லெட்சுமிப்பாட்டி வீட்டிற்குள் நுழையும் பொழுது மணி மூன்று நாப்பது. வெயில் மெல்ல தாழத் தொடங்கியிருந்தது. அக்ரஹாரத்தில் கடைசி மூலையில் பெரிய வீடு என அப்பா சொல்லி அனுப்பியிருந்தார். வலதுபக்கமும் இடதுபக்கமும் படுத்தால் கூட என் உயரத்தில் பாதி மிச்சமிருக்கும் அளவுக்கு அகலம். வாசல் என்னைவிட மெலிந்து கிடந்தது. உள்ளிருந்து யாராவது வெளியே வந்தால் நானே வழிவிட்டு நின்றால்தான் அவர்கள் வெளியே போக முடியும். அழிக்கதவு திண்ணை என யாராவது வெள்ளைக்காரன் கடந்து சென்றால் இரண்டு மணி நேரம் நின்று போட்டோ எடுத்துவிட்டுதான் போகும் அளவு புராதனமான வீடு. படியேறி பித்தளைப்பூணை கதவில் அடித்தேன் (இரு கையாலும் தான். என் உடல் வலுதான் உங்களுத்தெரியுமே?)

‘யார்ரது..’

யாரென்று சொல்லுவது. பேரன் என்றெல்லாம் சொல்லமுடியாது. அக்ரஹாரத்தில் பாதிவீட்டில் இருப்பவர்கள் ரத்தவழிப்பேரன்கள். பிறரும் கூட தூரத்துச் சொந்தத்தில் (”ஓர்ப்பிடியாளோட அம்மா இருக்காளோல்யோ? அவ மருமான் வழி புள்ளையாண்டான்.. உனக்கு சித்தப்பண்டா!”) பேரன் வகையறாதான் தெருமுழுவதும். இன்னொரு முறையும் கதவைத்தட்டினேன்.

”கேக்குறனோல்யோ? கதவ பாட்டு தட்டிண்ட்ருந்தா பெரியவாளுக்கு என்ன மரியாதை”

பாட்டிதான் கதவைத் திறந்தாள். அப்படியொன்றும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. சின்ன வயதில் எதோ ஒரு கல்யாணத்தில் என் கன்னத்தைக்கொஞ்சிய அதே பாட்டிதான். அதே நடக்கமுடியாத பெருத்த ஆகிருதி. என்ன உயரம்தான் குறைந்திருந்தது போல் தோன்றியது. சின்ன வயதில் என் கை தூக்கி பாட்டி இடுப்பில் ஏறிய நினைவு மங்கலாக இருக்கிறது. இப்போது கிட்டத்தட்ட நான் கை நீட்டி பாட்டியின் கன்னத்தைக் கிள்ளிக்கொஞ்சலாம்.

“ஸ்ரீராமானா.. வாடா.. என்ன இந்தக் கிழவியைப்பாக்கணும்னு இப்பதான் தோணுச்சா நோக்கு? ஏண்டா முழிச்சுண்டே நிக்குற.. நம்ம ஆம்தான். உள்ற வா.”

“ஆமா பாட்டி.தாத்தா இல்லையா ஆத்துல?”

“இவ்ளொ நேரம் இங்கதான் இருந்தார். இப்பதான் எழுந்து வெளிய போனார். நாளைக்கு யார்க்கோ திதியாம். தர்ப்பை பறிக்கணும்னு..”

உடலை நடத்தமுடியாமல் நடத்திக்கூட்டிக்கொண்டு போய்க்கொண்டிருந்தாள் பாட்டி.முதுமையில் உடல் பெரிய சுமை. பெரிய உடல் இன்னும் சுமை.

“என்னடா நாம்பாட்டு பேசிண்டே இருக்கேன்.. நீ அமைதியா வர்ற… இரு. ஜலம் எடுத்துண்டு வர்றேன்.”

“இல்ல பாட்டி. வேண்டாம். இப்பதான் காபிகுடிச்சுட்டு வர்றேன்.”

நாக்கைக்கடித்துக்கொண்டேன். சொல்லியிருக்கக்கூடாது. மெதுவாய் அசைந்து கட்டிலில் அமர்ந்தாள். எதிரில் ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு நானும் அமர்ந்தேன்.

”எங்கடா.. கடக்காப்பியா? கடங்காரா.. கண்ட இடத்துல கண்டதக் குடிப்பாளோ? பாட்டி ஒருத்தி இருப்பாளே… போய் காப்பிப்போட்றீன்னு சொல்வோம்னு தோணுச்சா? உன்னச்சொல்லிக்குத்தமில்லடா.. இந்தக்காலத்துக்கோந்தேழ் அப்படி வளந்துட்டேள். எங்க காலத்துல வெளியில ஜலம் வாங்கித் தரமாட்டார் எந்த்தோப்பனார். சரி.. சந்தியாவது பண்றியா.. இல்ல அதையும் விட்டொழிச்சாச்சா?”

இதுதான் பாட்டி. வாயைத் திறந்தால் மூடத்தெரியாது. சந்தியாவந்தனத்தில் தொடங்கும் பேச்சு வளரும் திசை பிடிபட்டு பயமுறுத்தியது.சொல்லித்தான் ஆகவேண்டும்.

“கடையில இல்ல பாட்டி. பெரிய அழி ஆத்துக்குப் போயிருந்தேன். அங்கதான் மாமி குடுத்தா”

சேலைத்தலைப்பால் விசிறிக்கொண்டதை நிறுத்தி என்னை தீர்க்கமாய்ப்பார்த்தாள். அண்ணாந்து விட்டத்தைப் பார்த்தாள். மின்விசிறி உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கரக் கரக் சத்ததைத் துப்பிக்கொண்டிருந்தது

ஒரு நிமிடம் முழுமையாக அமைதியாக இருந்தாள். தப்பான இடத்தில் சொல்லக்கூடாத ஆளைப்பற்றிச் சொன்னது என் தவறுதான். பெருமூச்சுடன் எழுந்து சமையக்கட்டுக்குப் போனாள்.

“இருடா காப்பி கலந்துண்டு வர்றேன்”

இனி ஒன்றும் சொல்லமுடியாது, அந்த வீட்டில் காப்பி குடித்தால் இங்கும் குடித்துதான் ஆகவேண்டும்.

o

’வாடா பேராண்டி.. இப்பதான் வழிதெரிஞ்சுதா? காப்பி சாப்டியோ?”

சத்தத்துடன் வருவதுதான் தாத்தாவின் பழக்கம். முடியை இழுத்து பின்னந்தலையில் ப வடிவத்தில் கொண்டையிட்டிருந்தார். அழுக்கேறிய துண்டு கையில் கட்டுத் தர்ப்பை. துளித்துளியாய் வியர்த்த உடம்பில் தேர்வடம் சைஸில் அழுக்கேறிய பூணூல். மடித்துக்கட்டிய மயில்கண் வேஷ்டி.
“வாங்கோ தாத்தா.. பாட்டி இப்பதான் காப்பி கலந்துட்டுவரேன்னு உள்ள போனாள் நீங்க வரேள்.”

“அம்மா எப்படியிருக்கா? தோப்பனார்? சின்னவன் கோயம்புத்தூர்ல தானே படிக்கிறான்”

“அம்மாப்பால்லாம் நல்லா இருக்கா. BE பண்றான். ஏரோநாட்டிக்ஸ்.”

”ஏறோவோ கிறோவோ. படிச்சு நல்லா இருந்தா சரி. எங்களமாதிரி மணியடிச்சுண்டு தட்டப்பாத்துட்டு இருக்கிறதுக்கு.. உன் கல்யாணப்பேச்சு எந்த நிலமையில இருக்கு?”

“எல்லாம் முடிவாயிடுத்து. பொண்ணு அம்பாசமுத்ரம்தான். ராமானுஜ அய்யங்கார் பேத்திதான் பேசியிருக்கா. பத்திரிக்கை குடுக்கத்தான் நானே வந்தேன்”

” ஓ! பெரிய மனுசன் நீரே வந்தீரோ? உங்காத்து சின்னவர் உங்கப்பன் என்ன பண்றான்? வழி மறந்துட்டனோ?”

விஷம். நாக்கெல்லாம். உடம்பெல்லாம். மனசெல்லாம். எரிச்சலைக்காட்டமுடியாது.

“அவர் கல்யாண வேலையா அலைஞ்சுண்டுருக்கார். அவரே வர்றேன்னார். நாந்தான், நீங்க வேலையப் பாருங்கோ. தாத்தாவப் பாத்து ரொம்ப நாளாச்சு. நானே பாத்து பத்ரிக்கை குடுத்து சேவிச்சுண்டு வர்றேன்ன்னு வம்படியா வாங்கிட்டு வந்தேன்”

“அதானே? நம்மாத்து புள்ளைங்களுக்கு மட்டு மரியாதைன்றது என்ன இருக்கு? வேலையிடத்துல பெரியவாளக் கூட பேர்சொல்லித்தான் கூப்டுவீங்கண்ணு கிச்சா கூட சொன்னான்.”

பேச்சை வளர்க்கவும் கூடாது. நிறுத்தவும் முடியாது.
‘அந்தாத்துக்குப் போயிருந்தேன். கண்ணந்தாத்தா உங்கள சேவிச்சதா சொல்லச்சொன்னார்” குரலைத் தாழ்த்திச் சொன்னேன்.

தாத்தா அடுக்களை பக்கம் எட்டிப்பார்த்துவிட்டு திரும்பினார்.
“எப்படியிருக்கா எல்லாம்?இந்தா பத்து வீடு தள்ளியிருக்கா.. உம்பாட்டி பண்ண கூத்துல அடிபட்டாக்கூடா ஏன்னு கேட்கமுடியாதுண்ணா ஆகிப்போச்சு. கூடப்பொறந்த தம்பியை விலக்கிறதுக்கு கல்லாண்ணா ஆகிப்போனா உம்பாட்டி?”

இத்தனை முறை கேட்டு கிட்டத்தட்ட மனதில் ஊறிப்போன கதையை திரும்பவும் சொல்லப்போகிறார். இந்த பாழாய்ப்போன காப்பி சீக்கிரம் வந்து தொலைத்தால் தேவலை.

“கண்ணந்தான் என்ன பண்ணுவான் பாவம். கிச்சாக்கு பூணூல் போட்றதுக்காக எல்லாம் வரிஞ்சிட்டு நின்னோம். அந்தா இந்தான்னு எங்கல்யாணம், கண்ணன் கல்யாணம், ரெங்கு கல்யாணம்னு கதை சுத்திண்ட்டு இருந்துது. கண்ணன் விதி, வாய்விட்டு எங்கக்கா சொர்ண லட்சுமி. நீ கருப்பிதான ரெங்கு.. 60 குடுக்கலைன்னா தாலி கட்டமாட்டேனுட்டார் உங்காத்துக்காரர்னு வெளையாட்டாதான் சொன்னான். ரெங்கு பயித்தியக்காரி பொசுக்குன்னு போய் தொங்கிட்டள். நாராயண விளையாட்டு. , லெச்சு அன்னிக்கு நின்ன நிலைய அதுக்குமுன்னாடியும் யாரும் பாக்கல.. அதுக்கப்புறமும் யாரும் பாக்கல.. கண்ணனப்புடிச்சு உலுப்பு உலுப்புன்னு உலுப்பிட்டா. அவணும் என்ன பண்ணுவான். ரெங்கு கெடக்குறா லட்சுமி மடியில. இவன் கண்ணுல தாரைதாரையா உட்டுண்டு.. மன்னிச்சுடுக்கா மன்னிச்சுடு ரெங்குன்னு பினாத்துறான். ஒவ்வொருத்தரையா விழுந்து சேவிக்கிறான். ரெங்கு ஆத்துக்காரர் கூட பதறிட்டார். இவன்னா… கத்துறா அந்தக்கத்து கத்துறா. அவன் வீட்டொழிஞ்சு போனாத்தான் ரங்குவ மடியிறக்குவன்ன்னு அடம். யாராச்சும் கேட்கமுடியுமோ? கோவவந்தா தேவின்னா அவ. சூர்ணமும் மடிசாரும்

60களின் திரையொன்று விரிந்து பார்த்த படத்தையே மறுபடி பார்ப்பதுபோல் அந்தக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பாட்டி காப்பி கொண்டுவந்துவிட்டாள்
0

”என்ன பேசிண்டிருக்கேள் தாத்தனும் பேரனும்?”

சிவந்த கண்களுடன், கையில் டபராசெட் காப்பியுடன் பாட்டி வந்தாள். தூக்கக்கலக்கம் இன்னும் போகாதுபோல் திடீர் களைப்பு. கனத்த உடம்பில்லையா.. வயது வேறு. திடீர் சோர்வுகள்.

”இவன் கல்யாணம் உறுதியாகிடுச்சுடுடி.. அம்பாசமுத்திரம் ராமானுஜம் இருக்காணோல்யோ?”

“யார்ரு?”

“அதாண்டி.. உன் புள்ளாண்டானோட ஷட்டகர் தெந்திருப்பேரில இருக்காரே? அவரோட சித்தப்பா புள்ளை. உன் பேத்தி ரெங்கு சடங்குக்குக்கூட வந்திருந்தானேடீ? அவன் மக.”

எனக்கு ஒரு நிமிசம் தலை சுற்றியது. வரப்போகும் சகதர்மினி பல கிலோமீட்டர் தூரத்துச் சொந்த வழி முறைப்பெண் என்பதுமட்டும் குத்துமதிப்பாக புரிந்தது.அந்த வகையில் சந்தோசம்.
பாட்டி முகத்தில் களைப்பு நீங்கி கண்கள் பளீரிட்டது.

“அட கல்யாண மாப்பிள்ளையா நாரயண கிருபை நாராயண கிருபை.. அதான் இந்தப்பக்கம் காத்தடிக்குது. இல்லைன்னா இந்த குழா போட்ட பிராமணனாவது பெரியவளாத்தேடி வர்றதாவது…”

மையமாக சிரித்து வைத்தேன்.

“வெக்கப்பட்றதெல்லாம் அப்புறம் பண்ணலாம். கண்ண பரமாத்மா வர்றாணோல்யோ?”

எனக்கும் தாத்தாவும் ஒரு சேர தூக்கிவாரிப்போட்டது. பகைக்குப் பிறகு அவர் பெயரை பாட்டி உச்சரித்தே குடும்பத்தில் யாரும் பார்த்ததில்லை. நாங்கள் சொன்னால் கூட வெறித்தாற்போல் பார்ப்பவள். ‘அந்த வீடு’ ‘ பெரிய அழி வீட்டுப்பிராமணன்’ ‘கொலைகாரன்’ ‘கட்டேல போறவன்’ இதுதான் பாட்டி சொல்லி நான்,தம்பி,அம்மா, அப்பா எல்லாரும் கேட்டது.

”ஹ்ம்ம்.. வர்றேன்னு சொல்லியிருக்கார்.. நீங்க சொன்னா…”

” நான் என்னடா சொல்றது.. அவாஅவா சொந்தம் அவாவாளுக்கு. வரட்டுமே.. வர்றவாள ஏந்தடுக்கணும்..”

பாட்டி காப்பி போட வழக்கத்தைவிட அதிக நேரம் எடுத்துக்கொண்டதின் காரணம் மெல்ல துலங்கத்தொடங்கியது.

”எப்டியிருக்கா எல்லாம்?”

“ நல்லா இருக்கா பாட்டி. உங்களத்தான் கேட்டுக்கேட்டு மாஞ்சார் தாத்தா. சேவிச்சதா சொல்லச்சொன்னார். உங்க மூணு பேர் சின்னவயசெல்லாம் சொல்லி கண்ணு கலங்கிட்டார் தெரியுமோ? நீங்கதான் வளத்தேளாமே?”

பாட்டி தலைதிருப்பி தூரத்தில் வாசலை வெறித்தாள். வாசலில் செவலை நாயொன்று போய்க்கொண்டிருந்தது. கருப்பும் சிவப்புமாய் குட்டிகள் தாயின் நடைக்கு ஈடுகொடுத்து ஓடிக்கொண்டே மடியைக் கவ்வ குதியலுடன் போய்க்கொண்டிருந்தன.

“எங்கம்மா போனப்போ எனக்கு பதினாலு வயசு. அவனுக்கு பத்து இருக்கும். ரெங்கு நாலோ அஞ்சோ. எந்தோப்பனார் மடப்பள்ளி தபசி. ஆத்துக்கு தூங்குறதுக்குதான் வருவார். இதுகளா.. ரெண்டும் அசமஞ்சங்கள். 10 நிமிசம் கண்ணசந்தா மூக்கொழுகிட்டே யார்வீட்டுக்காது போய்டும்கள். கட்டி இழுத்து கழுவிவிட்டு துடைச்சு.. புள்ளைளா பாத்துட்டேன்.”

பாட்டியின் கண்கள் பளபளத்தது.

”எனக்கு இவஞ்செல்லம். இவனுக்கு அவ. அவளா.. அடங்கப்பிடாரி.. வார்த்தை சொன்னா ஜலம் காவேரியா கொட்டிடும். இந்த பெரியமனுஷன் அவள எதுக்கு திட்டுறேக்கான்னு என்னண்ட சண்டைக்கு வருவன். நாக்கெல்லாம் ஆதிஷேசனே வந்து படுத்தாப்புலதான். என்னையே என்ன வார்த்தையெல்லாம் கேட்றுக்கான். தாயில்லாப்புள்ளையாச்சேன்னு நானும் லேசுபாசா விட்டுட்டேன். கடங்காரி.. அப்பவே கேட்றுந்தா, ரெங்கு போய்ருப்பாளா?”

நானும் தாத்தாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். கதை முழுவதுமாய் மாறும் அதிர்ச்சி அவர் கண்ணிலும்

” வளர்த்த மார் எரிஞ்சுதுடா… இவன வெளியப்போன்னு சொன்னேந்தான். அதுக்காக வரவே கூடாதுன்னா சொன்னேன்?”

“இல்லபாட்டி.. கிச்சா மாமா கல்யாணத்தப்ப கூட..”

“என்ன சொன்னேன்? விருப்பம் இருந்தா வர்றட்டும்னுதானே சொன்னேன்? எங்காத்து பிராமணனக்கூட அனுப்பிச்சிருந்தேனே? அவனுக்கென்ன அவ்ளோ வீம்பு… நான் போய் வெத்தல பாக்கு வச்சு சேவிச்சாதான் வருவாராமா? தாய்மாமன் – அத்தைன்னு கிச்சாக்கு யார் இருக்கா அவாள விட்டா ? நலுங்குசுத்ததுக்கெல்லாம் அவாளே வரலாமோல்யோ உருத்து இருக்குண்ணு நெஞ்ச நிமித்துனா யார் கேட்கமுடியும்ன்றேன்”

லேசாக சிரித்துத் தொலைத்தேன். பாட்டி பார்த்துவிட்டாள்.

“சிரிக்கிறயா.. கிழவிக்கு வீம்புன்னா? அவனுக்கு அவ்ளோ வீம்புனா மடி ஆச்சாரம் பாக்காம தூக்கித் திரிஞ்ச எனக்கு எவ்ளோ இருக்கும். காலம் போன கடைசியில தோண்றதுடா. இந்த உடம்பத் தூக்கிண்டு போய், கண்ணனாத்து திண்ணையில சாத்தி ஒரு சொம்பு ஜலம் கேட்டு வாங்கிப்புடணும்னு… ரெங்குவும் எல்லாத்தையும் நாராயண காலடியிலிருந்து பாத்துண்டுதானே இருக்கிறா.. அவளா பாத்து செய்யட்டும்.”

”எங்கல்யாணத்துக்கு ரெண்டு பேரும் சேர்ந்து என்னை ஆசிர்வதிக்கணும் பாட்டி”

“யாரு அவனா.. என்கூடையா.. நானோ ஆத்துக்காரரோ முன்வாசலுக்கு வந்தா பொறவாசலுக்கு ஓடுவான்.. பாக்கலாம். நாராயணன் எந்தலையில என்ன எழுதியிருக்கான்னு…”

தெருவிளக்குகள் எரியத் தொடங்கின. அழிக்கதவின் கோடுகள் எங்கள் எல்லார் மீதும் விழுந்தது.

”அப்போ பாட்டி… நான் வரட்டுமா? நாழியாயிடுத்து… அம்மாப்பா கூட இன்னொரு நாள் பத்திரிக்கையோட வந்து சேவிக்கிறேன்.”

”ஷேமமா இருடாப்பா ஷேமமா இரு. பொண்கொழந்தேள பெத்துக்கோ. பாசம் வைக்குங்கள். நல்லது கெட்டதுக்கு ரெண்டு சொட்டு கண்ணீர் விட, சபை நிறைய பூ வைக்க பொண்கொழந்தேள்தான் சரி. எல்லாத்துக்கும் இடிச்சபுளி மாதிரி திருட்டு முழி முழிக்கிற உன்ன மாதிரியே தடியன் வந்துடப்போறான். எல்லாத்துக்குமேல, நம்மாத்துக்கு வர்ற பெண் கொழந்தேள்ளாம் ரங்குதாண்டா… ரங்க நாயகின்னு பேர் வை. “

“பாட்டி கல்யாணப்பத்திரிக்கை கொடுக்க வந்தா பொண்ணுக்கு பேர் வைக்கிறேளே பாட்டி.. சரி பையன் பொறந்தா என்ன பண்றதாம்? ரங்க நாயகன்ன்னு வச்சிடலாமா?”

”பெரியவா சொன்னா வெடுக்குன்னு பேசு. ஆதிஷேஷண்டா நாக்கு. அத அடக்கு. கொட்டுன விஷத்த வருஷக்கணக்கா அள்ள முடியாத எங்க கதையெல்லாம் எதுக்கு சொல்றோம்னு நினைக்கிற.. ஆதிஷேஷன நீங்களாவது அடக்கி வைக்கணும்னுதான். பத்திரமா ஆத்துக்குப் போய்ச் சேரு..”

திரும்பி நடந்தேன்.. கதவைத் திறக்கும் போது பாட்டி கூப்பிட்டாள்.

“ராமா”

“சொல்லுங்கோ”

“பையன்னா வாசுதேவன்னு பேர் வை. கண்ணன்னு கூப்டு முத்தங்கொஞ்சிக்கலாம்பாரு”

பவுர்ணமி போலிருக்கிறது. குழல் விளக்குடன் நிலவும் சேர்ந்து தெருவெல்லாம் வெளிச்சமாகக்கிடந்தது.

O

(அலுவலகத்தில் நடந்த ஒரு சிறுகதைப்போட்டிக்கு, ஜூலை -12 ல் எழுதியது. வழக்கம்போல வெற்றிபெறவில்லை என்பது தனிக்கதை)

This e-mail and any files transmitted with it are for the sole use of the intended recipient(s) and may contain confidential and privileged information. If you are not the intended recipient(s), please reply to the sender and destroy all copies of the original message. Any unauthorized review, use, disclosure, dissemination, forwarding, printing or copying of this email, and/or any action taken in reliance on the contents of this e-mail is strictly prohibited and may be unlawful.