சமீபத்தில் காதல் கவிதைகள் எழுதுவதற்கான எந்த வாய்ப்பும் அமையவில்லை ஆதலால், சென்ற வருடத்தின் தூங்காத இரவில், கல்யாணமாகாதவனின் கடைசி இரவு (மறுநாள் கல்யாணம்) பற்றிய கூகுள் பஸ்ஸில், அள்ளித் தெளித்த சில கவிதைகள். பேக்கப்பிற்காக.

oOo

மூன்றாவது கோப்பையை
வெற்றிலை நனைத்து
உறிஞ்சி முடிக்கும்போது
வேறு எதோ ஒன்றின் நியாபகம்

முந்தைய இரவின்
வாசனையை உறிஞ்சி அறியும்
அவளிடம்
எதன் நியாபகம் என
பகிர்ந்துகொள்ளலாம்
தயக்கமின்றி

O

என் படுக்கையில்
பாதி இடத்தை
எடுத்துக்கொள்ளப் போகிறாய்
என்றேன்

உனக்கு இல்லாத
இடமா என சிரித்துச்
சொல்கிறாள்

திருமணத்திற்கு முதல் நாள்
போனில் பேசவில்லைஎன
யார் அழுதார்கள்?

O

புரண்டு படுக்க நாளை
இடமிருக்காது எனத் தெரியும்

போலவே

புரண்டு படுக்க
இடமிருக்கக்கூடாதென்ற
ஆசையும்

O

பில்டர் காபி மணத்துடன்
ஈரத்தலை சொட்ட
பள்ளி எழலாம்
குங்குமம் ஈசிய கன்னங்களை
வெக்கத்துடன் துடைத்துக்
கொள்ள கண்ணாடி தேடலாம்
கால் மடக்கி முகம்
மட்டும் கதவிற்கு
அந்தப்புறம்
முகம் நீட்டி
உதடு துடைத்து
மீண்டெழலாம்
அல்லது
பிற கனவுகளைப்போலவே
இதையும்
இன்னொரு இரவில்
கவிதைகளுக்குள் ஒளித்துச் சொல்லலாம்
திருமதிகளின் நகைச்சுவையுடன் சேர்த்து

O

எப்படித் தொடங்கலாம்
நாளை என்ற
கேள்விக்கு
வெற்றுக் குறுஞ்செய்திகளை
அனுப்புகிறாய்

இப்படியும் தொடங்கலாமா
இரவு

O

குழந்தைக்குப் பெயர் வைக்கும்
அந்த இரவிலிருந்து
எப்படி தப்பி வருவது

சிணுங்கல்களுக்கு
தலையாட்ட நானும்
புதுச் சிணுங்கல்களுக்கு
நீயும்
பழக்கபபடுத்தப்பட்டபின்

O

குட் நைட் குறுஞ்செய்திதான்
கடைசியாக
இருந்திருக்கும்

நீ மீண்டும்
”நாளைக்குத்தான்”
என பதில் அனுப்பாமல்
இருந்திருந்தால்