ஆள்தான் என சத்தியம் செய்தால் கூட யாரும் நம்ப மாட்டார்கள். கூடுதலாக ஐம்பது காசு அளவில் கரியெடுத்து பூசியதுபோன்ற நெற்றிப்பொட்டு மிரட்டல் பார்வையையும் இதனுடன் சேர்த்துக்கொள்ளலாம். கேட்க்கும்போதெல்லாம் செய்யும் தொழில் தெய்வம், சோறு போடும் தாய் என்றெல்லாம் உருவதிற்குப் பொருந்தாத பக்திமார்க்க சொற்பொழிவுகள் கூட இலவசமாய்க்கிடைக்கும்.
சிரிக்கப்பேசும் குணத்தைப்போல முன்கோபமும் நிறைய உண்டு. சின்னச் சின்ன வார்த்தைகளுக்கு எவனையாவது இழுத்துப்போட்டு சாத்திவிட்டு காவல் நிலையத்தில் கப்பம் கட்டி வருவது முருகனின் மாதாந்திரக் கடமைகளில் ஒன்று. இதுவரை எந்தச் சண்டைக்கும் காவலருக்குப் பயந்து முருகன் ஓடி ஒளிந்ததாய் கதை கிடையாது. ரத்தம் தெறிக்கும் அளவுக்கு கையில் கிடைத்ததையெல்லாம் வைத்து கையில் கிடைத்தவனைச் சாத்தவேண்டியது. போலிஸ் வரும்வரை அங்கையே காத்திருந்து, வந்ததும் ஏட்டுடன் எந்த மறுபேச்சுமில்லாமல் உடன் கிளம்ப வேண்டியதென முருகனின் வன்முறைக்குப்பின்னான சாந்தம் நிறைய ஆராயப்பட வேண்டியது.

சீமஒடமரம் எனப்படும் பார்த்தீனிய மரங்களின் மீது முருகனுக்கு தனிக்காதலுண்டு. அவற்றை வேரோடு அறுத்தெரிவதில்தான். மரத்தின் கிளையிலிருந்து தண்டு வரை வெட்டி முடித்தபிறகுதான் வருவான். அவனுக்கென்று சில கணக்குகள் உண்டு, இரண்டு மூன்று முறை வேர்த்தடத்தைச் சுற்றிவிட்டு, சில குறிப்பிட்ட இடங்களைக் கொத்தச் சொல்வான். பிறகு அரிவாள் எடுத்து அவன் சொல்லும் இடங்களில் மண்குதற வேண்டும்., அதே மரத்தின் ஆழமோடிய வேர்கள் அவன் சொன்ன இடத்தில் நிச்சயம் கிடைக்கும். பிறகு ஜேசிபியுடன் முருகனின் கைங்கர்யம். வேர்முட்டின் நுனியை லாவமாகப் பிடித்து லேசாக அசைத்தால் மொத்த வேர் மூடும் கிளம்பி வரும்.
வேர் மூடு கிளப்பிய எல்லா இரவிலும் முருகனுக்கு சாராயம் தேவை. உடன் கதை கேட்க இன்னொருத்தனும். மொத்தம் மூன்றே கதைகள் . முருகனை வீட்டிற்குள் பூட்டி வைத்து வாசலில் தனக்கு தீவைத்துக்கொண்டு தெருவெல்லாம் அலறியபடி ஓடிய முருகனின் அம்மாவின் கதை. அல்லது பஞ்சுமில் இயந்திரத்தில் தவறிவிட்ட விரலைக் காப்பாற்ற மில்லெல்லாம் திரும்பும்படி கதறி துண்டு துண்டாய் வெளி வந்த முருகனின் அப்பாவின் கதை அல்லது கிரைண்டரில் தலைமுடி சிக்கி முகமெல்லாம் பிய்ந்து போய் இறந்து போன முருகனின் தங்கையின் கதை.

வேலை வாங்குவதெற்கென்றே பிறந்தவன் என்றுதான் சொல்லவேண்டும் தண்டபாணியைப் பற்றி. தமிழ் சினிமா கிராமத்துமைனர் கதாபாத்திரத்தை ஒரு நொடி நினைத்துக்கொள்ளூங்கள், சில்க் ஜிப்பா பட்டு வேஷ்டிக்குப் பதில் வெள்ளைச் சலவை சட்டை. மேல் சட்டைப்பையின் சருகு சலவையில் மங்கலாகச் சிரிக்கும் ஆரஞ்சு நிறத்தாளின் காந்தி மற்றும் மஞ்சள் சாயம் ஏற்றப்பட்ட மயில்கண் வேஷ்டி. மற்றபடி அதே டபடப சப்த புல்லட் பைக் மற்றும் இன்னபிறவில் எந்த மாற்றமும் இல்லை.

உலகின் எல்லாவிதமான மத கடவுள் காத்து கருப்பு இன்னபிற நம்பிக்கைகளும் தண்டபாணிக்கு உண்டு. உள்ளங்கையில் விழிப்பது தொடங்கி கண்ணாடி பார்த்துவிட்டு தூங்கப்போவது வரை. போலவே ஜோதிடமெனக் கிளம்பினால் நட்சத்திரங்கள் ராசிகள் ஓரை திதி ராகு கேதுவிலிருந்து ருது கணிதம் வரை அத்துப்படி. எண்கணிதம் வாஸ்துவிலிருந்து கோல்ட் பிஷ் பெங்க்சூவி வரை நம்பிக்கைகளைப்பொறுத்தவரை தண்டபாணிக்கு மத மொழி நாடு இன வேறு பாடுகள் எதுவும் கிடையாது. ஊரில் முக்கால்வாசி பாட்டனார் சொத்து என்றாலும் , இந்த வித நம்பிக்கை மட்டும்தான் அதைக்கட்டிக் காப்பாற்றும் வல்லமையைத் தனக்குத் தந்ததென்பது தண்டபாணியின் ஆணித்தரமான வாதம். காசுள்ளவன் கருத்துக்கு எதிர்க்கருத்து சொல்ல எந்த ஊரிலாவது ஆளிருக்கிறார்களா என்ன?

தண்டபாணியின் வீட்டுகாம்பவுண்டிற்குள் அடுத்தடுத்தாக மூன்று அச்சுவெல்லங்களை அடுக்கி வைத்தாற்போல் மூன்று அய்யனார் சிலைகள் உண்டு. காம்பவுண்ட் என்பது பெரிதாய் ஒன்றுமில்லை. அதே தரையின் செம்மண் குழைத்து முக்கால் ஆள் உயரத்திற்கு எழுப்பப்பட்ட சுவர். அச்சுவெல்ல அய்யனார் சிலைக்கு நிழல் சேர்க்கும் ஓலைப்பந்தல் ஒட்டினாற்போல் கம்பித் தட்டி பொருத்தப்பட்ட தண்டபாணியின் ஓட்டு வீடு. வெள்ளிச் சாமங்களில் தண்டபாணி வீட்டிலிருந்து விதவிதமான பெண் அழுகுரல்கள் கேட்கும்.. மறு நாள் காலையில் செம்மண் சுவர்கள் இன்னும் ரத்தம் ஏறியிருக்கும். அந்த வாரம் முழுவதும் தண்டபாணி மற்றும் முருகன் கைகளில் காசுபுரளும்.

 

பிறகொரு நாள் தண்டபாணி ஊருக்கு வெளியிலிருந்த சின்னக்குன்றைச் சுற்றி குவாரி ஆரம்பித்தார். ஊரின் நிறம் மாறியது. வாழைவெட்டவும், மருந்தடிக்கவும் விவசாயக்கூலிகளாக இருந்தவர்கள் குவாரிக்கு வேலைக்கு போனார்கள். நடை பழகியவர்கள் புதிய ஹெர்குலிஸ் சைக்கிளும், சைக்கிள்காரர்கள் டி.வி.எஸ் 50க்கும் மாறினார்கள். வெள்ளைச்சட்டைகள் சகஜமாயின. ஊரில் எப்பொழுதும் வெடிச்சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. காசு புரள ஆரம்பித்தது. திடீரென ஒரு ஞாயிறன்று ஊருக்குள் போலிஸ் வந்தது. தண்டபாணியைப் பிடித்துக்கொண்டு போனார்கள். முருகன் தலைமறைவானதாகவும் அவனைப்பற்றி தகவல் தெரிந்தவர்கள் போலிஸிற்கு தெரிவிக்குமாறும் தண்டோரா போடப்பட்டது. அந்த பீடத்தில் இப்பொழுதெல்லாம் அந்த பைத்தியக்காரனைப் பார்க்க முடிவதில்லை. ஊர் சகஜ நிலைக்கு திரும்பியபிறகான ஒரு வாரத்தின் நள்ளிரவில் தண்டபாணியின் மகள் அனிதா ஒரு ஜோல்னாப்பை நிறைய கத்தைக்காகிதங்களைக் கொண்டுபோய் வீட்டின் பின்னால் எரித்ததாக பார்த்தவர்கள் சிலர் சொன்னார்கள்.

நன்றி : அதீதம்