அதி மழைப்பொழுதில் குடைக்குள்
ஒண்டியிருந்த நினைவுகள் உண்டா உங்களுக்கு?

பூக்கள் மிதக்கும் வெளியில்
தொண்டை அடைக்க‌
இனி எனைச் சந்திக்க முயற்சிக்கவேண்டாமென‌
கேட்டுக்கொள்ளும் பெண் உண்டா

இறந்தாலும் வந்து பார்க்கமாட்டேன்
என்ற சொற்களை
வெறும் ஊடல் குற்றச்சாட்டென‌
தவறாக நினைத்திருந்திருக்கிறீர்களா
எப்போதாவது?
அதுவரை வெளிப்படுத்தப்பட்ட‌
ரகசியங்களின் நிலைகுறித்து
சிந்தித்திருக்கிறீர்களா
ஒரு சந்திப்பு முடிந்து திரும்பும்போது

உறைந்த விழிகளில்
வைத்திருக்கிறேன் இத்தனையும்

கண்களால் சிரிக்க
கற்றுக்கொடுக்க முயற்சிப்பவர்களே
கொஞ்சம் மனந்திருந்துங்கள்.

o

நின்னுக்குத்தி மாடுகளின்
கொம்பாசையில்
தார்ப்பாய்ச்சிய‌ கால்க‌ளின்
த‌சைத்துணுக்குக‌ள் ஆடுகின்ற‌ன‌

ஒதுங்கிய‌ ப‌ழ‌ம்வீர‌ன்
எல்லா விளையாட்டுக‌ளையும்
புன்ன‌கையுட‌ன் பார்த்துக்கொண்டிருக்கிறான்

வ‌டுக்க‌ள் த‌ட‌வும் விர‌ல்க‌ளில்
குருதி மிச்ச‌ங்க‌ள் க‌ழுவ‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌

வெறும் அமைதி என‌ச்
சொல்வீர் கேளீர்

மெள‌ன‌ம் அனுப‌வ‌ங்க‌ளின்
வ‌டு.