சாவித்துவாரத்தின் வழியாக‌
ஒருவருக்கொருவர் பிரிவினை அறிவித்துக்கொள்ளும்பொழுது

விலகிச் செல்லும் தொடர்வண்டியை
காற்றுப்பந்தினை முழுங்கியபடி கையசைக்கும்பொழுது

ஒரு பயணத்தின்
நடு வழியில் கையசைத்து
இறங்கும்போது

நீண்ட‌ இடைவெளிக்குப்பின்
ஒரு நீ
நீங்க‌ளாக மாறியிருக்கும்பொழுது

புகைப்படத்தில் உடைந்த கண்ணாடிச் சில்லு
அறுக்கிறது

பெரும் கனவை
மிச்சமின்றி.
0

அந்த மரத்தில்
எப்போதாவது

அந்த பழைய குருவி
வந்தமரும்

இப்போது அது
அதே மரமில்லை.

அந்தக் குருவி அமர்வதுமில்லை.

0

படுக்கையிலிருந்து சில அடி தூரத்தில்
மிதந்து கொண்டிருப்பதாக‌
ஒரு கனவு உண்டு

பாம்புகளுடன் கைகுலுக்கி
விளையாடும் கனவு இன்னொரு நாளைக்கு

மெழுகுவர்த்தியை அறுப்பதுபோல‌
கேக் வெட்டுவது போல‌
தெளிவுடன்
பிரியத்துக்குரியவளின் கழுத்தை அறுப்பது போன்ற‌
கனவு
எப்போதாவ‌து வ‌ரும்பொழுது

க‌ன‌வென்றே தெரிவ‌தில்லை.

0

காகித‌ங்க‌ளைப் ப‌ற‌க்க‌விடுவ‌து
கிழித்து முக‌த்தில் அடிப்ப‌து
த‌ரையில் குத்துவ‌து
முக‌த்தைத் திருப்பிக் கொள்வ‌து
க‌ல்லெறிவ‌து

என் தேர்வுக‌ளில் இல்லை

என் அக‌ங்கார‌ம்
புன்ன‌கைத்துப் பேசிக்கொண்டிருப்ப‌து

எதையும் தொடாம‌ல்
யாரோ போல‌.

oOo

பிகு: க‌விதை தொகுப்பினை இப்பொழுது PDF ஆக‌ த‌ர‌விற‌க்கிக்கொள்ள‌லாம்.