ஆயிஷா. எத்தனை கோடி முறை உச்சரித்த பேர் உனது. என் பாதுகாப்பு வட்டத்தின் வெளியிலிருந்து புன்னகைத்த முதல் ஜீவன் நீ. உரிமை கொண்டாடாத, உன்னை எனக்கானவள், என்னுடையவளென்ற எந்த அகங்காரமும் அற்ற முதல் குழந்தைத் தனமான அன்பு உன் மீது இருந்தது. என்னுடன் யாருமற்ற கல்விச்சாலையில் முதல் புன்னகையை, முதல் கைகுலுக்கலை பரிசளித்தவள் நீ. உனக்கும் எனக்குமான நாற்காலிகளின் இடைவெளியை இரு கை நீட்டி இல்லாமலாக்கும் வித்தையை எனக்குக் கற்றுக்கொடுத்தவள் நீ. நமக்குள் பரிமாறிக்கொண்டிருந்த சிட்டைகளை இல்லாமலாக்குவதற்கு புதுப்புது வழிகளை அதே சிட்டைகளில் எழுதி எனக்கு அனுப்பிக்கொண்டே இருந்தாய். என் பாடங்கள் உன்னிடமிருந்தே தொடங்கின.

என் வாழ்வின் பெண்கள் உன் கண்களின் மூலமே அடையாளம் காணப்படுகிறார்கள். முக்காடிட்ட நெற்றிக்குக்கீழிருந்து அசையும் உன் புருவத்தின் ஓர வளைவுகள் வரை எத்தனை புகைப்படங்கள் என்னுள் நிறைந்திருக்கின்றன தெரியுமா? சில மைல் மிதிவண்டிப்பயணம் முடிந்து நீண்ட வெயிலுக்கான சிறு தென்றலுக்காக எனை நோக்கிப் புன்னகைத்தவள் நீ. பாடம் சொல்லிக்கொடுப்பதாக அருகிலமர்ந்து எதையோ பேசிக்கொண்டிருப்பாய். நொடியின் நூற்ற்றில் ஒரு பங்கு நேரத்தில் உன் விரல் என்னை உரசிப்போகும். மிருதுவான உன் புறங்கையின் தண்மை இன்னும் என் விரல்களில் உண்டு. உன் குட்டுகளில் ஒரு தலை கோதுதல் ஒளிந்திருந்தது. உன் புன்னகையின், உன் ஸ்பரிசங்களின், உன் பார்வைகளின் சங்கேதங்களை இத்தனை வருடம் கழித்து காதல் என அர்த்தப்படுத்திக்கொள்ளவா ஆயிஷா?

லேடிபேர்டும், ஹெர்குலிஸும் சாய்ந்திருக்கும் வேப்பமரம் இன்று இல்லை ஆயிஷா. புத்தகங்கள் சிதறிக்கிடக்க ஒருவரை ஒருவர் இமைக்காமல் பார்த்திருந்த தருணங்களும் இன்று இல்லை. அதற்கான மன நிலையைக் கடந்து வெகுதூரம் தார்ச்சாலையில் கடந்து வந்துவிட்டேன். இளகிய தார்ச்சூட்டினை வெற்றுக்காலில் பெற்றுக்கொண்டு, என் மடியில் கால் நீட்டி அழுத அந்தக் கணங்களுக்கு எந்த வழியே போவேன் நான்? ஒட்டியிருந்த தார் காய்ந்து மெல்ல உரித்தெடுத்து ஒத்தடமிட்ட என் அன்பு இன்னும் உன் நினைவில் உண்டா? என் தோள் பிடித்து மெல்ல நடந்துவந்த அந்த நம்பிக்கையை பத்திரமாகத்தானே வைத்திருக்கிறாய். எனக்குத் தெரியும் ஆயிஷா, உன் வெயில் கணங்களை உன் கண்ணீரை வீட்டில் உகுத்திருந்தால், பள்ளியைவிட்டு உன்னை நிறுத்தியிருப்பார்கள். இளவரசியைப்போல் கால் நீட்டி வானொலிப்பெட்டிகளுடன் உன் நாட்களைக் கடத்தியிருக்கலாம். உனக்கான மாமன்கள் காத்திருப்பார்கள். ஆனாலும் நீ கல்வியைத் தேர்ந்தெடுத்திருந்தாய் அதன் அத்தனை வலிகளையும் பொறுத்துக்கொண்டு என உன் மீது எல்லாருக்கும் மரியாதை உண்டு. நீ தேர்ந்தெடுத்தது கல்வியை அல்ல என்னை எனக் கிசுகிசுத்து உன் மீதான என் மரியாதையைக் காதலாக மாற்றிக்கொண்டவள் நீ.

அரளி உனக்குப் பிடிக்கும். சிவப்பு அரளி. பூவைத் தலையில் வைத்துக்கொள்ளமாட்டாய் நீ. ஆனாலும் கையில் வைத்திருக்கப் பிடிக்கும். கசப்பு மணம் வீசும் அரளியைக் கையில் வைத்துக்கொண்டிருக்கும் உன் பிம்பம் ஆயுட்கால வரம். எல்லா பாறைகளையும் நினைவுகளை ஊன்றிக்கொண்டுதானே நடக்கவேண்டியிருக்கிறது. சிவப்பு அரளி பூவைப் போலத்தானே நான் உனக்கும். எதையும் உரிமை கொண்டாடாத, எதையும் எதிர்பாக்காத, எதையும் விரும்பாத அந்த நொடிக்கான உறவாகத்தானே நாம் இருந்தோம். எல்லா நாள்களும் கடைசி சந்திப்பைப் போலத்தானே நாம் வார்த்தைச் சிட்டைகளைப் பகிர்ந்து கொண்டோம்? புன்னகைகளை? ஸ்பரிசத்தை? நம்பிக்கைகளை?

என் மத அடையாளங்களை விரும்பித் துறந்தவன் நான். உன் மத அடையாளங்களைத் துறக்க விரும்பியவள் நீ. ஜோதிடம் குறித்து எத்தனை கேள்விகளைக் கேட்டாய். பின்னணி உள்ள எல்லாருக்கும் எல்லாமும் தெரிந்திருக்கும் என எந்த மடையன் சொன்னது? ஆனாலும் கற்றுக்கொண்டேன் ஆயிஷா. உனக்காக. எல்லா ஆச்சர்யக் கண்களையும், கண்டிப்பு மரக்குச்சிகளையும், அவமான நிமிடங்களையும் தாண்டி ஜோதிடத்தை மற்ற பாடங்களிலும் மேலானதாக வைத்து கற்றுக்கொண்டேன். உன் கேள்விகளுக்கு பதில் சொல்ல மட்டும். அல்லது கேள்விகேட்க விடாமல் அந்த கனவு கணக்குகளைக் குறித்த சொந்தக் கதைகளை உன்னிடம் விடாமல் பேசிக்கொண்டிருக்கவாவது. உன்னைப்பிரியும் நாள் குறித்த கணக்குகளை ஒரு நாளும் போட்டுப்பார்த்ததில்லை. தெரியும் எனக்கு. பிரிந்துவிடுவாய். அதற்கான நாள் புது நாட்காட்டியில் சமீபத்திருக்கும் என்றெல்லாம் தெரிந்ததுதான். இதில் கணக்கு போட்டு வேறு கண்ணீரை சேர்த்துக்கொள்ள வேண்டுமா?

உன் ஆடையிலிருந்து விழுந்த நூல் கொத்தை எப்போதாவது எடுத்து பார்த்துக்கொள்வேன் ஆயிஷா.ஹீரோ பேனா மை பிழிந்து நான் இதயம் வரைந்து குடுத்த உன் கைக்குட்டை எங்கிருக்கிறது இப்போது? என் பெயர் கூட்டி வாழப்பிறந்தவள் என இருவர் பெயரிணைத்து நான் கையெழுத்திட்ட உன் நோட்டு? அரளிப்பூ காய வைத்து நான் ஒட்டிக்குடுத்த புத்தகப் பக்கங்கள்? நீ அமர்ந்த என் மிதிவண்டி கம்பிகள். உன் மிதிவண்டியில் நான் தகவல் சிட்டைகளை ஒளித்து வைக்கும் மறைவிடங்கள்? எதையாவது தொலைத்துக்கொண்டேயிருக்கும் மறதிக்காரெனென எப்பொழுதும் என்னைப் பரிகசிக்கும் ஆயிஷாவே.

உன்னைத் தொலைத்துவிட்டேன். ஆனாலும் நான் மறதிக்காரன் இல்லை.