அன்பின் எஸ்தர்,

இது எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு நான் எழுதும் கடிதம் தெரியுமா? கடைசியாய் எழுதிய கடிதமும் உனக்குத்தான். பள்ளிக்கு நடுவிலிருந்த சேப்பலில் ஜெபத்திற்கு நடுவிற்கே உன் மடியில் தூக்கிப்போட்டதுதான் நான் கடைசியாய் எழுதிய கடிதம். ஒரு நொடி முகத்தைச் சுருக்கிவிட்டு கண்ணைத் திறக்காமலே சுருட்டி பைபிளுக்குள் வைத்துக்கொண்டாய். எழுந்து போகும் போது திரும்பி ஒரு முறை சிரித்துப்போனாய். அதற்குப்பிறகு உன்னைப்பார்க்க வாய்க்கவில்லை. நீர் பறவையின் எஸ்தர்தான் இந்த கடிதத்தை எழுத வைத்திருக்கிறாள். அதே லேடி பேர்ட் சைக்கிள், அதே அண்ணன் சட்டை. அதே கண்கள். அதே ’சாத்தானே விலகிப்போ’ கோபம்.

என் நினைவிருக்கிறதா எஸ்தர்? இருட்டில் உன் கன்னத்தில் வைத்துப்போன என் முத்தமாவது? மறு நாள் முகமெல்லாம் வீங்கிப்போய் பெஞ்சில் தலைசாய்த்து அழுது சிவந்த கண்களுடன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாய் யாரும் பார்க்காத நேரமெல்லாம். அந்தக் கண்களை எப்படி மறப்பேன்? தனியாய் சந்திக்க நேர்ந்த ஒரு மாலையில் உனக்காய் நான் ஜெபிக்கிறேன் என்றாய். என் மேல் யாரும் அக்கறை காட்டியதில்லை எஸ்தர். என்னை யாரும் மனிதனாய் மதித்ததில்லை.
என் சுக துக்கங்கள் யாருக்கும் ஒரு பொருட்டில்லை எஸ்தர். எல்லாம் உனக்குத் தெரியும். இருந்தும் ஏன் என்னில் அக்கறை காட்டினாய்?

வீட்டில் ஒரு தொலைக்காட்சிப்பெட்டி உண்டு எஸ்தர். மரப்பெட்டி மூடியது. ஒனிடா என நினைக்கிறேன். மேலும் கட்டில் பீரோ ஹார்லிக்ஸ் பாட்டில் பழங்கால தேக்குத் தூண்கள். பெரிய அழி. இருபுறம் நீட்டிய திண்ணை. அப்படித்தான் நானும் வீட்டில் ஒரு ஜடப்பொருள் எஸ்தர்.

மேய்ப்பன் தொலைத்து தெருவில் அலைந்த ஆட்டுக்குட்டி நான் எஸ்தர். மடி முட்ட அலைந்த சிறு வெள்ளாட்டின் கதை எனது கதை எஸ்தர். தாயினும் சாலப்பரிந்தூட்ட இன்னொரு ஜீவன் கிடையாது எஸ்தர்.

பள்ளியில் பத்தோடு பதினொன்றாய் களுக் சிரிப்புகளுக்குள் உன்னை கவனித்ததில்லை. மாம்பழத் திருநாள் சந்தையில் உனக்கு வேறுமுகம் எஸ்தர். சின்னப்பொம்மைகளை ஒரு கூட்டம் குழந்தைகளுக்காய் பேரம் பேசிக்கொண்டிருக்கையில் எனக்கான மறுபிறப்பை நான் அடைந்தேன் எஸ்தர். அத்தனை குழந்தைகளுக்குள் நடுவில் ஒளிந்து உன் கை பிடித்து ஓடாத கடிகாரம் ஒன்றை வாங்கிக்கொள்ளவேண்டும். அது காட்டும் நேரம் உனைப்பார்த்த நேரமாய் எப்போதும் வைத்திருக்கும் வரமெனத் தோன்றியது எஸ்தர்..

பிறகு உன் ஒவ்வொரு அசைவையும் கவனிக்கத் தொடங்கினேன். காலை மாலை உணவு இடைவேளைகள், படிப்பு நேரங்களில் மரப்பெஞ்சில் கைகூப்பித் தொழும் உன்னை எத்தனை வாஞ்சையாய்ப் பார்த்திருந்திருந்திருக்கிறேன். வெயிலில் முட்டிக்கால் போட்டிருக்கும் சிறு வயதுப் பிள்ளைகளுக்காக எவ்வளவு கண்ணீர் உகுத்திருப்பாய்? தெரியாதவர்களுக்கு கண்ணீர் விடுவதெல்லாம் எனக்கு மட்டுமே கண்ணீர் விட்டுப்பழகிய எனக்கு புதிது எஸ்தர். எனக்காகக் கண்ணீர் விடும் இன்னொரு ஜீவனுக்காய் ஏங்கிப்போயிருந்த எனக்கு நீ எவ்வளவு பெரிய பொக்கிஷம் தெரியுமா எஸ்தர்?

நான் யாரிடமும் உன்னைப்பற்றி பகிர்ந்ததில்லை எஸ்தர். நிஜமாகவே உனக்குச் சொல்கிறேன். உன் பெயரை எனக்குள் உச்சரித்ததெல்லாம் யாருக்கும் கேட்டிருக்காதென்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை உன் பெயரை யாரிடம் நான் பேசியதில்லை என்பதுவும்.

காதல் புகை எஸ்தர். எனக்குள்ளெல்லாம் பொத்தி வைக்க முடியாது. யாரிடமும் சொல்லாவிடினும் எல்லாருக்கும் தெரிந்துவிடும். உனக்குத் தெரிந்த பிறகும் என்ன பெரிதாய் செய்துவிட்டாய் நீ? என் மனந்திரும்பலுக்காய் நீ ஜெபித்ததான கதைகளையெல்லாம் யார் வந்து என்னிடம் சொன்னார்கள். உன் கண்களில் என் தவறுகளைக் கண்டேன் எஸ்தர். என் விலகுதலை உனக்குத் தெரியச் செய்தேன். எதையும் மதிக்கவில்லை நீ. எத்தனை தூரம் விலகினாலும் விரட்டி வந்தாய். என்னை நெருங்கி நட்பு மட்டும் பாராட்டினாய் மிகத் தெளிவாய்.

நான் ஒன்றும் குழந்தையில்லை எஸ்தர். எனக்குத் தெரியும். நான் உன்னைக் காதலிக்கத் தொடங்கிய நொடி எனக்குத் தெரியும். என்னைத் திருத்தி விட எத்தனித்து தூய நட்பை என்னில் விதைக்க நீ பேசிய ஒவ்வொரு வார்த்தையும் எனக்குப் புரியும் எஸ்தர். உன் கண்கள் எனக்கு மனப்பாடம். உன் கோபம், கண்ணீர் வலி குழப்பம். என் காதலை எத்தனை தெளிவாய் என் கண்ணில் எடுத்தாயோ அதே தெளிவுடன் உன் கண்களில் உன் சாமர்த்திய நட்பை, தூய அன்பைக்கண்டேன் எஸ்தர்.

அந்த தூய அன்பு என்னைக் குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஒருதலைக்காதலென்பதெல்லாம் சினிமா சொல் எஸ்தர். காதல் என்பதற்கு தலையெல்லாம் கிடையாது. ஒரு உணர்வு. ஒரு விருப்பம். எண்பது வருடங்கள் உன்னுடன் உன் முகம் பார்த்துக்கொண்டு பேசிக்கொண்டு உன்னை மட்டும் நேசித்துக்கொண்டு உன்னுள் என் பெயரைத் தொலைத்துத் திரிய தயாராகும் ஒரு ஒப்பந்தம். உன் எண்ணங்கள் புரிந்து சின்ன சண்டைகளிட்டு விலகிவந்தேன். நீ விலகவேண்டும் என்றே பாவங்களை அதிகரித்தேன். நீ விலகவில்லை எஸ்தர். என்னை இன்னும் நெருங்கி வந்தாய். என் எல்லாக்குற்றங்களையும் மன்னித்தாய். எல்லாத் தவறுகளையும் திருத்தி விட விரும்பினாய்.

இல்லாத காதல் ஒரு நொடியில் பூத்து விடும் எஸ்தர். பச்சை சிலேட்டுக்கு முத்தமிட்ட குழந்தையைப் பார்த்து நீ சிரித்த நொடியில் எனக்குள் பூத்ததைப்போல. இருக்கும் காதலை அழிக்க முடியாது எஸ்தர். நல்ல நண்பர்களாய் இருப்பதான பாவனையுடன் உணர்வுகளை அடக்கி, உனக்காக பிரார்த்தித்து எவனோ உன் கை பிடிக்கும் சர்ச்சில் புன்னகைத்து புகைப்படம் எடுத்து… உலக மேடையில் என் பாத்திரத்தை ஒழுங்காய் செய்யாமல் நீ விரும்பும் இன்னோர் பாத்திரத்தை நான் என நானே நம்ப முடியாது எஸ்தர்.

ஒரு நொடியில் காலில் விழுந்து மன்றாடத் தோன்றும். ஒரு நொடியில் தோளில் சாய்ந்து அழத் தோன்றும். ஒரு நொடியில் சட்டைக்கை மடித்து உன்னை நிறுத்தி எல்லாவற்றையும் விளக்கத் தோன்றும். ஒரே நேரத்தில் பைத்தியக்கார காதலானாகவும், சகியின் மனம் வலிக்காமல் பார்த்துப்பேசும் மருத்துவனாகவும் இரட்டை வேட நரகம் எஸ்தர்.

எதுவுமே நீ கேட்டிருக்க வேண்டாம் எஸ்தர். என் காதலை அறிந்து கொண்டதுபோலவே என் மெளனத்தின் காரணத்தையும் அறிந்துதான் வைத்திருப்பாய். வைத்துக்கொண்டே உன் தேவதை யார் என நீயே கேட்டு தோள் சாய்த்து நீ சிரித்திருக்க வேண்டாம் எஸ்தர். உன்னுடனான ஒவ்வொரு நொடிக்குமான கவிதையை எடுத்துக்கொண்டு இது யார் என நீயே கேட்டிருக்க வேண்டாம் எஸ்தர். பத்தோடு பதினொன்றான கவிதைகள் எதன் பின்னணி என உனக்கும் எனக்கும் தெரிந்திருக்கும்போது ஏன் என நீயே கேட்க என்ன சொல்வேன் எஸ்தர்?

ஒரு கொந்தளிப்பில் நீயென்றேன். உனக்குத் தெரிந்ததுதான் என எனக்குத் தெரியும். பிறகு உன் வார்த்தைகள் குறைந்தது. இவனை இனி திருத்தமுடியாதென அப்போதுதான் தெரிந்ததா எஸ்தர்? அல்லது அந்த மூலைக்கு வந்து விலகலாம் என்ற எண்ணத்தில்தான் துரத்தினாயா? எனக்கு அப்பவே தெரியும் மாதிரியான உன் வார்த்தைகள் எவ்வளவு வலி தெரியுமா எஸ்தர். நாம் அறிந்திருந்தோம். நீ தெரியாதுபோல் கேட்டாய். நீயும் விருப்பத்துடன் என் தைரியம் சோதிக்க கேட்கிறாய் என்றே நேரில் சொன்னேன். பிறகு சந்தித்தாய் . எனக்குத் தெரியுமென்றாய். என் கண்ணில் பார்த்ததாய்ச் சொன்னாய். எனக்குத் தைரியமில்லை என்றாய். ஏன் எல்லா ஆண்களும் இப்படி என்றாய். நான் இன்னொருவனைக் காதலித்தால் என்ன செய்வாய் என்றாய். என் வழியில் திரும்புவேன் என்றவனை நிறுத்தி நான் யாரையும் காதலிக்கவில்லை என்றாய்.

ஏன் இத்தனை குழப்பம் எஸ்தர். ஏன் இத்தனை கேள்விகள். ஏன் இத்தனை சுழல்கள்? எனக்குள் பூத்தது உன்னுள் இல்லையென நினைத்து விலகத் தொடங்கியவனை நிறுத்தி உன்னை நோக்கி அழைத்தாய். எல்லா வழிகளையும் திறந்து வைத்தாய். உள்ளே வந்தவனை இழுத்து வைத்து ஏன் உள்ளே வந்தாய் என்றாய். நீ வருவாய் எனத் தெரியுமென்றாய். உள்ளே வர உனக்குத் தைரியமில்லை என்றாய். இது எந்த ஜென்மத்தின் மிச்சம் எஸ்தர்? குறைந்த பட்சம் இப்போதாவாது முடித்துவிட்டாயா?

என்னைச் சோதிப்பது எனக்குப் பிடிக்காதென்பது தெரியும் தானே? கங்கை எங்கே போகிறாள் ஜெயகாந்தன் நாவல் நான் படித்திருக்க வாய்ப்பே இல்லையா எஸ்தர்? எவ்வளவு அழகாய்க்கேட்டாய்.. அதன் முடிவில் உனக்கு உடன்பாடா என? அதில் தவறில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து எஸ்தர். பேச விரும்புபவள் அதில் உன் உடன்படாமையை பேசியிருக்கலாமே எஸ்தர்? எதற்காக நான் படித்திருக்கிறேனா என அதன் முடிவைச் சொல்லச்சொல்லி எனைச் சோதிக்கவேண்டும்? உன்னிடம் பொய்சொல்பவனா நான் எஸ்தர்?

இன்னும் வருடக்கணக்காய் இந்த சுமை எனை அழுத்தும் எஸ்தர். எழுத்தெல்லாம் சும்மா ஒரு இறக்கி வைத்தல். நியாபகம் அதன் இரட்டையைத் தான் எழுத்தில் இறக்கி வைக்கத் தள்ளுகிறது. நிகழ்வுகளின் உண்மைச் சுமை இன்னும் உள்ளேயேதான் இருக்கிறது எஸ்தர்.

இது கடலில் எறியப்பட்ட மாலுமியின் கடிதம் எஸ்தர். எதோ ஒரு தலைமுறை உன் எதோ ஒரு தலைமுறையிடம் யார் யாருக்கானது என்ற முத்திரைகளின்றி கொண்டு சேர்க்கும், சேர்த்தால் இந்தக் கடிதத்தின் முற்றுப்புள்ளிக்கான வெற்றிடத்தில் ஒரு துளி அவர்கள் வைப்பார்கள் எஸ்தர்.

எனக்கான கண்ணீர் விடும் மனிதர்களுக்காகத்தானே உன்னிடம் தொடங்கி இத்தனை பேரிடம் இத்தனை போராட்டம்?

நினைவினால் மட்டும் வாழும்
ஷிவா.